Wednesday, 10 June 2015

விழுது - ரவீந்திரன்

இலை 1

நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை
இந்த பாடலை கேட்கும் தோறும் மனம் இதை அசை போடும் போதும் எந்தையை எம் சிந்தை நிறை தந்தையை மனதார நினைந்து விழிஎல்லாம் நீரால் நிறைந்து உள்ளம் கசிந்து உயிர் உருகா நாள் எல்லாம் நான் பிறவா நாளே!
ஐயா துரை மகனே என அருமையுடன் அழைத்து மெய்யாய் வாழ்த்து சொன்ன மேதகு அருணைசெல்வி இதனினும் பெரிய பேறுஎனக்கு இனி வேறுண்டோ!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் தாரக மந்திரத்தை சிரம் மேற்கொண்டு வாழ்ந்த தனயனாம் என் தந்தை செய்திட்ட செயல்களெல்லாம் தாய் தந்தையின் கட்டளைகளை நிறை வேற்றிய விஷயங்களே என்பது நிதர்சனமாய் நான் கண்ட உண்மை.
என் பிறப்புக்கு முன் என் அப்பாவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை என் மக்கள் இருவரும் எழுதி வருவதால் அதனை தவிர்த்து பெருமாள் கோவில் வீட்டிலிருந்து இப்பெருங்கதை தொடங்குகிறேன் (சுபா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்)
என் பள்ளிப்பருவம் தொடங்குவதன் முன்னரே பெருமாள் கோவில் பின்புற வீட்டில் வாசம் (6ம் நம்பர் வீடு அதே வரிசையில் PSS OFFICE ) பெருமாள் கோவில் யானை தினசரி வீட்டின் முன்னே பீடு நடை போட நான் குஞ்சரம் ஊர்ந்த கோமகனாய் சவாரி செய்யும் பாக்கியம் அப்பாவின் செல்வாக்குக்கு சாட்சியம். ஒளிந்து விளையாட பெருமாள் கோவில் வேடிக்கை பார்க்க பஸ்கள் என ஓடியது நாட்கள் தாத்தாவின் 60 வயது நிறைவின் போது பெருமாள் கோவில் உச்சியில் ஏறி மதுரை மாநகரின் பேரழகை ரசித்த காட்சி பால பருவத்தின் பதிவான பேரானந்தம் .
பசளைக்கு செல்ல வீட்டு வாசலிலேயே பஸ் ஏறி செல்லும் முக்கியத்துவம் . பின்னர் பசளையில் இருந்து திரும்பும்போது பஸ்சில் முன் வரிசை (டிரைவர் சீட்டின் தொடர்ச்சியான) சீட்டில் பயணம் கனக்கப் பிள்ளை வீட்டு டிக்கெட் என்று புறப்பட்ட இடத்திலிருந்தே (கமுதி )காலியாக வரும் ( அந்த பாவம் தான் இப்போது பஸ்களில் சீட் கிடைக்கமாட்டேன் என்கிறது )ராதா அத்தாச்சியின் சடங்கிற்கு பசளைக்கு செல்ல எனக்கு அம்மை போட்டிருந்ததற்காக எனக்கு ஒரு தனி சீட்டும் அதனை சுற்றி வேப்பிலையை.சுவர் போல்கட்டி அம்மாவுடன் பயணம் செய்தேன் இதெல்லாம் அப்பாவின் செல்வாக்கினை சொல்லவே!
பள்ளி வாழ்க்கை தாத்தாவின் ஆணைப்படி அம்மை நகரிலே ஆரம்பமானது அரிகேன் விளக்கொளியில் சின்ன அத்தையின் வழி காட்டுதலில் அட்சர அப்பியாசம் ஆரம்பம் பள்ளி செல்லும் நேரம் தவிர நாளின் எல்லா நேரமும் தாத்தாவின் தர்பாரில்தான் நாள் தவறாமல் காலையில் பூஜை (அட சாமி கும்பிடறதுதான்) மாலை படிப்பு முடிந்தவுடன் மீண்டும் அம்மையப்பன் ஆனவருக்கு அரகரோகரா இரவு உணவுக்கு பின் எங்காவது வீட்டுக்கு வெளியில் (அந்த ஊரின் மாபெரும் கடை வீதியில் )பார்த்தால்அன்று பூஜை(இது உண்மையான அடி தான்)நிச்சயம் ஆனால் அன்பு அப்பத்தாவின் அரவணைப்பு அதனை மறக்க செய்யும்
குருகுல வாசத்தின் பின் உள்ள கதை தொடரும்

