Monday, 25 May 2015

அன்புள்ள அப்பா - செண்பகவல்லி

இலை 1
அப்பாவுடன் பழங்காநத்தத்தில் வாழ்ந்த காலம் பற்றி எழுதுகிறேன்.

ஐந்து வயதிருக்கும்போதே அம்மாவுடன் சேர்ந்து வாசல் தெளிப்பது, கோலம் போடுவது போன்ற வேலைகளைச் செய்தது ஞாபகமிருக்கிறது. அப்பா நான் போடும் கோலத்தைப் பார்த்து, 'விஜி போட்டா measurement எடுத்தது மாதிரி போடும்' என்று சொல்வார்கள்.

பின்னர் என்னை எத்தனையோ முறை "அடிக்கடி முகம் கழுவும்மா" என்று கூறுவார்கள். அதன் அருமை அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது அதே வார்த்தையை நான் பலருக்குக் கூறுகிறேன்.

காலை எழுந்தவுடன் ஆசனம் செய்யச் சொல்வார்கள். "முகத்தில் எப்பொழுதும் கடுகடுப்பு இருக்கக் கூடாது, சிரித்த முகமாகவே இருக்க வேண்டும்" என்று அடிக்கடி கூறுவார்கள்.

பழங்காநத்தத்திற்கு தாத்தா வந்தால், அப்பா இரவு தாத்தாவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள். நின்று கொண்டே பேசுவார்கள். தாத்தா அவர்கள் "உட்காருப்பா", "உட்காருப்பா" என்று பலமுறை சொன்னவுடன் சிறிய ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்து பேசுவார்கள்.

நான் அஞ்சாம்கிளாஸ் படிக்கும்போது கோடைவிடுமுறையில் பசளைக்குப் போகவேண்டும் என்று பிடிவாதம். நன்றாகப் புயல் அடித்துக் கொண்டிருக்கிறது(1964 தனுஷ்கோடியை விழுங்கிய புயல்). அத்தனையும் மீறி என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பா PSS  ஆபிஸிலிருந்து வரும்போதே ஜீப்பில் வந்தார்கள். பின்னர் என்னையும் சுலோசனா அத்தாச்சியையும் ஜீப்பில் ஏற்றி, பசளைக்குப் போகும் பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விட்டார்கள்.
அங்கு போனால் பெரிய அத்தை என்னையும் சுலோசனா அத்தாச்சியையும் கட்டிப்பிடித்துக்கொண்டு, "கடைசியிலே பிறந்ததுனு இரண்டு பேரையும் இந்தப் புயலில் அனுப்பிவிட்டிருக்காங்க" என்று கேட்டார்கள்.

என்னை என் அப்பா நன்றாக உருவாக்க வேண்டுமென்று எத்தனை முயற்சிகள் - "music class", "drawing class" பின்னர் "type-writing class".

ஆறாவது படிக்கும் போதே சுவாமி பாட்டுகள் (கனகதாரா ஸ்தோத்ரம்,  கந்த சஷ்டி, கோளறு பதிகம், திருப்புகழ், திருவருட்பா, சுப்ரபாதம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகம், திருப்பாவை, திருவெம்பாவை) அத்தனையும் மனப்பாடம் செய்ய வைத்தார்கள்.

ஒவ்வொரு கார்த்திகைக்கும் அப்பாவின் கையைப்பிடித்துக் கொண்டு திருப்பரங்குன்றத்திற்கு செல்வேன். ஒருமுறை பெரிய கார்த்திகையன்று இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்த போதே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அப்பா என்னிடம் கூறுகிறார்கள் - "முருகன் நம்மை சோதிக்கிறான்", மழையிலும் நடந்து வருகிறோமா இல்லையா என்று". இப்படி ஒவ்வொரு விதத்திலும் பக்தி உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்.

