Wednesday, 20 May 2015

விழுது - தீபா / தனலட்சுமி

செல்வ நிலையம் தாத்தா.
பெரிய மகன்,பெரிய அண்ணன்,பெரிய மாமா ,பெரியப்பா,பெரிய தாத்தா என்ற எல்லா உறவுகளுக்கும் சொந்தக்காரரர் எங்கள் செல்வநிலையம் தாத்தா. பெரிய என்ற அடைமொழி தாத்தாவுடன் இணைந்தது மூத்தவர் என்ற அடையாளத்தால் மட்டும் அல்ல. உண்மையில் தாத்தா பெரிய மனிதர் என்பதால்.
நீ என்ன புது விஷயத்தை சொல்ல வருகிறாய் என்ற வினா எழும்.அதற்க்கு பதில் - யார் பெரியவன் ?, என்று ஒரு ஹிந்தி பாடல் சிறுவர்களுக்காக வரும், அதில் வயதால் மூத்தவர், பெரியவரா,பணத்தால் உயர்ந்தவர் பெரியவரா, மாட மாளிகை கட்டியவர் பெரியவரா என கேள்வி எழுப்பி கடைசியில் பரோபகார குணம் படைத்த ,மனம்,செயல்.பொருள் உதவி சுயநலம் இன்றி யார் செய்கிறாரோ ,மனித நேயம் மிகுந்தவரே பெரியவர் என்று போதனை மொழியாக வரும். அந்த மொழிக்கு உதாரணம் பெரிய தாத்தா.
உறவுகளுக்கு மதிப்பும் மரியாதையும் தந்து அரவணைத்து செல்வார்கள். அவர்களுடைய தேவை யாருக்கு வேண்டுமோ அங்கே நிற்பார்கள்.மாமாக்கள்,மற்றும் அம்மா மார்களை கேட்டால் சொல்வார்கள் அவர்களின் பெரியமாமாவை பற்றி .தன தங்கை மக்களை தம் மக்கள் போல் வளர்த்து உயர்த்தியதில் அவர்களுக்கு ஈடே கிடையாது.அவர்கள் வருமானத்தில் தம் குடும்பத்தை மட்டும் கவனித்து இருந்தால் தம் பிள்ளைகளுக்கு மட்டும் இன்னும் சிறப்பாய் செய்திருக்க முடியும்.அதெல்லாம் தாண்டி அவர்களுக்கு தம் சகோதர,சகோதரிகளின் மக்களையும் தம் மக்களாய் பார்க்கும் பக்குவமும் பண்பும் இருந்தது.இது நாம் நம் மூத்த தலைமுறையிடம் இருந்து கற்க வேண்டிய பாடம்.
எந்த இடத்தில் தன்னுடைய அவசியமோ அங்கே தாத்த காட்டாயம் இருப்பார்கள். காட்டூரில் எங்கள் அப்பா மறைந்த பின்னர்,ஊரை காலி செய்து கிளம்பும் நேரம் தாத்தா என் அம்மாவிற்கு (தந்தை என்று ஒருவர் தனக்கு இருந்திருந்தால் என்ற நினைவு வராமல்) தந்தை ஸ்தானத்தில் இருந்து தோள் கொடுத்தார்கள். அதே போல் மதுரையில் நாங்கள் குடியேறிய பின்பும் முதல் ஆளாய் வந்து நின்று துணை நின்றார்கள்.வாரம் ஒருமுறை கட்டாயம் தாத்தாவின் வரவு இருக்கும்.அம்மாச்சியும்,தாத்தாவும் உட்கார்ந்து பேசுவார்கள். தன மாமாவை பார்த்தவுடன் என் அம்மா புது டிகாசன் போட்டு சுவையான காபி டவரா-செட் இல் பவ்யமாய் கொண்டு வந்து தருவார்கள்.
நறவம் நாறிய நன் நறுஞ் சாந்திலும்
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே- நிறைய நீரனிந்தவர் எதிர் செல்ல எமனும் அஞ்சுவான். என்பது நாவுக்கரசர் கூற்று. அதன் படி நிமிர்ந்த நடையுடன் நெற்றி நிறைய நீர் அணிந்து தேஜஸான முகத்துடன், கண்களில் ஒளி பொருந்தி தாத்தா வந்து நிற்கையில் தன்னால் positive energy நம்முள் வந்து நிறையும்.