இலை 2

பாண்டித்துரையின் பதிவுகள் - பகிர்வு 2
ஒரு வருட குருகுல வாசத்தின் பின் மதுரை தெற்கு மாசி வீதி தலையாரி குருநாதன் கோவில் பள்ளியில் 2ம் வகுப்பு. அதே பள்ளியின் 7ம் வகுப்பில் பாமா அத்தாச்சி.அண்ணன் Madura collegeல் B com .செல்ல அக்கா எனக்கு பதிலாக அம்மை நகரில் . நன்மை தருவார் கோவிலின் எதிரே வீடு. காலையில் குளித்தவுடன் அப்பா சாமி கும்பிட அழைத்துச் செல்வது எதிரில் இருந்த கோவிலுக்கு தான். அங்கிருந்த போது அப்பாவுடன் சாந்தாராமின் Dho ankhen bhara haath(தமிழில் பல்லாண்டு வாழ்க ) படம் பார்த்தது ஞாபகம் உள்ளது ஒரே வருடத்தில் மீண்டும் பள்ளி மாற்றம்
தி கிரேட் பழ்ங்கானததம் சகாப்தம் ஆரம்பம் 3 மற்றும் 4 ம் வகுப்பு மட்டும் அங்கே 2ம் வகுப்பு இறுதித் தேர்வின் கடைசி மூன்று பரீட்சைகள் புதிய வீட்டிலிருந்து காலையில் (புதிதாக Sincere agency ல் வேலைக்கு சேர்ந்திருந்த) அண்ணனுடன் சைக்கிளில் வந்து மாலையில் அருணாச்சல மாமாவுடன் திரும்புவதாக ஏற்பாடு கடைசி பரிட்சை முடிந்த அன்று சீக்கிரமே, மாமாவின் வருகையின் முன்பே பள்ளி முடிந்ததால் தனியாக நடந்தே புறப்பட்டு விட்டேன்.பள்ளி வாயிலின் இடப்புறம் பார்த்தால், எனக்கு தெரிந்த பெருமாள் கோவில் அதனை சுற்றி நடந்து வந்தால் திருப்பரங்குன்றம் ரோடு வீட்டிலிருந்து வரும் பாதையை 2 நாளாக கவனிதிருந்ததால் எவ்வித பயமுமின்றி ராஜ நடை போட்டேன் ( புதிய வானம் புதிய பூமி ல ல ல லா அட.. அந்த பாட்டு அப்போது வரவில்லை.. நடடா.. ராஜா நடடா...என எதோ ஒன்று) பின்னாளில் பழனிக்கு நடப்பதற்கு அன்றே ஒத்திகை ஆரம்பம் போலும்
Office முடித்து பள்ளிக்கு வந்த மாமாவுக்கு ஒரே அதிர்ச்சி வழி நெடுகிலும் பயத்தோடு தேடி வந்தவரின் கண்ணில் அகப்பட்டேன் ஆண்டாள்புரம் -வசந்த நகர் சாலையின் வளைவு அருகே சுமார் 4 கி மீ தனி ஆவர்தனத்தின் பின் ஒரு முத்தாய்ப்பு . தேடி அலைந்த எரிச்சலும் கண்டேன் ரவியை என்ற உணர்விலும் "பெரிய இவன் மாதிரி" என்னும் அவர்களின் வழக்கமான வசனத்துடன் அழைத்து போனார்கள்.
(அருணாச்சல மாமா என்றாலே ஒரு மூத்த சகோதரர் என்னும் நினைப்பும் பிரியத்தோடு பாசமும் கூடிய வெளிவேஷம் சிறிதும் இல்லாத குணமும் இன்றளவும் மனதை விட்டு நீங்காத இனிய நினைவுகள் இனி எப்போது இப்படி ஒரு பிரியத்தை அனுபவிக்க போகிறேன்!!)
