Thursday, 14 May 2015

சற்குரு - தாத்தா - விழுது சுபஸ்ரீ

  இலை 1

சற்குரு - தாத்தா - 1

இது ஒரு personal பதிவு.  உன்னைப் பற்றிய கதை, உன்னை பாதித்த கதை  ஊருக்கு எதற்கு எனக் கேட்போருக்கு - இதிகாசம் முதல் புராணம் வரை ஊராரைப் பற்றிய கதைகள் தானே.. அதுதானே ஆவலைத் தூண்டுகிறது.
அதனால் சற்றே என் சுயம் பொறுத்துப் படிக்க முயலுங்கள். என் கதையல்ல இது. ஒரு வகையில் என் கதை தான் - நான் நானாக இருக்க விதை விழுந்த கதை, என் வேர்கள் நிலம் பழகிய நினைவுகள், நிலம் கீறி முகம் தூக்கிய தளிர், ஓங்கி உயர்ந்த ஆலமரம் நோக்கி அண்ணாந்து வியந்த நினைவுகள். நானும் ஒருநாள் நிழல் தருவேன் என விழுது நன்றியால் நினைவு கூறும் கதை.

என்னை கரம் பற்றி நடை பழக்கிய ஆசானின் நினைவுகள், ஒரு நாளின் ஒவ்வொரு மணித்துளியும் நிறைந்திருக்கும் உணர்வு குறித்தும். தாத்தா அய்யாதுரை பிள்ளை - அவரது 99ஆவது பிறந்த நாளில்.

"பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப்
பிரிவுஇலா அடியார்க்குயென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னை"

போற்றாதே ஒரு நாளும் போவதில்லையே...

இருள் பிரியாத அதிகாலை.
வாசல் புதிய நாளை வரவேற்க அணிகொள்ளும் நேரம். வாசல் என்பது நான்கு tiles  சதுரம் அல்ல அப்போது. வேப்பமர இலைகள் நிரம்பிய வாசல், தெரு தாண்டி எதிர் மனை வரை, நிலத்தடி நீர் வழங்கும் குழாயடி வரை தாத்தாவின் மனது போலவே விசாலமான வாசல். விடிகாலை 5.30 மணிக்கே எழுந்து என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டால் 3 மணிக்கு எழுந்தேன் என பதில் வரும். 

கதிரவனின் முதற்கதிர் முத்தமிடும் காலை.
ஐம்புலனையும் குளிர்விக்கும் தாத்தாவின் கிணற்று நீர் குளியல். விபூதி மணமும் சந்தன மணமும் கலந்த பூஜை அறையில், அப்பத்தா கையால் மெருகேறி பொன்னென சுடர் எரியும் விளக்கொளியில் "தீப மங்கள ஜோதீ நமோ நமோ" உடன் மணி அடிக்க வரும் ஆவல். (இன்றைய "நமோ" எல்லாம் அப்போது தெரியாது) 

வேப்பமரத்துக் காகமும் அணிலும் குரல் எழுப்பும் காலை. மனம் மயக்கும் மணம் கமழும் filter coffee  - அதற்கு உரிய முதல் மரியாதையோடு பலகை போட்டு அருந்தும் நேரம். Coffee முடித்தவுடன்  வரப்போகும்  காலை நடைக்காக எதிர்பார்ப்புடன் அருகில் அமர்ந்திருக்கும் நேரம். நடை இல்லாத நாட்களில் ஒரு மணி நேரம் யோகாசனம் கட்டாயம். காலை நடை குறைந்த பட்சம் 1 மணி நேரம். உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய் விடிவதை பார்த்துக் கொண்டும் ஆகாயத்தின் அடியில் இருக்கும் அனைத்து விஷயங்கள்  குறித்து விவாதித்துக் கொண்டும் - சிறு பிள்ளையென சிறு பிள்ளைக்கதைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் என்னென்னவோ  பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு களம் அந்த நடை நேரம். விபூதி மணக்கும் நீண்ட சுட்டு விரல் பற்றி நடந்த பொழுதுகளும் உரையாடல்களும் இன்று வரை வாழ்வை விரல் பற்றி அழைத்துச் செல்கிறது.

வேப்ப இலைகளோ, வேப்பம்பூக்களோ, பழங்களோ மாதத்திற்கு ஏற்றார் போல் சிமெண்ட் வாசல் முழுக்க இரைந்து கிடக்கும் நண்பகல். 7 குருவிகள் கூட்டமாக வரும் "தவிட்டுக் குருவி" , கத்தும் போது "சுப்ரீ சுப்ரீ" என்று  உன்னை கூப்பிடுகிறது என தாத்தா சொன்னதால்  அந்தக் குருவிகள் மேல் ஒரு தனிப் பிரியம். வீடு முழுக்க ஒரு மௌனம். சமையல் அறையில் அப்பத்தா சமைக்கும் மணம்.  தாத்தாவிடம் மாலை எந்த பக்கம் walking போகலாம்? நாளை எங்கு போகலாம்? அல்லது INA வில் நீங்கள் இருந்த கதை சொல்லுங்கள் (100வது முறையாக இருக்கும்), என்ன புத்தகம் படிக்கிறீர்கள்? "பேராயிரம் பரவி" என்றால் அந்த 1000 பெயர்கள் என்னென்ன? என்று வண்டு போல துளைத்து எடுக்கும் நேரம்.

சிலசமயம் தாத்தா, "எங்கே வாசலில் ஒரு இலை (பூ/பழம்) கூட இல்லாமல் சுத்தம் செய் பார்க்கலாம்" என நாய் வாலை நிமிர்த்தும் வேலை கொடுப்பதுண்டு.  பல நாட்கள் Hindu paper தலைப்பு செய்திகள் அனைத்தும், அல்லது எதாவது ஒரு முக்கியமான article படிக்கச் சொல்வார்கள். மூலாதாரம், சுவாதிஷ்டானம் தொடங்கி அனைத்துச் சக்கரங்கள் குறித்தும் சில நாட்கள் பாடம் நடக்கும். இப்போதும் முதுகு வளைந்து உட்கார்ந்தால் அசரீரியாய் கேட்கும்  நிமிர்ந்து உட்காரச் சொல்லும் தாத்தாவின் குரல்.அல்லது 27 நட்சத்திரங்களும் அதன் ராசிகளும் என்னென்ன என astrology குறித்து சிறு உரையாடல். "Mao tse tung", "Zhou  en lai" எல்லாம் சரித்திர பாடம் படிக்கும் முன்னரே பரிச்சயமானது இந்த நேரத்தில்தான்.

ஊர் முழுதும் அடங்கிக்  கிடக்கும் பிற்பகல். ஒரு மணி நேர ஓய்வு. மீண்டும் மாலை வருவதற்குள் ஒரு முறை வீடு முழுக்க பெருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறை வீடு பெருக்கப்படும் அப்போது. முன் மாலை நேரம் வேப்பமரக் காற்றோடு சுகமாகத் தாலாட்டும். முகத்தில்  வெண்ணீறு துலங்க தாத்தா திண்ணைக்கு வந்து அமரும் நேரம்.அவ்வப்போது தெருவில் செல்வோர் தாத்தாவிடம் முகமன் கூறியோ, பிள்ளைகள்  குறித்தோ சில நிமிடங்கள் நின்று பேசி விட்டு போவார்கள். அவர் யார் எங்கிருக்கிறார் என்பது குறித்தோ அவர் பிள்ளைகள் வாங்கிய நல்ல marks அல்லது பரிசுகள் குறித்தோ சில வார்த்தைகள். தாத்தாவின் நண்பர்கள் முக்கியமாக தாடித் தாத்தா(hindi pandit ) சில நாட்கள் வந்து பேசிக் கொண்டிருப்பார்.

மனதின் பல அடுக்குகளில் ஒளிஏற்றிய காரணத்தாலோ என்னவோ தாத்தா என்றால் காலைப் பொழுது தான் மனதுள் விரிகிறது.
தாத்தாவுடனான இரவுகள் 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு முடிந்து விடும். திருவாசகம் மெல்ல முணுமுணுத்துக் கொண்டு, விசிறியால் விசிறிக்கொண்டு, வேண்டா வெறுப்பாய் நாட்டு வாழைப் பழம் சாப்பிடுவதோடு முடியும் இரவுகள். பின்னர் பழமும் பிடித்துப் போனது வேறு கதை.

எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி
                               இருந்தாய், நீயே;
நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர்
                   விளக்கு ஆய் நின்றாய், நீயே;
பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச்
               சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!

இலை 2
 நானும் கல்கி படம் பார்த்து, தாத்தா தாத்தா என சொல்வேன் என்று அம்மா சொல்வார்கள்..

இலை 3
சற்குரு - தாத்தா - 2
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியைப் பாடுவது போல் எங்கு தொடங்குவது என்று திகைக்கிறது மனது.

நடை பயின்ற வயது நினைவிது - செல்வ நிலையத்தின் வாசல் மிதியடிக்குக் கீழே பதிந்த வெண்சங்கை வருடிக் கொண்டே இருக்கத் தூண்டும் வழவழப்பு, தரையின் முகம் காட்டும் பளபளப்பு, தாத்தா அமர்ந்த வெதுவெதுப்போடு இருக்கும் மரசிம்மாசனம். அந்த நாற்காலி தாத்தா மறைவுக்குப் பின் உயரம் குறைந்து விட்டதென்றே தோன்றும். அதில் அமர்ந்து கொண்டு தன் இரு பாதங்களிலும் ஏற்றி நிற்க வைத்து, 'ஏல பாண்டியா' என ஏற்றி இறக்கும் சந்தோஷம். காதை இழுத்து காது கத்துகிறது என விளையாடும் விளையாட்டு.. குழந்தையின் கனவில் தெய்வம் வருமெனக் கேட்டிருக்கிறோம். குழந்தைகளிடம் தாத்தாக்கள் உருவில் நேரில் வருமென நாமே உணர்ந்திருக்கிறோம்.

இடையறாது பேசும் வயதின், நினைவுகள் ஏராளம். அறிந்ததனைத்தும் அவர் அறிவித்ததெனும் போது எதை எழுதுவது, எதை விடுவது.K.B.சுந்தரம்பாள் போல என்ன என்ன என இடையறாத கேள்விகள். "தாத்தா, உங்கள் நெற்றியில் ஏன் மூன்று கோடுகள், அணிலுக்கு ராமர் போட்டது போல் யார் போட்டது உங்களுக்கு?" எனக் கேட்டதற்கு, சிரித்துவிட்டு "20 வயதிற்கு ஒன்று என கோடு வரும், 60 வயதுக்கு மேலாகிவிட்டது எனக்கு. அதனால் 3 கோடுகள்" என்று தாத்தா சொன்னதும் நமக்கு எப்போது 20 வயதாகி முதல் கோடு விழும் என ஆசையாயிருந்தது. குழிந்திருக்கும் தோள்பட்டையைப் பார்த்துத் திகைத்து "ஐயோ பள்ளம் விழுந்திருக்கே! எனக்கெல்லாம் இல்லையே? ஏன் குழி விழுந்தது?" என்றதற்கு "உன்ன மாதிரி நிறைய சின்னப் பிள்ளைகள் தோளில் ஆடினதால் குழி விழுந்தது" என்றதும், "உங்க கை எல்லாம் அணில் மாதிரி ரொம்ப softஆ இருக்கே, பஞ்சுத் தாத்தா" எனக் கொஞ்சியதற்கு, முதுகில் சாய்த்துக்கொண்டு "பெத்தாரு பெத்தாரு பேரு வைக்க வந்தாரு" எனப் பாடியதன் பொருள் அப்போது புரியவில்லை..