அப்பாவிற்கு சாப்பாட்டில் பிடித்தது என்று அதிகமாகக் கிடையாது. "நல்ல இட்லி", "நல்ல பில்டர் காபி", இவை இரண்டும் அதிகமாக விரும்புவது.

ஆனால் அப்பா அடிக்கடி கூறும் வார்த்தை "நாக்கிற்கு அடிமையாகக் கூடாது. அடிமையானால் வாழ்க்கையில் முன்னேற முடியாது" என்று.

பின்னர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் "ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" என்று.

எப்போதும் வீட்டில் உபயோகிக்கும் தலையணை உறை தூய வெண்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். நல்ல coffee powder regularஆக வாங்கிக் கொடுப்பது, வீட்டில் ஒவ்வொரு பொருளையும் எடுத்த இடத்தில் வைக்கவேண்டும், தான் செலவழிக்கும் செலவிற்கு எப்பொழுதும் கணக்கை எழுதி வைப்பது. இப்படிப்பட்ட அப்பாவின் பழக்கவழக்கங்களை யாராலும் மறக்க இயலாது.

எத்தனை கல்யாணங்கள் அந்த பழங்காநத்தம் வீட்டில் நடந்திருக்கிறது. அத்தனையும் அப்பா அவர்கள் யோசனையின்படி கோடை விடுமுறை சமயம் நடக்கும். லீவு நாட்கள் நன்றாகக் கழியும். (நன்றாக enjoy பண்ணுவோம்)

பின்னர் சேலத்தில் அப்பாவுடன் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கிறோம். அங்கிருக்கும் போது காலையில் ஐந்து மணிக்குக் குழாயில் தண்ணீர் வரும், அதைப் பிடிப்பதற்காக, 3 மணிக்கு எழுந்து திரி ஸ்டவ்வில் வெந்நீர் போட்டு வைத்துக் கொண்டு, அந்நேரத்திலேயே எழுப்பி "எந்திருச்சு குளிம்மா" என்று கூறுவார்கள். அப்படி மூன்று மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு  பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தவுடன் வரும் "சுகமான தூக்கம் இருக்கிறதே" அதற்கு ஈடு இணை எதுவுமில்லை.

பின்னர் சேலத்திலிருந்து நாகமலைப் புதுக்கோட்டை.

NGO colonyயில் இடம் அமைந்து, வீடு கட்டியது, ஒரு தெய்வீக வரப்பிரசாதம். காசு வேணுமென்றால் அண்ணன் கொடுத்திருப்பார்கள். அந்த வீடு அமைவதற்குள் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது கூடவே இருந்து பார்த்த எனக்குத்தான் நன்றாகத் தெரியும்.

வியாழக்கிழமை காலையிலிருந்தே வீட்டை க்ளீன் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு ஜன்னல் கம்பியையும் துடைத்து, வீடு முழுவதும் கழுவி, வெள்ளிக்கிழமை காலையில் வீட்டைப் பார்க்கும் போது "தபோவனம்" போன்று இருக்கும். அதற்குத் தோதாக அம்மாவின் வேலை. வீட்டைக் கட்டும் போது பார்த்துப் பார்த்து செய்த வேலைகள் எத்தனை.


"இந்த வீட்டுல சுதர்ஸன சக்கரம் வைத்துள்ளது. அதனால் எந்தத் தீய சக்தியும் அண்டாது" என்று பலமுறை கூறியிருக்கிறார்கள்.

வீடு கட்டிய புதிதில் ஒவ்வொரு பூச்செடியாக வைத்து அழகு பார்த்தார்கள். வாழைமரம் உண்டாக்கினார்கள். மாலை வேளைகளில் அப்பாவுடன் உட்கார்ந்து அந்தப் படிகளிலே கழித்த காலத்தை மறக்க இயலவில்லை.

எத்தனை விஷயங்கள் பேசியிருப்போம்.

(இன்னும் பேசுவோம்)

No comments:

Post a Comment