அப்பாவிடம் இது பற்றி மாமா நிறைய எதிபார்ப்புடன் குறை கூறிய போது எதிர்பாரா திருப்பம் இப்படிதான் தைரியமாக இருக்கணும் தான் போய் வரும் பாதையில் கவனமாக இருந்ததால்தான் சரியாக வர முடிந்தது என பாராட்டினார்கள். சித்திரை பொருள் காட்சிக்கு அழைத்து சென்று விட்டு பார்த்து முடிக்கும் நேரத்தில் நீ தனியாக புறப்பட்டு வீட்டுக்கு யாரிடமும் கேட்காமல் பஸ் ஏறி வரவேண்டும் என்பார்கள்.
மூன்றாம் நான்காம் வகுப்புகள் பழங்காநத்ததில் முடித்து 5ம் வகுப்பு M C Highschool ல் உள்ள டவுன் primary ஸ்கூலில் சேர்த்து டவுன் பஸ் சீசன் பாஸ் எடுத்து கொடுத்து அதன் மாதாந்திர புதுப்பிப்பு செய்ய தனியாக முடக்கு சாலை சென்று Southern Road ways ல் வேலையை முடித்து திரும்ப வேண்டும் . இவ்விதம் ஒருமுறை போய் வரும் போது அச்சம்பத்து செல்லையா மாமா (சதாசிவம் நவநீதனின் அப்பா )பார்த்து விட்டு இப்படித்தான் ஒரு பத்து வயது பாலகனை தனியே அனுப்புவதா என உரிமையோடு அப்பாவிடம் கூறினார். இத்தகைய சோதனைகளால் எந்த ஒரு தெரியாத இடமாக இருந்தாலும் தனியே செல்லக் கூடிய திறனை வளர்க்க வழி காட்டிய ஆசான் அவர்களே.
1961-62ல் தாத்தாவுக்கு உடல் நலம் குன்றி அம்மை நகரில் வைத்தியம் எடுத்துக் கொண்டு இருந்த போது ஒவ்வொரு சனிக்கிழமையும் தாத்தாவுக்கான எதாவது மருந்துடன் தனியாக அம்மை நகர் சென்று மறுநாள் அங்கு தம்பி முருகனுடன் ஆனந்தமாய் கழித்து விட்டு திங்கள் காலை 05:30க்கு ஷண்முகப்பா கூட்டிவந்து சோமசுந்தர விலாஸ் பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள் காலை 07:00 மணி அளவில் மதுரை வந்து வீடு சென்று மீண்டும் 09:00 மணிக்கு பள்ளிக்கு திரும்ப வேண்டும் இந்த நிகழ்வு கிட்டத்தட்ட 5 மாதங்கள் தொடர்து நடந்தது இதனால் மதுரை கொடைரோடு சாலையில் பயணிக்கும்போது கண்களை மூடிக்கொண்டு கோரிப்பாளையம், பாத்திமா கல்லூரி, சமயநல்லூர்.டபேதார் சந்தை,தனிசியம் பிரிவு,பாண்டிய ராஜபுரம், சர்க்கரை ஆலை என எந்த இடத்தை பஸ் கடக்கிறது என அனுமானிப்பது ஒரு சுவையான பொழுது போக்கு. இப்போதய 4 வழிச்சாலையில் இந்த அனுபவத்திற்கு வாய்ப்பே இல்லை எல்லா இடமும் ஒரே மாதிரி இருப்பதால்! இவ்வனுபவம் இன்றளவும் மதுரை சென்னை பாதையில் எந்த ஊர் எத்தனாவது கி மீ என்று சொல்லும் திறனை எனக்குள் ஊட்டியதுஅப்பாவின் வழிகாட்டுதலே.
பழங்காநத்தத்து வாழ்க்கையின் (கிட்டத்தட்ட 1957 முதல் 1971 வரை உள்ள) தகவல்களை அடுத்த பகிர்வில் காண்க!