அந்த வயது நினைவாக பாட்டியும்(தாத்தாவின் அம்மா) பாட்டியின் மென்மையான, பச்சை குத்திய கைகளும் நினைவு வருகிறது. செல்வநிலையத்தின் பின்னால் நின்ற வேம்பும், அதில் கட்டியிருந்த தேன்கூடும், அம்மரத்தில் வழிந்த பிசினைத் தொட்டுக்கொண்டே பின்னால் விறகடுப்பில் பாட்டி போட்டிருந்த வெந்நீரைப் பார்த்துக்கொண்டிருந்தது நினைவு வருகிறது. 

லா.ச.ரா சொல்வது போல் "எதுவுமே மறப்பதில்லை; எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பாத்திருப்பவையே"

கொஞ்சல் மட்டுமல்ல,  அதட்டலும், அடிப்பதாக தாத்தா விசிறியைத் தூக்கியதுமான சம்பவங்களும் உண்டு. (நான்தான் பல காரணங்கள் கொடுப்பது வழக்கமாயிற்றே - சாப்பிடாமல் படுத்துவது, எதற்காவது 'மக்குக் கழுதை' எனப்பெயர் பெற பிடிவாதம் பிடிப்பதென) அடிக்க வந்தாலும், 'தாத்தா' என அழுது தாத்தா கால்களையே கட்டிக்கொள்வது என் வழக்கமாம். பிறகு எங்கு அடிப்பது. இதை அம்மா நினைவு கூறும் போதெல்லாம் தோன்றுவது:
தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ??

இலை - 4
சற்குரு - தாத்தா - 3

வைகறையில் விழிப்பதெல்லாம் படு ஜோராய் நடக்கும் தாத்தாவோடு இருக்கும் வரை. ஈரோடு சென்றது செல்லம் கொஞ்ச ஆரம்பித்தால் அம்மா உபயோகப் படுத்தும் அஸ்திரம் தாத்தாவிடம் சொல்லவா என்பதுதான்.
சிறுமலரில் Petro missஇடம் சேர்த்து விட்டு, "மிஸ்ஸூ எங்க வீடு சர்ச் கிட்ட இருக்கு மிஸ்ஸூ.. என்னை வீட்டுல கொண்டுபோய் விட்டுருங்க" என அழுது அமர்க்களமாய் பள்ளி செல்ல மாட்டேன் என ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த வயது அது. ஈரோடு சென்றும் தொடர்ந்தது பள்ளி நுழையாப் போராட்டம். அப்போது ஒருநாள் அம்மா குளித்துக்கொண்டிருக்க தபால்காரர் கொடுத்த கடிதத்தைப் பார்த்துவிட்டு "அம்மா தாத்தாவிடமிருந்து letter" என்றதும், "எப்படித் தெரியும் உனக்கு தாத்தா கடிதம் என்று?" (பள்ளிக்கே போகவில்லையே) என அம்மா வினவ, inland letter இன் from addressஇல் ASA எனப் போட்டிருக்கே என பதில் சொன்னது நினைவிருக்கிறது. ABCD விட ASA நன்கு தெரியுமே.
விடுமுறைக்கு ஈரோட்டில் இருந்து மதுரைக்கு சிலசமயம், 'ஒரு பகல்நேர பாஸஞ்சர் வண்டியில்' வருவதுண்டு. ஆளில்லாமல் காலியாய் காவிரிக்கரையோரம் வரும், திருச்சி வந்து பின் பஸ்ஸில் வந்த நினைவு. இரவில் நாகமலைத் தெரு நாய்களுக்கு பயந்து கொண்டே அப்பாவோடு ஒட்டிக் கொண்டு செல்வநிலையம் நெருங்கும் போதே பட்டாம்பூச்சி பறக்கும் மனதில்.."பஸ்ஸில் வந்தீர்களா?" என தாத்தா என்னிடம் வினவ, நான் பெருமையாய் "trainஇல் வந்தோம், படுத்துக்கொண்டே" என சொல்ல, "உனக்கென்னம்மா? உங்க அப்பா உன்னை கூபேயில் அழைத்து வருவான்" என தாத்தா சொன்னார்கள். நாங்கள் வந்த பாஸஞ்சரைக் முதல் வகுப்புக் கூபே என எண்ணிய நாட்கள்.
விடுமுறைக்கு வந்துவிட்டால் தாத்தா, வீட்டு இளநீர் தயாராய் இறக்கி வைத்திருப்பார்கள். ஒரு வாகான கட்டையை வைத்துக் கொண்டு அரிவாளால் தாத்தா இளநீர் சீவும் இலாவகம். அதற்கென உரிய சொம்பில் இளநீர் வடித்து இளவழுக்கை சேர்த்துக் கொடுப்பார்கள். தேவன் கொடுத்த தேவாமிர்தம்..
சிலநாட்கள் ஒரு சிறு பேனாகத்தியைக் கைக்கொண்டு தென்னை ஓலையிலிருந்து நறுவிசாக ஈர்க்குகளைப் பிரித்து எடுத்து துடைப்பம் ஒரு கலைப் பொருளாய் உருவாகும். கிழித்த ஓலைகளை சிறு சிறு கட்டுகளாக '8' வடிவில் கட்டி உலர்த்துவார்கள் வெந்நீருக்கென. எரியப்போகும், எறியப்போகும் பொருட்களில் கூட ஒரு ஒழுங்கு.
உலர்த்தும் வேட்டி, துண்டுகளின் இரு நுனியும் கச்சிதமாய் சமஅளவாய், உதறி உலர்த்தும் நேர்த்தியிலேயே சுருக்கங்கள் ஏதுமின்றி..இன்று washing machine விட்டு சுருங்கிய சும்மாடாய்த் துணிகளைப் பார்க்கும் போது ஆதங்கப் படுவதுண்டு(படுவதோடு சரி). சிறு சிறு விஷயங்களே மனிதரின் பெரிய குணங்களை எடுத்துக் காட்டும் என்பதற்கிணங்க, மனதின் ஒழுங்கும், கட்டுப்பாடும், நேர்மையும் - கலைந்த கால்மிதியைப் பிரித்து நேராக்கிவிட்டே தாண்டுவது, படித்து முடித்த பின்னர் iron செய்தது போன்ற மடிப்புடன் இருக்கும் The Hindu பேப்பர், காலையில் வரும் திருவோடுகளுக்காக அலமாரியில் எப்போதும் தயாராய் வைத்திருக்கும் சில்லறைக் காசுகள், அலமாரிகளில் விரிக்கும் newspaperஇன் கச்சிதமான விரிப்பு (பின்னர் அருணாச்சலம் மாமாவிடம் இதைப் பார்த்திருக்கிறேன்), எனப்பல சிறுதுளிகளில் அந்த சூரிய ஒளி மின்னும்.

இலை 6

சற்குரு - தாத்தா - 4

தாத்தாவுடனான பயணங்களுக்கும், காலை மாலை நடைகளுக்கும் மேலும் சில பதிவுகள் தேவைப்படும். என் 14வயது வரைதான் தாத்தாவுடன் வாசம் எனினும், மனவாசம் உயிர் உள்ளளவும் .

மேலும் தாத்தாவுடன் இருந்த நாட்களில் பெரும்பகுதி பயணங்களே. நாங்கள்  இருந்த ஊர்களில் இருந்து புது ஊர்களுக்குக் குடிபெயர்தல் அனேகமாய் ஒவ்வொரு வருடமும் நடக்கும்( இல்லையெனில் நான் 11ஆம் வகுப்புக்குள் 10 பள்ளிகளில் படிக்க முடியுமா). அப்பா, புதிய வீட்டு விலாசத்தை வரைபடத்தோடு கடிதத்தில் அனுப்ப, ஓரிரு வாரத்திற்குள் தாத்தா வருவார்கள். இதுவும் பரம்பரை வியாதி என நினைக்கிறேன், புதிய இடங்களின் திசைகளும், திக்குகளும் கிரகித்தல், map வரைதல் -  பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

புதிய ஊரில் நகருலா ஆரம்பமாகும். படிக்கப் போகும் பள்ளி, கோவில்கள், மற்றும் ஊரின் முக்கியமான அலுவலகங்கள், பிறகு ஊரின் குறுக்கும் நெடுக்குமான பல வீதிகள் என நடை தினம் தினம் களைகட்டும்.

'தாராபுரம்' - தாத்தாவுக்கு மிகவும் பிடித்த ஊர். பின்னர் தாத்தாவின் சரித்திரத்தில் நிரந்தரமான இடமும் பெறப்போகும் இந்த எளிமையான ஊர். 1988ல் ஈரோட்டில் இருந்து அப்பாவின் அலுவல் மாற்றத்தால் குடியேறிய ஊர். கிராமிய மணம் முற்றிலும் அகலாத, கொங்கு தேசத்துக்கே உரிய அதிவெள்ளை சுண்ணம் பூசிய சுவர்களும், பசுஞ்சாணம் மெழுகிய தரைகளும்(mosaic  தரையும் தப்ப முடியாது சாணக்குளியலில் இருந்து) கொண்ட அழகிய அமராவதிக்கரை நகர். 

பழைய கால வீடு.  நான்கு புறமும் மாடிகள், அருகிலேயே முருகன் ஆலயம்,  என முதல் பார்வையிலேயே தாத்தாவுக்குப் பிடித்துவிட்டது. ஆதி காலத்து கருப்பு நிற toggle switch இருக்கும். 'அந்தக்காலத்தில் பெருமாள் கோவில் தெருவிலேயே இப்படி சுவிட்சுதான்' - இது அப்பத்தா..
வீட்டுக்கு எதிரே இருந்த radio telecommunication tower  ஓங்கி உலகளந்து நிற்கும். பார்க்கும்போதெல்லாம் 'Aim High, Aim the Highest' என அந்த tower சொல்வதாக தாத்தா சொல்வார்கள். தாத்தாவின் தாரக மந்திரம் இது. அன்றாட வாழ்வியலில் அகத் தூண்டுதல்களைக் (inspirations எளிதோ) கண்டு கொள்வது, வாழ்வை நேர்மறையாய் நடத்துவதற்கு மிகவும் முக்கியம் என இப்போது புரிகிறது. 