எங்களுக்கு முதல் அறிமுகம் சுபா தாத்தா என்று தான். மதுரைக்கு வந்த பின்னே செல்வநிலையம் தாத்தா ஆனார்கள்.வானதி அத்தாச்சி கல்யாண சமயம் திருச்சி வந்த தாத்தா அப்பத்தாவை என் அப்பா காட்டூர் அழைத்து வந்து மிகவும் சந்தோசப்பட்டார்கள். அவர்களுடன் ஜெயஸ்ரீயும்,நானும் மதுரை வந்து ஒரு மாத பொழுது செல்வநிலையத்தில் களித்தோம். தாத்தா வீடு கூட்ட சொல்லி தருவார்கள் நல்ல படுக்க போட்டு அந்த பேருக்கு மாரை தள்ள வேண்டும் என்று செய்முறை விளக்கத்துடன், அதுக செய்யட்டும் விடுங்க என்று அப்பத்தா குரல் கொடுப்பார்கள்.பழைய புகைப்படங்கள் காட்டி இலக்கம் சொல்வார்கள் தாத்தாவோடு உட்கார்ந்து ஆஷ் -சீட்டு விளையாடுவோம். தாத்தா மூக்கு கண்ணாடியில் சீட்டை பார்த்து அதற்க்கு தக்கபடி விளையாடி இருக்கிறோம். எனக்கும் கூட இங்கிலீஷ் சொல்லி தர முயன்றார்கள் ஆனால் நான் முசுட்டு குணத்துடன் கோபித்து கொண்டிருப்பேன்.
சமண மலைக்கு தாத்தாவுடன் ஒருமுறை நடை பயணம் சென்றோம், அப்போது அங்கே அதிக ஆள் நடமாட்டமே இருக்காது எங்களுக்கு முன்னே ஒரு இளைஞன் நடந்து செல்ல அவனை அழைத்து, நீ இன்னார் மகன் தானே என்று விளித்து இப்படி தனியா வராத தம்பி ,நாலணா காசுக்காக அடித்து போடும் இடம் இது என்று எச்சரிக்கை செய்தார்கள்.
தாத்தாவின் பலதரப்பட்ட முகங்கள் உண்டு நம்மால் முழுமையாய் சொல்ல இயலுமோ தெரியவில்லை.தினமும் எட்டு மணி அடித்தவுடன் என் வீட்டுக்காரர் வயிற்றில் பசி மணி அடித்துவிடும் ,அதுவும் தாத்தாவின் வளர்ப்பினால் இன்றுவரை எங்கள் உடன் வரும் பழக்கம்.மருதாணி தன் வண்ணங்களை நம்மில் பதித்து செல்வதை போல் பலரிடம் தாத்தாவின் நினைவுகள் பதிவுகளாக இருக்கும் .இந்த பதிவு முடிவல்ல ஆரம்பம் எங்கள் வீட்டில் தாத்தாவின் சுவடுகள் அழுத்தமாய் பதிந்திருக்கிறது அடுத்தடுத்து வரும்.

 

 

  • Subhasree Sundaram ஆம் அக்கா.. கீதாம்மா மற்றும் உங்கள் அனைவர் நிலை குறித்த கவலைகள் குறித்தும், பிச்சைபிள்ளை சாவடியில் வீடு பார்த்திருப்பதாகவும் தாத்தாவின் கையெழுத்தில் கடிதம் படித்த நினைவு வருகிறது. 
    சீட்டு விளையாட்டின் பாரம்பரியம் முதலில் அப்பாவிடம் இருந்தும், பிறகு தாத்தாவிடமிருந்து 304, 504 என விரிந்தது.
  • Rajesh Balasubramanian B காட்டுர்ல என்ன செய்றது தெரியாம இருந்த போது மாமா கடவுள் மாதிரி வந்தாங்க......கீதா அம்மா சொல்லிய வார்த்தை
    23 hrs · Unlike · 3
  • Shanmuganathan Arunachalam கடவுள் மாமா..!

No comments:

Post a Comment