இலை 3

பாண்டித்துரையின் பதிவுகள் - பகிர்வு 3
பழங்காநத்தம் வாழ்க்கையின் ஆரம்ப ஒரு வருடம் பூபதி விலாஸ் மற்றும் பட்டம் வீடு ஆகியவற்றின் நடுவே இருந்த (DEPUTY COLLECTOR) வீட்டில் இது ஒரு மிகப் பெரிய தோட்டத்துடன் கூடிய ஒரு பங்களா போன்ற வீடு இதனை ஒட்டியிருந்த ஒரு அவுட் ஹவுஸ்சில் நாங்களும் பிரதான வீட்டில் தாத்தா அப்பத்தா, பெரிய அத்தையும் அருணாச்சல மாமாவும்,சுலோசனாவுடன் மற்றும் மாணிக்க மாமா சின்ன அத்தை குழந்தைகளுடன் இது தவிர பசளையில் இருந்து விடுமுறைக்கு வருவோர் என ஒரு பெருங்குழு ஒவ்வொரு வேளை உணவு அருந்தும் போதும் கல்யாணக்களை கட்டும். இவ்விதம் அதிக எண்ணிக்கையில் நபர்கள் காலை உணவு சாப்பிட்ட போது எனக்கு மட்டும் கொடுக்க மறந்த சோகமும் (எனக்கு தான் சோகம்) இங்கே நடந்தது. இந்த வீட்டின் வாடகை ரூ 55/(1957-58ல் இது அப்பாவின் மாதாந்திர வருமானத்தில் சாத்தியப்படாத ஒன்று)
தாத்தா அவர்களின் சொல்படியே இந்த கூட்டுக குடும்ப நிர்வாகத்தை தன சக்திக்கு மீறிய அளவில் நடத்த நேர்ந்தது என்றும் இதனாலேயே முதன் முதலாக தான் கடன் பட நேர்ந்ததாகவும் அப்பா பின்னாளில் கூறக் கேட்டிருக்கிறேன் அச்சமயம் மாமா இருவருக்கும் குறைந்த வருவாயே இருந்த நிலைசிரமத்திற்கு ஒரு காரணம் தந்தை சொன்ன சொல்லை எந்த நிலையிலும் மீறக்கூடாது என அப்பா தன் உயிரினும் மேலாக கடைப்பிடித்த கொள்கையை எடுத்து இயம்பவே இந்த சூழலை விவரித்தேன் இந்த பங்களாவில் தான் ராதா அத்தாச்சியின் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் நடந்தேறின. ஏழெட்டு மாட்டு வண்டிகளில் மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண்ணை நிச்சயம் செய்ய வந்ததும் அந்த பங்களாவைச் சுற்றி வண்டிகளும் மாடுகளும் நிறைந்திருந்த காட்சி கள்ளழகர் திருவிழாவை இன்றும் நினைவூட்டும்.
இவ்வீட்டின் ஒரு வருடத்திற்கும் குறைவான வாசத்தின் பின்னரே நம் உறவு வட்டத்தில் பிரபலமான கதிர்வேல் பிள்ளை வீடு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு நடைபெறும் அகன்று விரிந்த களத்தினை நோக்கி அமைந்த ஒரேமாதிரி தோற்றமுடைய இரண்டு வீடுகள்.ஒரு வீட்டின் வாடகை ரூ 38- அடுத்தது ரூ 40- முன் போலவே நாங்கள் ஒரு வீட்டிலும் அருணாசலம் மாமா அத்தை ,மாணிக்கம் மாமா உடல் நலம் குன்றிய நிலையில் சின்ன அத்தை கீதா ஜோதியுடன் இவ்வீட்டில் ஆரம்ப காலங்கள் மிகுந்த மன வேதனையுடன் கழிந்தன. எத்தனையோ சோதனை களையும் தளராத மன திடத்துடனும் தெய்வ நம்பிக்கையுடனும் கடந்து வந்த நம் தாததா கண் கலங்கி நின்றதையும் நான் காண நேர்ந்ததும் இங்கே நிகழ்ந்தது இத்தகைய மன சங்கடங்களுக்கு நடுவில் பார்த்திபனூர் கோவில் மறு நிர்மாண பணிகளை மேற்கொண்டதும் இச்சூழலில்தான்.ஆனாலும் அத்தகைய அனுபவங்களே இன்று நான் சந்திக்கும் மன இறுக்கங்களை நிச்சயமாக கடந்து நல்ல வழியைக் காண்போம் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.