முனிசிபாலிட்டியின் சங்கு அதிகாலையில் ஓம் என ஓங்காரமிடும் - இதுவும் தாத்தாவின் பார்வையே. ஊரெங்கும் மரியாதை நிரம்பிய சொல்லாடல் -"ங்க"ஒவ்வொரு சொல்லிலும் இயைபுத் தொடராய் வரும் அனைவருக்கும். ("ஏனுங்கண்ணு உங்க வீட்டுக்கு ஒரம்பரை வந்திருக்காங்கலாட்டு இருக்குதுங்" போன்ற "ங்கத் தமிழ்" அங்கு புழங்கும் இனிய கொங்குத் தமிழ்.    புரியாதவர்கள் கொங்கு நாட்டுத் தமிழ் அகராதி பார்த்துக் கொள்ளவும்.)

ஊருக்குக் குடியேறியவுடன் ஓரிரு மாதங்கள் குடியிருந்த முதல் வீட்டுக்கு  அருகில் ஒரு பெரிய கமலைக் கிணறு (மீண்டும் refer தமிழ் அகராதி) இருந்தது. அந்த வீட்டுக்கு எதனாலோ தாத்தா வரவில்லை. வீடு மிகச் சிறியது - கிணறு வீட்டைப்போல் நான்கைந்து மடங்கு பெரியது. தான் வந்திருந்தால் அங்கு நீச்சல் அடித்திருக்கலாமே என தாத்தா சொல்ல, 'நீச்சல் தெரியுமா உங்களுக்கு?' எனக் கேட்டுவிட்டேன்!! அறியா வயதல்லவா.தெரியாமல் கேட்டுவிட்டேன்.  'தெரியுமாவா? அடப் பைத்தியக்காரப் பிள்ளையே' எனத் தாத்தா மிக வருத்தப்பட்டார்கள்.
அடுத்த முறை மதுரை சென்ற போது நாகமலையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் ஒரு கிணற்றில் நீச்சலடித்தும், மிதந்தும் காட்டினார்கள். "எப்படி!" என ஒரு சிரிப்போடு கரை ஏறினார்கள், பேத்தியின் அறியாமை நீக்கிய சிரிப்போடு.

வைக்கோல்போர் குவிந்த தெருக்களும், நெல் போரடிக்கும்(Bore அல்ல) களங்களும் பார்த்துக் கொண்டே நடக்கும் போது மலரும் நினைவுகளாய் கதை சொல்வார்கள். மதிச்சியமும், மலேயாவும், அம்மையம்பதியும், சிறுமலையும், பசளை  நகரும், பழங்காநத்தமும், மெதுவாய் என் மனதுக்குள் விரியத் தொடங்கியது தாத்தாவின் வார்த்தைகளில்.

பின்னோக்கிய நீரோட்டம் 
தாயினும் பரிந்த தாய்மாமா வீட்டில் இருந்து தாத்தா பள்ளி சென்ற நினைவுகள். தாத்தா, தாத்தாவுக்கு மிகவும் பிரியமான சின்ன மாமா (ஷண்முகம் தாத்தா), மைத்துனன் ஆகப் போகும் மாமன் மகன் (சிதம்பரம் தாத்தா) என மூவரும்  மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு பசளையில் இருந்து மானாமதுரையில் OVC High Schoolக்கு செல்வார்களாம். சின்னத் தாத்தா மிக அருமையாக வண்டி ஓட்டுவார்கள் என விவரிக்கத் தொடங்கும் போதே தாத்தா கண்களில் ஜல் ஜல் என வண்டி ஓடும். பள்ளி இடைவேளைகளில் மாட்டுக்கு வைக்கோல் போடும் பணி வேறு. தாத்தா சொல்லக் கேட்கும்பொழுதே ஆசையாக இருக்கும் நாமும் அந்த வண்டியில் போகவில்லையே என. அது புரிந்தது போல உடனே சொல்வார்கள். சாலை இப்போது இருப்பது போன்ற நல்ல தார் சாலை கிடையாது, கல்லும் கரடுமாக 'ணங்'கென்று வழியெல்லாம் தலையில் அடித்துக் கொண்டே வண்டியில் பயணம், அதுவும் உற்சாகமாகத் தானிருக்கும் என.

நடையில் தொடங்கிய கதை சில நாட்கள் வீடு வரை தொடரும், வீட்டில் இருக்கும்போது பசளைக்  கதை ஆரம்பித்து விட்டால் அப்பத்தாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடும். உலகையே ஆளும் சக்தியே ஆயினும் பிறந்தவீட்டுப் பெருமையில் மயங்காத மங்கையருண்டோ.  அதுவும்  தன் சித்தப்பூ குறித்த நினைவுகளில் திளைத்தால் மிக நல்ல "mood"இல் வந்து விடுவார்கள் அப்பத்தா. தெரிந்தேதான் பல முறை தாத்தா இந்தக் கதை சொன்னார்களோ!?

பசளையில் ஒரே அலமாரியின் மூன்று தட்டுகள் தாத்தாக்கள் மூவருக்கும் புத்தகங்கள் வைத்துக்கொள்ள இருக்குமாம். மேல் தட்டு சின்னத் தாத்தாவுக்கும், நடுத்தட்டு சிதம்பரம் தாத்தாவுக்கும், கீழ்த்தட்டு தாத்தாவுக்குமானது. மிக நேர்த்தியாக மேல் தட்டும் கீழ் தட்டும் இருக்குமாம், நடுத்தட்டு மட்டும் புத்தகங்கள் கலைந்து கிடக்க, கதவைத் திறந்தவுடன் புத்தகங்கள் கீழே கொட்டுமாம். அண்ணனைக் குறித்துக் கேட்டும் கேட்காதது போல அப்பத்தா கையில் இருக்கும் வேலையை கவனிப்பார்கள் :)
தாத்தாவுக்கும் அப்பத்தாவுக்குமான அந்த interactions எல்லாம் அப்போது புரியவில்லை :)

பின்னர் சின்னத் தாத்தா படிப்பு முடிந்து, சிதம்பரம் தாத்தாவுக்கும் சைக்கிள் வாங்கிய பின்னர், அம்மையநாயக்கனூரில் இருந்து தன்னுடைய சைக்கிளை பசளைக்குக்  கொண்டு வருவதற்கு தாத்தா, அம்மையநாயக்கனூரில் இருந்து மதுரைக்கும்,  மதுரையில் இருந்து பசளைக்கும் சைக்கிளை ஓட்டிக் கொண்டே வந்தார்களாம். இதைக் கேட்டபோதுஅந்த மலைக்க வைக்கும் சைக்கிள் பயணமும் தொலைவும்(ஏறத்தாழ 90கி.மீ ) புரியவில்லை எனக்கு. நானோ சைக்கிள் ஓட்ட பயந்து நாட்களைக் கடத்திக் கொண்டிருந்த காலம் அது. இப்போது சிந்தித்தால் அடேயப்பா என்று இருக்கிறது.

உழைப்புக்கும் வியர்வைக்கும் அஞ்சாத மேன்மக்கள்.
Aravindan Selvaraj சுபா சண்முகம் தாத்தா அதிகாலை குளிரில் சைக்கிளை எடுத்து கொண்டு பழ கடைக்கு செல்வதை பார்த்து இருக்கிறேன்.. எதற்காக இப்படி இந்த வயதில் பிரயத்தன பட வேண்டும் என்று நான் பலமுறை யோசித்தது உண்டு..பலனை எதிர்பார்க்காத கடமையை செய் என்கிற தாரக மந்திரமாக அவர்களது உழைப்பு.!. சிறந்த படிப்பினை.. அம்மை நகரில் இருந்து பசளைக்கு இரண்டு தாத்தாவும் வந்தது.. something amazing.. great people!
Subhasree Sundaram அத்தான், அம்மை நகரில் இருந்து பசளைக்கு சைக்கிள்-இல் வந்தது ASA தாத்தா.

  • Deepa Senbagam Pasalai பாசமலர்கள்


  • Jdevi Pandian Subhasree Sundaram pls tag whose in this photo


  • Subhasree SundaramJdevi Pandian cant tag a photo posted in comments..so adding comments.. கதவருகில் நிற்பது அப்பத்தா(சேதுரத்தினம்), கீழே நிற்பது அவர்கள் அண்ணன்(சிதம்பரம் பிள்ளை தாத்தா - சங்கப் புலவர்கள் போல, வாழ்ந்த ஊரின் பெயரால் அம்பத்தூர் தாத்தா என்றும் சொல்வோம். பெரி...See More


  • Deepa Senbagam சுபா,அருமையான அறிமுக உரை சிதம்பரம் தாத்தா அவர்களுக்கு சங்காலப் புலவர் போல எனும் போது அம்பத்தூர் தாத்தா என்பதையும் விட அவர்களின் புனை பெயர் பசளைகிழார் என்பது தான் சரி.


  • Deepa Senbagam சுபா ஒரு பதிவில் நீங்கள் திருபரங்குன்றம் தாத்தாவுடன் சென்றது, மலை ஏறியது குரங்கின் சேட்டை இதெல்லாம் பதியவும். தேவியும் நானும் இதை நேற்று நினைவு கூர்ந்தோம்.


  • Subhasree Sundaram ஆம் அக்கா அந்தப் பெயரில்(பசளைக்கிழார்) என்று தாத்தா எழுதவும் செய்திருக்கிறார்கள். நான் எழுதியது நாம் அழைக்கும் முறையை.. பின்னர் அவ்விதம் refer செய்தால் ஜெயதேவி அத்தாச்சி போன்றோருக்கு புரிவதற்காக, Who havent seen them..


  • Subhasree Sundaram திருப்பரங்குன்றம் - சிறு குறிப்பாய் comment செய்தேன் முதற்பதிவில். கட்டாயம் எழுதுகிறேன் 


  • Subhasree Sundaram தாத்தா பசளைக்கிழார் என்று எழுதுவது போல் மற்றொருவர் பசனைக்கிழார் என்று எழுதுவாராம் - முன்பு பாமா அம்மா சொன்ன தகவல்


  • Jdevi Pandian Subhasree Sundaram tks atthachi for introducing great peoples
    21 hrs · Like


  • Shanmuganathan Arunachalam சத்குருவின் ஒலிப்பதிவுகள்.. ஒளிப்பதிவாய் நெஞ்சில் விரிய.. எழுத்துக்களில் சித்திரமாய் தூரிகைகள் இயங்கி முப்பரிமாணத்தில் விரிவதைக் காண்கிறேன்... வயிறு முட்டக் குடித்திருக்கும் தமிழ்ப்பாலின் வளமை காண்கிறேன்
    19 hrs · Unlike · 1


  • Ravindran Aiyadurai பசனையல்ல சுபா,பனசைக் கிழார்(பரந்தாமன் அண்ணனின் தாய் வழி தாத்தா)
இலை 7
சற்குரு - தாத்தா - 5
பள்ளிப் பருவத்தில் விடுமுறைகள் மிகவும் விருப்பமானவை. பள்ளிநாட்களினும் அதிகமான கற்றலுக்குரியவை. ஒவ்வொரு தேர்வுக்கு முன்னரும் கச்சிதமாக திட்டமிடப்படும் - பரீட்சைக்கு மட்டுமல்ல.. ஊருக்கு என்று புறப்பாடு என. சகோதரியரைப் பார்க்கப் போகும் ஆவல் ஒருபுறம்; தாத்தாவுடன் கழிக்கப்போகும் நாட்களைக் குறித்த திட்டங்கள் ஒருபுறம்; அதனினும் மேலாக - தாத்தாவுடனான பயணத்தின் பரவசம். நினைவுகளில் சுகம்காணும் flashback தரும் பரவசமல்ல. அனுபவித்த கணமே அவ்வண்ணம்தான்.
பயணங்களில் எப்போதும் மனம் ஒரு விரைவையும் சீரான ஒழுங்கையும் அடைந்து விடுகிறது. படிப்பு, வேலைவாய்ப்புகள், தேச முன்னேற்றத் திட்டங்கள் தொடங்கி, வழியில் இருக்கும் ஊர்களின் வளங்கள் அல்லது இன்மை குறித்தும், அங்கு என்னென்ன செய்ய இயலும் என்பது குறித்தும் பேசிய திருநெல்வேலி-மதுரை நெடுஞ்சாலை, காற்றின் வெப்பத்தோடு நினைவுக்கு வருகிறது.
வீட்டில் பயணம் தொடங்கிய நொடியிலிருந்து, பரவசம் ஆரம்பம். பேருந்தில் முதல் இருக்கை, ஓட்டுநருக்கு இணையாக இடப்புறம் இருக்கும் இரட்டை இருக்கைதான் தாத்தாவுக்குப் பிரியமானது. அதற்காக ஒரு பேருந்தை விட்டுவிட்டு அடுத்ததில் ஏறியதும் உண்டு. பேருந்து என்றால் செயற்கைக் குளிரிலும், முழுவதும் திறக்கவியலாத மூச்சுமுட்டும் கருப்பு ஜன்னலும் கொண்ட இன்றைய சொகுசுப் பேருந்தல்ல. காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்ட அரசுப் பேருந்துகள். கடகட சத்தமும் சந்தமாய்த் தானிருந்தது.
பயணங்களில் தாத்தாவும் மிக உற்சாகமாகி விடுவதைக் கண்டிருக்கிறேன். ஒரு பயணத்தை என்றுமே ஆவலோடுதான் எதிர்நோக்குவார்கள். அரசாங்கம், சுதந்திரப் போராட்ட தியாகிகள் அதிகநாள் இருக்கப்போவதில்லை என்ற தைரியத்தில் அளித்த bus passஐத் தான் அதிகம் பயன்படுத்திவிட்டதாக சொல்வார்கள்.
பேருந்தில் ஏறி சில நிமிடங்களில் நடத்துநர் அணைத்து பயணச்சீட்டு/சில்லறை பரிவர்த்தனைகளை முடித்துக் கொண்டு, முன்னால் வந்து அமர்ந்ததும் தாத்தா மெதுவாக நடத்துநருடன் பேச்சைத் தொடங்குவார்கள்.
சிறிது பேச வாய்ப்புக் கிடைத்ததுமே, தன்னையும் தனது கருத்துக்களையுமே முன்வைத்து சக மனிதர்களுக்கு சங்கடமான மனநிலையைத் தோற்றுவிக்கும் பலரையும் இன்று நாம் காண்கிறோம். மென்மையான நல்லியல்புகள் கொண்ட மனிதர்கள் அரிதாகி, சுயசரிதமும் சுயவிளம்பரமுமே இன்றைய உரையாடல்களின், so-called கருத்துப் பரிமாற்றாங்களின் நிலை. அதனால் அடுத்த மனிதரிடம் பேசும் ஆர்வமும் குறைந்து வருகிறது.
இன்முகத்தோடு இயல்பான உரையாடல்களைத் தொடக்கி, அவர்கள் மெதுவாக தாத்தாவால் வசீகரிக்கப்பட்டு தன்மையாகப் பேச்சைத் தொடரத் தாமாக விழையும் வேதியியல் மாற்றத்தைப் பலமுறை அருகிருந்து கண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் ஓட்டுநரும் நடத்துநரும் தாத்தாவுடன் மிக நெருக்கமாகிவிடுவார்கள். வழியில் தேநீருக்காக நிறுத்துமிடத்தில் இன்னும் மனம் திறப்பார்கள்.
இதற்கு மிக முக்கியமான காரணியாக இன்று உணர்வது, அந்த உரையாடல்களின் உள்ளடக்கம். எதிரில் இருக்கும் மனிதர்மேல் உண்மையான அக்கறையோடு, அவர்களது பணியின் சிரமங்களையும், சிறப்பான தருணங்களையும், தொடும் தாத்தாவின் பேச்சு. அவர்களது அன்றாடங்களின் வலிகளை பயங்களை அறிந்து சில வழிகளையும் திறப்பார்கள். பேருந்து ஓட்டுவதில் என்ன சிறப்பான தருணங்கள் இருக்க முடியும் என யாரேனும் எண்ணினால், உங்களுக்கும் ஒரு மகத்தான சற்குருவும், குருவுடனான பயணங்களும் அமைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
எந்த வேலையும் உயர்வுதாழ்வில்லை என்பதும், ஊதியம் ஐந்திலக்க மந்திரமல்ல - ஈதலும் இசைபட வாழ்தலும் என வாழ்ந்து காட்டிய மகான், அனைவருக்கும் வாழ்வில் குழந்தைப் பருவத்தில் அமையட்டும். பதநீர் விற்பவரும் பூ விற்பவரும் நெருக்கமாகி விடும் ஆன்மாவின் 'கட்டிப்பிடி' வைத்தியம் அது. 
"கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த
பின்னர் கோவணமும் கூட வருமோ?"
பேருந்தை எங்கே நிறுத்தினேன். ஹாங்.. தேநீர் விடுதியில்...P.S.S Bus Companyஇன் அனுபவங்களோடு சேர்த்து மிக ஆத்மார்த்தமாக அணுகும் அந்த முறை - அந்த உரையாடல்களின் சத்தியம் அந்த நெருக்கத்தை சாத்தியமாக்கிற்று.
இன்று 'எதிராளியின்( note the point சகமனிதர் அல்ல) மனதை தன்வயப்படுத்த அவனுக்குப் அணுக்கமானவற்றை அடையாளம் கண்டுகொள்' என இன்றைய corporate உலகில் 'Influencing Skills' என்ற புட்டியில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. Expiry date தாண்டிய இது போன்ற மருந்துகளே நோயின் ஆரம்பம்.
ஒருவழியாய் இறங்கும் இடம் வரும் போது மிக மரியாதையோடு, இருவரும் வழியனுப்பி வைப்பார்கள். சில ஊர்களில், பேருந்துகள் நிற்காத இடங்களில், பேருந்து நிறுத்தம் அருகில்லாத இடங்களில், நாங்கள் செல்ல வேண்டியிருப்பின், முடிந்த அளவு நெருங்கிய இடத்தில் இறக்கிச் செல்லும் தோழர்கள் கிடைத்திருப்பார்கள் தாத்தாவுக்கு.
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
மனம்…. மனம்…. அது கோவில் ஆகலாம்…
தாத்தாவின் ஸ்பரிசத்தில் வழவழப்பேறிய அந்த பயண உரிமச் சீட்டு:

இலை 8

சற்குரு - தாத்தா - 6


"கல்லாய் மரமாய் காடு மேடாக
மாறாதிருக்க யான் வனவிலங்கல்லன்
மாற்றம் எனது மானுட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வவை நன்மை எவ்வவை தீமை
என்பது அறிந்தே ஏகும் என் சாலை"


மாற்றம் ஒன்றே மாறாததென்னும் மகத்தான உண்மை மனதில் பதிய சில பாடங்கள் தேவை. மாற்றங்கள் இன்றி வளர்ச்சியும் இல்லை. பழம் விட்டேகும் விதை, மண் புதைய, இருள் பழக, ஒளி தேடி உயிர் நாடி நிலம் கிழிக்க, ஒளி பருக, இலைக்க, துளிர்க்க, எருமை சிறுவீடு மேய்த்தது போக மீண்டும் துளிர்க்க எத்தனை எத்தனை மாற்றங்களை எதிர்கொள்கிறது.


இருள் பழகிய கண்கள் வெளிச்சம் காணக் கூசுவதுபோல், பழகியவற்றினிலிருந்து விடுபட, அது பாழிருள் விட்டு விடுதலையே ஆயினும், மனம் கூசுவதுண்டு. 'தத்தியது போதும் பற' என நம் சுகவெளி(comfort zone இப்படி சொல்லலாமா?) தாண்ட, தாய்ப்பறவையின் கரிசனத்தோடு, தந்தையின் வழிகாட்டுதலோடு, தெய்வத்தின் அருளோடு கூடிய ஒரு குருவின் உந்துதல் தேவைப்படுகிறது.


வளர்ந்த சூழலின் மாற்றங்கள், வருடந்தோறும் பள்ளிகளின், நண்பர்களின், ஆசிரியர்களின் மாற்றங்கள், அவ்வவ்வயதுக்குரிய அகமாற்றங்கள், என அனைத்திலும் துணை நின்றது தாத்தாவின் கரங்கள். தாராபுர வாழ்க்கை, சுகமான தாளகதியில் சென்று கொண்டிருந்த ரயில் ஆற்றுப்பாலம் தாண்டுவது போல் கல்கத்தாவிற்கு இடமாற்றம் என கடகடத்தது. முதலில் அப்பா செல்வதென்றும், காலாண்டுத் தேர்வு முடிந்தபின் நாங்கள் செல்வதென்றும் திட்டம். எங்கள் காலை மாலை நடைகளில், நேதாஜியும், விவேகானந்தரும், ராமகிருஷ்ண பரமஹம்சரும், தாகூரும் உடன்வந்தார்கள். ஆன்மிகமாயினும், கலைகளாயினும், விடுதலை வேட்கையாயினும், வீரியமான விதைகளுக்கான நிலம், கங்கையின் ஆரவாரத் தழுவலில் கசடுகள் அனைத்தும் களைந்த நகரம் என,  தாத்தா கல்கத்தாவின் நீள அகலம் முதற்கொண்டு விவரித்தார்கள்.  தாத்தாவும் நானும் ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத், கேதார்நாத் கோடை விடுமுறையில் சென்று வரலாமென்று திட்டம் வேறு. அதற்குள் அரசாங்கம் வாக்களித்திருந்த ரயில்வே பயண உரிமமும் வந்துவிடுமென்று எதிர்பார்த்தார்கள் தாத்தா. அதன் பின்னரும் இறுதி வரை அந்த உரிமம் வரவேயில்லை.