இன்று ஒரு தகவல் 


Ravindran Aiyadurai அப்பா, தாத்தாவோடு இந்தப் புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரியுமா? 
மேலும் மலேயா மற்றும் ரங்கூனில் தாத்தாவோடு இருந்தவர்கள் குறித்து ஏதேனும் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை சொல்லுங்களேன்

Ravindran Aiyadurai அப்பாவுடன் இருப்பவரில் குள்ளமாக உள்ளவரைப் பற்றிக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.இவர்களனைவரும் மதிச்சியத்தில் நேரு யுவஜன வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக அப்பாவுடன் இருந்தவர்கள்.இதில் சமீபத்தில் காலமான ஐ.மாயாண்டி பாரதியும் ஒருவர்.
அப்பாவின் நண்பர் குழாமில் குறிப்பிடத்தக்கவர் "ஜெய்ஹிந்த் "ஷண்முகம் பிள்ளை.தியாகிகள் உதவிப் பணம் பெற முயற்சி எடுக்கக் காரணியாக இருந்த இவரைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்
Ravindran Aiyadurai மேலும் தொடர்கிறேன்.
தியாகி ஜெய்ஹிந்த் ஷண்முகனார் அப்பாவுடன் மலேயாவிலிருந்த போதிருந்துதான் நட்பாகி இருக்கக்கூடும் இருவரும் ஒருவரையொருவர் அண்ணே என அழைக்குமளவில் நட்புறவாகப் பழகியவர்கள்.யுத்தம் தீவிரமாக இருந்த போது ரப்பர் தோட்டங்களில் தஞ்சமடைந்திருந்த நாட
்களில் இவர்களைத் தஞ்சம் அடைந்தார் ஒருவர் 
மலேயப் பூர்வகுடியைச் சேர்ந்த உயிர் பிழைக்கக் கூட வழி இல்லாத நிலை மேலும் வயிறு உப்பிய நிலையில் எந்த வேலை கொடுத்தாலும் செய்து ,கொடுத்த உணவை உண்டு உய்யும் நிலையில் வந்து இவ்விருவர் உடன் ஐக்கியமாகி இந்தியாவுக்கும் குடி பெயர்த்து அப்பாவின் உதவியால் P S S லும் workshop ல் பணி புரிந்து,பின் மணம் முடித்து எங்களின் பிரியமான குப்பு சாமி அண்ணணாய் வாழ்ந்த வரும் அப்பா அவர்கள் ஆதரவில் தழைத்தோங்கியவரே( இவர் பின் நாளில் NGO colony யில் இருந்த (ஷண்முகனாதன் அறிந்த)மீனாக்ஷி முருகரத்தினம் என்பவரின் உறவில் மணம் முடித்தவர் என்பது பிற்சேர்க்கைத் தகவல்)

No comments:

Post a Comment