ரகுதாத்தா ஹிந்தியும் அறியாத என்னிடம் "மொழி ஒரு தடையில்லை, ஆறு மாதங்களில் உன்னை ஹிந்தியில் பாண்டித்யம் பெறச் செய்வது என் பொறுப்பு" என உத்வேகத்தோடு என்னைத் தயார்படுத்தத் தொடங்கினார்கள். "உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம்" என்ற சிவ(வாஜி) நகைப்போடு, பாங்க் அப்பாவை அஸ்ஸாம்-க்கு மாற்றியது. குவஹாட்டிக்கு இடமாற்றம் என்ற தகவலோடு இன்னும் பரபரப்பாகியது வீடு. கேந்த்ரிய வித்யாலயா அனைத்து பெரிய ஊர்களிலும் இருக்கும், எனவே பள்ளி குறித்து கவலையில்லை; உணவு குறித்த கவலையோ என்றுமே எனக்கில்லை, அத்தை குறிப்பிட்டது போல நாவுக்கு அடிமையாகாதிருப்பது குறித்தும், கிடைப்பதை ரசித்து வாழ்வது குறித்தும் தாத்தாவிடம் பாடம் நடந்தது.


திருவிளையாடல் மேலும் தொடர்ந்தது. குவஹாட்டி கொடுத்த காலடி மண் பிடிமானமும் நகர்ந்து, சாருப்பேட்டா என்ற ஒரு குக்கிராமத்திற்கு மாற்றலாகியது. அதற்குள் இங்கு எனக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியது. விடுமுறையின் எழுதப்படாத விதியான அனைத்து வினாத்தாள்களையும் choice விடாமல் எழுதிக் கொண்டு வரச்சொல்லியிருந்தார்கள். விடுமுறை முடிந்ததும் இந்தப் பள்ளிக்கூடம் போகப்போவதில்லை என்று அதிஉற்சாகமாய் கழிந்தது விடுமுறை. ஊருக்கு எங்கும் செல்லவில்லை, புதிய மாநிலம் காணப் போகும் பரபரப்பில் கழிந்தது நாட்கள் தாத்தாவுடன். பள்ளி திறக்க இரு நாட்களே எஞ்சியிருக்கையில் ஒருநாள் அதிகாலையில் வந்து சேர்ந்தார்கள் அப்பா அஸ்ஸாமிலிருந்து.


மாற்றத்தின் புதிய இடி என் தலையில் இறங்கியது. ஒரு பாடத்திலும் ஒரு வினாத்தாளுமே எழுதாத நிலையில் அப்பா திடீரென்று வந்து 'எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை, அஸ்ஸாமில் காலம் தள்ள முடியாது' என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்பா வேலையை விடுவது அவ்வயதின் பெரிய அதிர்ச்சியாய் இல்லை எனக்கு, நான் ஏழு வினாத்தாள் எழுதவேண்டுமே என அழத் தொடங்கினேன்.


'பைத்தியக்கார பயபிள்ளை' என அப்பாவுக்கும் நற்பெயர் பெற்றுத் தந்தேன் தாத்தாவிடம். "தேர்வில் ஒவ்வொரு தாளும் இரண்டு மணிநேரத்தில்தானே எழுதுகிறாய். 7 paper எழுத 2 நாட்கள் போதாதா"எனக் கேட்டு எழுத வைத்தார்கள். கூடவே அமர்ந்து புத்தகத்தில் இல்லாத விடையெல்லாமும் எழுத வைத்தார்கள் தாத்தா!!


பின்னர் சில மாதங்கள், அப்பாவுக்குத் தூத்துக்குடி என்று முடிவாகும் வரை சிறிது குழப்பம் நீடிக்க, நான் தாத்தா அப்பத்தாவுடன் மதுரையில் இருந்து கல்வியைத் தொடர்வதென்று தீர்மானமாயிற்று. 

அரையிறுதித் தேர்வும் எழுதாமலேயே மதுரை பயணமானோம். அதற்கு என் புத்தகங்களையும் உடைகளையும் அடுக்கி, தாத்தா தயார் செய்த நேர்த்தியைக் கண்டே ஆய கலைகள் 64இல் packingஉம் ஒன்றென்று உணர்ந்தேன்.


நுழைவுத் தேர்வின்றி அனுமதி இல்லை, அரையிறுதித் தேர்வு தாண்டி இடம் கேட்பதால் மீண்டும் ஐந்தாம் வகுப்பே மீண்டும் படிக்க வேண்டும் என்றெல்லாம் பள்ளிகள் மிரட்ட, தாத்தா என் கல்வியைத் தன் கையில் எடுத்தார்கள். பள்ளியில் இடமே கிடைக்காவிட்டாலும் நட்டம் ஏதுமில்லை, தனியாக வகுப்புகள் எடுத்துக் கொண்டே கூட பத்தாம் வகுப்புத் தேர்வே கூட எழுதலாம்  என்றெல்லாம் தாத்தா சொல்ல, ஒரே திகில் எனக்குள். பள்ளி செல்லாமல் வாழ்வதெப்படி என திகைத்தே போனேன். ஆனால் எந்தப் பள்ளியும் கற்றுத் தரமுடியாத தரத்தில் என் கணிதமும், ஆங்கிலமும் தாத்தாவின் நேரடிப் பார்வையில் மெருகேறியது. Wren and Martin முழுவதும் உள்ளே சென்றது. ICSE கணிதப் புத்தகம் ஒன்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்து பாடம் எடுத்தார்கள் தாத்தா. மேற்படிப்புக்குத் தான் அருகில் இருக்கப் போவதில்லை என்று முன்னரே உணர்ந்தது போல ஐந்தாண்டுகளுக்கு முன்கூட்டிய பாடத்திட்டம் வரை நடத்திய தீர்க்கதரிசி - என் மார்க்கதரிசி.


சிலை மெருகேற செய்ய வேண்டியதெல்லாம் சிற்பியின் கையில் முழுமையாய் சரண்புகுவதொன்றே. உளியெடுக்கும் சிற்பிக்குத் தெரியும் எதை நீக்கி, எதை உடைத்து உள்ளுறங்கும் கருப்பொருளை வெளிக்கொணர்வதென. 

உளிதாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்..
இலை 9
சற்குரு - தாத்தா - 7


அப்பாவின் பிறந்த தினம் இன்று - ரவி அப்பா.
அப்பா பிறந்த 1951 மே 29 தினத்தை நினைவுகூறக் கூடிய யாருளர் இன்று. தாத்தா மற்றும் அம்மாச்சியிடம் கேட்டுப் பார்க்கலாம்.
தாத்தா, அப்பாவைப் பற்றிய சிறு வயது நினைவுகளில் அதிகம் குறிப்பிடுவது - very soft and gentle, obedient என்ற பார்வையில்தான். பெருமாள் கோவில் தெருவில் (இன்றைய aarathy hotel பின்புறம்)வீட்டுக்கு அருகில் PSS bus வந்து திரும்புமாம். இரண்டு வயது நிரம்பிய ரவி அப்பாவும் அவர்களை விட இரண்டு வயது மூத்த செல்லத்தையும் வாசலில் அமர்ந்திருப்பார்களாம். பஸ் அருகில் வந்ததும் ஆர்வத்தில் அப்பா வாயில் விரலோடு 'ஸ்..' என எழுந்து நின்று விட, அத்தை 'வேண்டாம் தம்பி, விழுந்துடுவ' என சொன்னதும் அப்பா அப்படியே உட்காரந்து கொள்வார்களாம். ஒவ்வொரு பஸ் திரும்பும் போதும் இது நடக்குமென, தாத்தா புன்னகையோடு விவரிப்பார்கள்.
மேற்கொண்டு பெருமாள் கோவில் வீதி கதைகள் அப்பாவின் எழுத்திலேயே கேட்கலாம்..
"அழும்தொறும் அணைக்கும் அன்னை - அறிவிலாது ஓடி
விழும்தொறும் எடுக்கும் அப்பன்
தொழும்தொறும் காக்கும் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை" - கானகந்தர்வன் யேசுதாஸ் குரலில் இப்பாடல் கேட்கும் போதெலாம் நெஞ்சம் நிறைந்து தளும்பும்.
இறையும் குருவும் இவ்விதமே..
அஸ்ஸாம் தவிர்த்த எனது ஐந்தாம் வகுப்பின் எஞ்சிய நாட்கள் தாத்தாவுடன் கண் விழிக்கும் நேரமெல்லாம் இருக்கும் தினங்கள் ஆயிற்று
உறவுகள் தொடர்கதை - உணர்ந்தது இக்காலத்தில்தான். வழக்கமாய் பார்த்துப் பழகிய உறவுகளைத் தவிர யாரிடமும் பழகாத தொட்டாற்சுருங்கி நான் அப்போது.(மனசாட்சி: இப்போது மட்டும் என்னவாம்?? சற்று அதிகமானோரைத் தெரியும் அவ்வளவுதான்)
பாட்டியின் மறைவை ஒட்டி பல தினங்கள் அம்மை நகரில் இருந்தபோதுதான் பல பெயர்களுக்கு எனக்கு முகங்கள் அறிமுகம். மருதுபாண்டியன் அண்ணனை நன்கு தெரியும், அண்ணன் மதுரையில் படித்துக் கொண்டிருந்த போது தாத்தா சொன்னது - உங்கள் அனைவருக்கும் மூத்தவன். அண்ணன்!! Sorry கோபிண்ணா.. "என்னைத் தெரியுமா" என அம்மையநாயக்கனூர் மாடி அறையில், தோடி ராகம் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரையிருளில் நீங்கள் கேட்ட போது, எனக்கு நிஜமாய் உங்களைத் தெரியாது. இது போன்ற அறியாமைக்கு அதிகம் திட்டு வாங்கியிருக்கிறேன் தாத்தாவிடம்.. வேகவேகமாய் நடந்து வரும் செண்பக அத்தானை நன்கு தெரியும். ஆனால் அவர்கள் வீடும் அம்மையநாயக்கனூரில் அரசமரத்துக்கு எதிரிலிருந்த சாரதி மாமா வீடுதான் என்பது எங்களுக்கு ஆச்சரியமான செய்தி. வானதி அத்தாச்சி வீடு அது!!!
மதுரையில் இருந்த காலத்தில் யாரேனும் வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் quiz ஒன்று நடக்கும் எனக்கு. பேந்தப் பேந்த விழித்ததுதான் அதிகம். ஒருமுறை தாத்தா தன் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் போது, 'தங்கப்பாண்டியன் வீட்டருகில்' எனக் குறிப்பிட, 'யாரது?' என்று கேட்டுவிட்டேன். பழியாய் வந்ததே கோபம் தாத்தாவிற்கு. தாத்தாவையும் தெரியவில்லை, அம்மை நகரையும் தெரியவில்லை. அன்றுமுதல் குலவரலாறு விலாவரியாய் பாடம் நடத்தப்பட்டது எனக்கு!!
இதற்கும் சில வருடங்களுக்கு முன்னால்-ஒரு சின்ன flashback: தாத்தாவுக்கும் எனக்குமான secret..இன்று என் எழுத்து வாயிலாய் மனம்திறக்கையில் அப்பாவும் தாத்தாவும் பெரியம்மாச்சியும் மேலிருந்து புன்னகை புரிவதாய் அகக்காட்சி. மாயை அகன்ற அரன் உலகன்றோ அவர்களுடையது -
"பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கிஅது விடும்பொழுதிற் பரக்கும்
மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்" தாத்தா சொல்லிக்கொடுத்த பாடல்...
அது ஒரு பொங்கலுக்கு முன்தினம்.
சில வருடங்கள் ஷண்முக பவனமும் செல்வ நிலையமும் மௌனம் சாதித்த காலம். போக்குவரத்தின்றிப் போனதால், என் தாய்க்குத் தாயாகி எனக்கும் தாலாட்டுப் பாடிய மாதரசி - another great legend - சௌந்தரம் அம்மாச்சி - பெரியம்மாச்சி என்னைப் பார்க்கவேண்டும் என, தாத்தா ரகசியமாய் அங்கு அழைத்துப்போனது; மிகத் தெளிவாய் அந்த மாலையின் விளக்கேற்றும் வேளையின் இருளோடு நினைவில் அச்சேறி இருக்கிறது. அருகில் பார்த்ததில்லையே தவிர, தாத்தா அதிகம் குறிப்பிடும் நபர் பெரியம்மாச்சி.தாத்தா பலமுறை அங்குள்ளோர் அனைவர் குறித்தும் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். As usual I was blank, the moment I entered there.. பெரியம்மாச்சி தழுவி உச்சிமுகர்ந்த சேலை வாசமும், கன்னத்தை கைகளால் அழுத்தி முத்தமிட்ட பத்மாத்தையும், வேலேந்திய முருகனும் that scene is etched in memory forever..
அங்கிருந்த ஒரு சில நிமிடங்கள் அந்த முருகனையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவர் கையிலிருப்பது சக்திவேலா (வீரவேலா, தாரைவேலா, விண்ணோர் சிறை மீட்ட தீரவேலா எனப் பெருத்த சந்தேகம்) எனத் தெற்குப் பக்கத்து வாசற்படியில் அமர்ந்து அம்மாச்சியிடம் பேசிக் கொண்டிருந்த தாத்தாவிடம் கேட்டதும் நினைவிருக்கிறது. மீண்டும் வீடு நோக்கி நடக்கும் போது, தாத்தா கண் கலங்கியிருந்தது (மனதின் வேதனை நானறியேன்), கூரைப்பூ வாங்கிக்கொண்டு போகும் போது, கடையில் கூட்டமென சொல்லிவிடலாம் என்றார்கள், நான் அதுவரை அறிந்திராத கம்மிய குரலில். அண்ணனின் அந்த ரகசியம் பெரியம்மாச்சியும் இறுதி வரை காத்தார்கள். TVS ஆஸ்பத்திரியில் இறுதித் தறுவாயில், அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு பெரிய அம்மாச்சியைப் பார்க்கச் சென்ற போது, "சிறு வயதிலேயே பிரித்துச் சென்று விட்டீர்களே, பார்க்காத குழந்தைக்கு எப்படி நினைவிருக்கும்?" எனக் கேட்டு என் தலையை வருடியதை நினைக்கும்போது, அந்த அண்ணன் தங்கையின் புரிதலும் பகிர்தலும் உணர முடிகிறது. தாத்தாவின் வழிகாட்டுதலில் பின்னாட்களில் ஷண்முக பவனம், மனம் திறந்து லேசாக்கும் தனிப்பட்ட புனித ஸ்தலமாகவே இருந்தது.
மீண்டும் ஐந்தாம் வகுப்பு தினங்கள் - தாத்தா அப்பத்தாவுடன் - பாலா, செண்பகவல்லி அத்தை அனைவருடன். பெரியவர்களின் மனத்துயரங்கள் எல்லாம் புரியாத வயது. 'துன்பம் நிறைந்து வந்த போதும் மனம் சோர்ந்து மதிமயங்க மாட்டேன்' - மேல் ஸ்தாயியில் அத்தை தழுதழுக்கும் போது, அத்தையின் குரலை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருப்பேன். ஜெய ஜெய 'பாலா' சாமுண்டேஸ்வரியும், ஓம் நமோ 'நாராயணா'வும் பாடச் சொல்லி பாலா ஒருபுறம் நேயர் விருப்பம் கேட்க, அருகிலோ திண்ணையிலோ அமர்ந்தபடி 'வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்', போன்ற வரிகளில் நெக்குருகி கண்ணீர் வடிய அமர்ந்திருக்கும் தாத்தா. அழுகை புரியவில்லை எனினும், தவத்தை கலைத்தலாகாதென அன்றும் புரிந்தது.
நல்ல அழுகை, நல்ல ஸ்னானம் - லா.ச.ரா சொல்ல, அனுபவத்தில் மேலும் புரிந்தது.
சில அனுபவங்கள் அனைவருக்கும் நிகழும்போதிலும், அவற்றிலிருந்து பெறப்படும் தரிசனங்கள், அவரவர் தீட்சண்யத்தைப் பொறுத்ததே. நமக்கு எவ்வளவு கொள்ளளவோ அவ்வளவுதான்.

இலை 10
சற்குரு - தாத்தா - 8

இனிதே தொடர்ந்தது செல்வநிலைய வாசம். ஐந்தாம் வகுப்பின் மீதமிருந்த மூன்று மாதங்கள் தெரு முனையில் உள்ள தூய அந்திரேயா சர்ச் பள்ளியில். உண்மையில் கல்வியென்னவோ குருகுலவாசமாய் வீட்டில் தாத்தாவிடம்தான். தாத்தாவின் பார்வையில், பாடப்புத்தகத்தில் உள்ளதைப் படிப்பது கல்வியே அல்ல. அது ஒரு outline, பாடத்திட்டத்தின் உருவெளிக்கோடு. உண்மையான பாடம், புத்தகங்களுக்கு வெளியே, அன்றாட வாழ்விலும், பரந்த புறவுலகின் நிகழ்வுகளிலிருந்துமே பெறப்படுகிறது.

இன்னும் சிறு வகுப்பிலேயே(2ஆம் வகுப்பில்), தாத்தாவிடம் படிக்கிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, பாடங்களைத் தாண்டி  parts of speech, phonetics என்று என்னென்னவோ தாத்தாவிடம் படித்து விட்டு, வகுப்பின் பாடங்களை எழுதவோ revise செய்யவோ இல்லாதது கண்டு அம்மாவுக்கு ஒரே கலக்கம். தாத்தா ஊருக்குச் சென்ற பின் அம்மா களமிறங்கி என்னைத் தேர்வுக்குத் தயார் செய்தார்கள். தாத்தா எப்போதும் ஆயத்தம் செய்தது வாழ்க்கைக்கான கல்விக்கு.  Scienceஇல் evaporation குறித்த பாடம், அதைப் பற்றி விஸ்தாரமாக விளக்கிவிட்டு, phonetics நடத்தினார்கள் தாத்தா. e-va-po-ra-tion 5 syllable word, இப்படி அந்த வயதுக்குக் கடினமான ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து எத்தனை syllable என்று சொல்வது, அந்த வார்த்தைக்கு எவ்விடத்தில் stress and pause போன்ற பாடம். அது போல மூன்றாம் வகுப்பில்  fractions பள்ளியில் தொடங்கிய புதிதில் "1/6 என்றால் என்ன அர்த்தம், என்ன புரிந்தது உனக்கு?" என்று தாத்தா வினவ, நான் கிளிப்பிள்ளை போல பள்ளியில் சொல்லிக் கொடுத்ததைச் சொன்னேன். 1 is numerator, 6 is denominator என்று. அப்படி என்றால், என்று மேலும் கேட்க ஒரே குழப்பம். ஒரு முழுமையை 6 பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு பகுதி என்றெல்லாம் தாத்தா விளக்க ஒன்றுமே புரியவில்லை. கணிதத்தில் மட்டும் இப்படி எல்லாம் புரியாது விழித்தால் பொறுமை இழந்து விடுவார்கள் தாத்தா. தாத்தா, அப்பா இருவருமே இதில் ஒன்றுதான். கணிதம் அவர்களுக்குப் புரியும் வேகத்தில் நமக்குப் புரியவில்லை என்றால், இதில் புரியாமல் இருக்க என்ன இருக்கிறது என்ற கோபம் வந்துவிடும். குரலை உயர்த்தி தாத்தா "என்ன புரியல உனக்கு?" என்று கேட்டதும் எனக்கு மொத்தமாய் ஒன்றுமே புரியாதது போலிருந்தது. பிறகு மீண்டும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு பல உதாரணங்கள் கொடுத்து புரிய வைத்தார்கள்.

ஐந்தாம் வகுப்பின் பாடத்திட்டத்தில் scriptures என்ற பைபிள் பாடங்கள் இருந்தன. அதுவரை எனக்கு கிறித்தவ வரலாற்றில் அறிமுகம் இல்லை. தாத்தா அதுவரை கற்பித்ததெல்லாம் ஆங்கிலமும், அறிவியலும், கணிதமும், தாத்தாவுக்கு மிகவும் பிடித்தமான சமூக அறிவியலும்தான். பைபிள் மிகவும் போரடிக்கிறது என்று நான் கூறியதும், அதிலும் தொடங்கியது தாத்தாவின் தீட்சை.

 Sermon on the Mount என்ற மலைப்பிரசங்கம் பகுதியை மிகவும் அருமையாக விவரித்தார்கள். பொதுவாய் பிரபலமான "ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு", "வருத்தப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்" எல்லாம் இந்த மத்தேயு அதிகாரத்தில்தான் வரும். வீரமாமுனிவர் (இவரது இயற்பெயர் Constantine Joesph Beschi இத்தாலியர்) போன்றோர் ஐரோப்பா விட்டு புதிய நிலங்களில் கால்பதித்து, இங்குள்ள மொழியையும் கற்று, வேதாகமங்களை மொழிபெயர்ப்பும் செய்ய முனைந்தது ஒரு பிரம்மப் பிரயத்தனமே. "Taste and see that Lord is good" ஐ மொழி'பெயர்த்து' "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்"  என்றெல்லாம் ஒருவிதமான புதிய தமிழிலிருக்கும் 'புதிய ஏற்பாடு'ஐ  எனக்குப் பரிசாக வழங்கி தினம் ஒரு அதிகாரம் வாசிக்கச் சொல்லி, உலக மதங்களின் உயர் கருத்துக்கள் எல்லாம் ஒன்றையே போதிக்கின்றன என்று தாத்தா சொன்னார்கள். Thou, Thee, walketh, maketh என்று பைபிள் ஆங்கிலமும் அப்படித்தான் இருக்கும்.

தாத்தாவின் YSS பாடங்கள் குறித்தும் அப்பியாசங்கள் குறித்தும் அறிமுகம் நேர்ந்தது இந்த காலகட்டத்தில்தான். அதில் வரும் குட்டிக் கதைகள் எனக்கும் walking போகும் போது சொல்வார்கள். குழந்தைக்கு செரிமானம் ஆக வேண்டுமென பக்குவமாய் சாதம் குழைய வைத்துத் தரும் அன்னை போல, மிக ஆழமான கருத்துக்களை எல்லாம் எளிதில் ஜீரணிக்கக் கூடிய விதத்தில் வழங்கிய தனிப்பெருங்கருணை தாத்தாவுடையது. தாடித் தாத்தாவின் குடில் ஒன்று இருந்தது அப்போது இன்றைய வெங்கட்ராமன் நகர் இருக்கும் இடத்தில். செல்வ நிலையத்திற்கும் கீழக்குயில்குடி ரோட்டிற்கும் இடையில் இருந்த ஒரு பெரிய கண்மாய் நோக்கிப் போகும் வழியில் சுற்றிலும் பூச்செடிகள் அமைத்து நடுவில் இருக்கும் அந்தக் குடில். அங்கே அமர்ந்து ஏதேதோ ஹிந்தி பண்டிட் பேசுவதை எல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டு விட்டு, எங்கள் நடை தொடரும் பொழுதில் இந்தப் பேச்சுக்கள் தொடரும். "நேற்று எங்க நிறுத்தினோம் சொல்லு பார்க்கலாம்?" என்று கேட்டு எனக்கு என்ன புரிந்திருக்கிறது என்று recap கேட்டு விட்டு தொடர்வார்கள்.

அப்படி ஒருநாள் மாலைநேர நடையின் போது மேலக்குயில்குடி சாலையில் நடந்து கொண்டே பைபிளில் படித்தது குறித்து  "யாரவது அடித்தால் மறுகன்னத்தைக் காட்டுவது எல்லாம் எப்படித் தாத்தா முடியும்?" என்றதற்கு, அங்குள்ள சர்ச் அருகே புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு, அஹிம்சையின் பலத்தை, அஹிம்சைக்குத் தான் உச்சகட்ட மனபலமும், ஆன்ம பலமும் தேவையென்பதையும் விவரித்து, காந்தியின் சத்தியாக்கிரகத்தின் சக்தியை விளக்கினார்கள்.

நேதாஜி என்ற தன்னிகரற்ற தலைவருடன் நேரடி களவீரராக கடமையாற்றிய தாத்தாவிடம் இருந்து, காந்தியத்தின் ஆணிவேர் பாடங்கள் குறித்து அறிந்தேன். காந்தியையும், நேருவையும், சுபாஷ் சந்திர போஸையும் காழ்ப்புணர்ச்சி கொண்ட இன்றைய தலைவர்களோடு ஒப்பிட்டு, எத்தனையோ சதித்திட்டங்கள் குறித்த செய்திகள் இன்று ஊடகங்களில் வலம் வருகின்றன. அன்று களத்திலிருந்த வீரர்களுக்கு, இவர்களெல்லாம் தேசவிடுதலை என்னும் மாபெரும் இலக்கிற்கு அடிகோலிய ஆதர்ச மூர்த்திகள். கருத்துக்களில் வழிமுறைகளில்  பேதங்கள் இருப்பினும், அன்றைய மனங்களில் தலைவர்கள் குறித்த, அவர்களின் கீழ்மையான உள்நோக்கங்கள் குறித்த அனுமான விமர்சனங்கள் இல்லை.

மீண்டும் மறுகன்ன விவாதம்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" என்ற குறளையும் அடிக்கடி தாத்தா குறிப்பிடுவாரகள். அதனையும் சொல்லி அது நடைமுறையில் மிகவும் சாத்தியமான கருத்தே என்று கூறி வாழ்வில் பயன்படுத்திய சில தருணங்களையும் சொன்னார்கள். உடன் பணிபுரிவோர் சில சமயங்களில் கீழான செயல்களில் ஈடுபடும் போதும், நாம் நமது நற்குணங்களில் இருந்து விலகத் தேவை இல்லை, அவர்களுக்கும் நன்மையே செய்து வர நாளடைவில்மனம் திருந்தியதையும் குறிப்பிட்டார்கள். இன்று இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்யும் பொறுமையும், அவர்கள் எக்காரணம் கொண்டேனும் நாணுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லாது போனதோ?

அடுத்த வாரம் பள்ளியில் scriptures போட்டி வைக்க, தாத்தாஉடன் பேசியதெல்லாம் எழுத, முதற்பரிசு scriptures இல். அன்றிலிருந்து இன்று வரை, உயிர் உள்ளளவும்,
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

என்று அனுதினம் தாத்தாவின் அருளை சொல்லாத நாளில்லை.

எந்த ஒரு செயலும் முயற்சி செய்து பாராது முடியாதென்று சொல்வது தாத்தாவுக்கு அறவே பிடிக்காத விஷயம். ""Success often comes to those who dare and act" - தாத்தா அடிக்கடி அழுத்திச் சொல்லும் வாசகம்.

அனுதினம் அதிகாலை (எனக்கெல்லாம் 5.30 மணிக்கு தான் சுப்ரபாதம்) எழுந்து, குளித்து, கோலமிட்டு, யோகாசனம் செய்வதற்கு அமர வேண்டும். மார்கழி மாதமெனில் பச்சைக் கற்பூரம் மணக்கும் இளம் சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்  தாத்தாவின் கையில் இருந்து கிடைக்கும். அப்படி ஒரு நாளில் பாலகனான பாலா செய்த தகராறு, "என்னை மட்டும் ஏன் தினமும் குளிக்க சொல்கிறீர்கள்? தாத்தாவெல்லாம் குளிப்பதும் இல்லை பல் துலக்குவதும் இல்லை" என்பது. சூரியனும் காணாது காலைக் கடன் அனைத்தும் தாத்தா முடித்துவிட்டால் பாலா என்ன செய்ய முடியும். நியாயமான கேள்வி. மேலும் தாத்தாவிடம் கற்ற யோகாசன பாடம் எல்லாம் வாசலில் நின்று உரத்த குரலில் பாடம் எடுப்பார் 3 வயது பாலா. திரிகோனாசனம் செய்வதற்கு தாத்தா "கை நேர்கோட்டில் இருக்க வேண்டும், பார்வை மேல்நோக்கி இருக்கும் கையைப் பார்க்க வேண்டும் எனப் பாடம் நடத்த, பாலாவும் அதே போல  "எங்க, மேல பாருங்க நேர மேல பாருங்க" என்று சத்தமாய் வாசலில் நின்று குரல் கொடுக்க, தெருவில் போவோர்கள் எல்லாம் மேலே அண்ணாந்து வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வார்கள். தாத்தாவுடன் விதண்டா வாதம் செய்ய உரிமை பெற்ற ஒரே நபர் என்ற பெருமை பாலாவையே சேரும். :)

இலை 11
சற்குரு - தாத்தா - 9
கற்றதும் பெற்றதும் ஆயிரம் உண்டுகாண்-நீ
உற்றதும் உணர்ந்ததும் உணர்ந்திடச் செய்ததும்
...
சுற்றமது உயர்ந்திட சுப்பன்வழி வந்ததும்
பெற்றவரின் அருளை - நின்கருணை நிதியெனவே
உற்றாரும் உடையாரும் உய்த்திட ஈந்ததும்
செற்றம் செருக்கடக்க படைமுனையில் நின்றதும்
குற்றமற குருவாகி குலம்காத்து நின்றதும்
கற்றவரின் கருத்தினிலே கருவாகிக் கலந்ததும்
மற்றவரும் போற்றிடவே வாழ்வாங்கு வாழ்ந்ததும்
பற்றதுவும் நீங்கிவிட மாயையாம் பவவினைகள்
அற்றதும் அகன்றதும் அரனடியை சேர்ந்ததும்
கற்றாவின் மனம்போலக் கசிந்துருகி யாம் மனத்-துணுக்
குற்றதும், "துயர்வேண்டாம்! உடனிருக்கும்
வெற்றிவேல்! துணையிருக்கும் சக்திவேல்!!
தொற்றிவரும் துயரனைத்தும் விட்டகலும் வேல்முனையில்! அவனைப்
பற்றிடுக பாடிடுக பகல்விடியும் இருள்முடியும்!!"என
முற்றிலும் பயம்விலக்கி எமையாளும்
பெற்றவனே உற்றவனே கொற்றவனே
சிற்றறிவுக்கெட்டியவரை சிறுவிரலால் எழுதுகிறோம் - சீரியநின் சிறப்பை...

சற்குரு - தாத்தா - 10

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே - பிடித்த பத்து - மாணிக்கவாசகர்

இலை 12
சற்குரு - தாத்தா - 11
அடுத்த களம் - காற்றில் உப்பு மணக்கும் தூத்துக்குடி. ஆறாம் வகுப்பை அங்கே தொடர்வதென பேச்சு. அப்பா அஸ்ஸாம் வேண்டாமென்று, அலுவலகத்தில் மேல்மட்டத்தின் கீழ்மட்டங்கள் பொறுக்காமல், regional manager பதவியைத் துறந்து 30+ வருட அனுபவத்துடன் சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் PNB கிளை மேலாளராய், பதவியேற்பு. வீடு தூத்துக்குடியில். அந்த நாட்களில் அது ஒரு பங்களா. 26கிமீ அன்றாட பயணம் அப்பாவுக்கு தூத்துக்குடியிலிருந்து - இன்று மிக எளிதாய்த் தோன்றும் இந்தத் தொலைவு, அன்று வெளியூர் பேருந்தில் ஒன்றரை மணி நேரப் பயணம். வீடுகளின் பின்புறம் private jacuzzi போல் தாமிரபரணி ஓடும் தோட்டங்கள் இருகரையிலும் கொண்ட ஆத்தூர் தாண்டியதும் வரும் இந்த சிற்றூர்.
மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி தாத்தாவுடன் நான் பஸ் பயணம். எப்போது வரும் தூத்துக்குடி என அருப்புக்கோட்டை தாண்டியதுமே என் கேள்விகள். ஏறத்தாழ 100கிமீ இதே கேள்வியுடன் எப்படிப் போவது. எனவே 200மீட்டருக்கு ஒரு முறை வரும் 2, 4, 6, 8 என இலக்கமிட்ட கற்களைக் காட்டி இது ஏறக்குறைய ஒரு ஃபர்லாங்குக்கு ஒரு முறை வரும். இது ஒரு முறை முடிந்தால் 1 கிமீ என சொல்லிக் கொடுத்தார்கள். பின்னாளில் பழனி பாதயாத்திரையின் போது மட்டும் இந்தக் கற்களை யாரோ 1மைல்-க்கு ஒன்றாய் வைத்திருப்பதாய்த் தோன்றும். இன்றும் இதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு ஒரு தியானமாய் பஸ்ஸில் பயணம் செய்வது சுகம்.
தூத்துக்குடி Holycross entrance exam - தாத்தா வழக்கமாய் கேட்பதினும் எளிய கேள்விகளே. Admission கிடைத்து பள்ளி தொடங்கி ஒரு வாரத்தில் அப்பா அலுவலகம் அருகே ஆறுமுகநேரிக்கே வீடு மாற்றம் என முடிவாகியது. எனவே மீண்டும் புதிய வீடு, புதிய பள்ளி, புதிய நண்பர்கள். ஆறாம் வகுப்பு - ஏழாவது பள்ளி.
உப்பளங்கள் - அலை அலையாய் மலை மலையாய் கண்ணுக்கெட்டியவரை. வெண்மை தோய் கரிப்பு மணிகளிடையே கரிய மனிதர்கள். ஊர் புதிது, சொல் புதிது. 'ஏல வயிறு பசிக்கு, அங்க என்ன செய்யுதே! ' என்று ஏச்சைப் போல் தொனிக்கும் தூத்துக்குடிப் பேச்சும், 'அவிய வரட்டும் பாத்துக்கிடுதேன், நீ இஞ்ச இரி' என்ற நாஞ்சில் தமிழுக்கும் கலப்பு மணம் அங்கு ஆறுமுகநேரி பகுதியில் உலவிய தமிழ். நேசமணி, கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகப் பயணங்கள் - தாத்தாவுடன்.
இங்கே தாத்தாவுடனான நேரங்கள் - இன்னும் உன்னதமாய், உரையாடல்கள் - இன்னும் தீவிரமாய். பின்னாளில் கேட்டாலும் கிடைக்கப் போவதில்லை என்ற உத்வேகம் போலும்.
கால்கள் புதையும் மணல்வெளி. நாற்புறத்திலும் நாளெல்லாம் சலசலக்கும் பனைமரங்கள். தாரங்கதாரா ஊழியர்கள் நிலம் வாங்கிக் கட்டிய பன்னிரண்டே வீடுகள் கொண்ட காலனி. இருபுறமும் ஒரு கிமீ செல்ல வேண்டும் - ஒரு தேங்காய்ச்சில் வாங்குவதற்கும் (அதற்குதான் அதிகம் சென்றிருக்கிறேன்) அம்மாவின் உழைப்பில் மணல் நான்கைந்து மாதங்களில் பசுமை போர்த்தியது.
மொட்டை மாடியில் அனுதினம் தியானம் . அலைபாயத் தொடங்கும் வயதின் மனது, கடிவாளம் சற்குரு கைகளில். விழிமூடி - பார்வையைத் திறந்து வைக்கவும், பேச்சைக் குறைத்து மூச்சை அடக்கவும் பயிற்சி. சக்கரங்களும் அதன் விளக்கங்களும், இரு பெரும் நாடிகள் குறித்தும், ஓஜஸ் குறித்தும், அனுதினம், அன்றாடம், அருகிருந்த நாட்களில் எல்லாம் பாடம், தீட்சை. கூர் தீட்டப்படும் போது அம்புக்குத் தெரிவதில்லை அதன் இலக்கு. பின்னாளில் வாழ்க்கை நமைப் பின்னோக்கி இழுக்கும் தருணங்களில் முன்னோக்கி சீறி எழும் விசை உந்தித் தள்ள, கூர்முனை தப்பாது சென்றடையும் அதன் இலக்கு. அன்று இடப்பட்ட வீரியமான விதைகள் இன்றளவும் குருவின் அருள் மழை படும் தோறும் துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன. புரியா வயதில் கிடைக்கும் புதையலைத் தொலைத்து விடாதிருக்க பல மனப் பயிற்சிகள். To register, recall and recollect at appropriate time. மனித மனதிற்கு அந்தத் திறன் உண்டு; அதனை மேம்படுத்திக் கொள்வதும், கண்டு கொள்ளாது இழப்பதும் நம் கைகளில். ஒரு தலை சிறந்த வீரனுக்கு, 'உனக்குக் கிடைத்த அதி உன்னதமான ஞானம் தேவையான தருணத்தில் மறந்து போகும்' என்ற குரு சாபத்தினும் வலிய பிரம்மாஸ்திரம் ஏதுமில்லை கர்ணனை வீழ்த்தியது.
குருவருள் இருப்பின் திருவருள் சேரும்.
-ஆறுமுகநேரி தொடரும்-
இலை 13
சற்குரு - தாத்தா - 12
ஒரே அச்சில் எத்தனை உலகங்கள் சுழல்கின்றன. சிலருக்கு மிக மெதுவாகவும், சிலருக்கு தலை கிறுகிறுத்துப் போகும் வேகத்துடனும்! பெற்றோருக்கு வாழ்வின் சிகரப் புள்ளிதொடும் பகுதியில், கடமைகளும் கட்டாயங்களுமாய் நிர்தாட்சண்யமாய் சுழலும் உலகம்; அப்போது காலடி நிலம் போல நிச்சயத்தன்மையுடன், தாத்தா பாட்டி என முந்தைய தலைமுறை உடன் இருப்பது பிள்ளைகளுக்குப் பெரும் சுகம்.
உறக்கமின்றி, ஓய்வின்றி, விடுமுறைகளின்றி, தனிமனித இயந்திரமாய் ஒரு வங்கிக் கிளையைத் தன் அதீதத் திறமையாலும், அயராத உழைப்பாலும் அப்பா ஒருபுறம் ஓட்டிக்கொண்டிருக்க, தாத்தா அப்பத்தாவுடன் எனக்கு வேறு ஒரு உலகம். மேலும் அம்மா சேகரித்திருந்த வீட்டு நூலகத்தில் மூழ்கியதும் இந்த காலகட்டத்தில்தான்.
பெரியவர்களின் மன உளைச்சலும், இறுக்கங்களும், அதன் வெளிப்பாடுகள் வீட்டுச் சூழலில் சிதறும் தருணங்களில், ஏதோ அவர்கள் கோபமாய் நம் மீது பாய்ந்து விட்டதாய், சற்றும் கருணையின்றி தண்டித்துவிட்டதாய் எத்தனையோ குற்றச்சாட்டுகள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் மீது. எனக்கும் இருந்திருக்கிறது. அதிலும் சில பிணக்குகள் - திருப்பாவையில் ஆண்டாள் பாடியது போல் 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்- ஒருத்தி மகனாய்..' வளர்ந்த கண்ணனைப் போல் இருதாய்க்கும் தந்தையர்க்கும் இடையே, அவர்கள் வாரி வழங்கும் அன்புக்குப் பாத்திரமாய் இருக்கவும், அதில் ஏற்படும் சிறு சலசலப்புகளுக்கும் அஞ்சவோ மனம் சுளிக்கவோ கூடாது, அன்பு இருமடங்காய் கிடைப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும், இன்னும் எத்தனை எத்தனையோ விதங்களில் யார் பக்கமும் நூலிழை பிசகிவிடாது தாத்தா துலாக்கோல் ஏந்தி நடத்திச் சென்ற நாட்கள். Salute him for the patience and perseverance.
அந்த சூழ்நிலையை மிக இதமாய் விளக்கி, பல நேரத்துக் கோபங்கள் அளவுகடந்த நேசத்தின் வெளிப்பாடே, அன்பைக் குறித்தெழும் ஆற்றாமையே என்பதை விவரித்தது -இது பொய்யோ புனைவோ அல்ல; 11-12 வயது பேத்தியிடம் சக மனிதராய் மதித்து, இவை இளமனதுக்கும் புரியும், மயக்கும் பிணக்கும் அகலும் என நம்பிக்கை வைத்து, பேசிட ஒரு மிகச் சிறந்த பக்குவம் வேண்டும். அன்றே சிறு மனதுக்கு அனைத்தும் விளங்கிவிடாது என்பது தாத்தாவுக்குத் தெரிந்தே இருக்கும். பின்னாளில் என்று தேவையோ அன்று இந்த விதை வேரூன்றி இருக்குமென நம்பி விதைத்த நடவு அது. தழைத்துமிருக்கிறது. ஆண்டிறுதித் தேர்வுக்குத் ஆயத்தம் செய்வதன்று குருவின் பணி; ஆயுள் காப்பீடு போல் மறைவுக்குப் பின்னும் காத்து நிற்கும் ஈடு.
இதை எழுதக் காரணம் - அன்பின் அடிப்படையிலையே சில சமயங்களில் நாம் பல வார்த்தைகளையும், பிறர் கூற்றில் நாம் ஏற்றும் தற்குறிப்பேற்ற அணியாய் - பிறர் கருத்தாய் நாம் நினைக்கும் கருத்துக்களையும் சுமத்தி, உறவென்னும் நூலிழையை சிக்கலாக்கி விடுவதுண்டு. அது போன்ற தருணங்களில் அன்பெனும் மாயக்கயிற்றால்தான் அனைத்தும் கட்டி இழுக்கப் படுகிறதென உணர்ந்து, இறுதியில் காண விழையும் நோக்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, அனைவரையும் அனைத்துச் செல்லும் பெருநோக்கு - தவறெனில் சுட்டிக் காட்டும் கடமை, எதுவரினும் ஒதுங்கிக்கொள்ளாமல், ஒத்திப்போடாமல் நேர் எதிர் நின்று ஏற்றுக்கொள்ளும் தீரம். இவற்றையும் பகிர்ந்து கொள்ளவே.
-ஆறுமுகநேரி தொடரும்-
இலை 14
சற்குரு - தாத்தா - 13
ஆறுமுகநேரி - ரகசியம் பேசத் தெரியாத பனைமரக் காடுகள். அதன் இடையே நடக்கும் போது திகில் பட இசையமைப்பாளராய் காற்று வேலை பார்க்கும். கால்கள் நடந்து உருவாக்கிய பாதைகள் வழியாக நடைபோட புதிய திசைகள் தினந்தோறும் உருவாகும். காக்கா முள் நிறைந்த தடத்தில், ஓணான் , நத்தை உடன் வரும் பாதைகளில் explorers ஆக நடைபயணம். இந்த V வடிவ கருவேலம் முள் alias காக்கா முள் மிகவும் கடினமானது, ஒருநாள் பனை ஓலை காத்தாடி செய்து அதைக் குத்திக் கொடுத்தார்கள் தாத்தா. பலநாள் என் நிலவறை பொக்கிஷங்களில் இருந்தது அது. ஆனால் அந்த முள் குத்தினால் மிகவும் கடுக்கும்-காலணி தாண்டி தாத்தாவின் கால் பதம் பார்த்தது ஒருநாள் - பின்னர் என் காலைப் பதம் பார்த்த அன்றே கடுக்கும் என்ற வார்த்தைக்குப் பொருள் புரிந்தது.
அப்படிப்பட்ட ஒருநாள்(நினைவுக் கோப்பில் எத்தனையோ ஒருநாள்-கள், ஒருநாள் போதுமா!!) காலை நடையில் மரங்களுக்கு ஊடே ஒரு குடிசை இருப்பதைப் பார்த்து அருகில் சென்று பார்க்க கரடுமரடாய் ஒரு மனிதர். இன்று அவ்விதம் நடக்க முடியுமா, அப்போது இன்றிருப்பது போன்ற பாதுகாப்பு குறித்த அச்சங்கள் இல்லையா எனத் தெரியவில்லை. தாத்தா உடனிருக்க நமக்குதான் அச்சமென்பதில்லையே. நாய்களுக்கு மட்டும்தான் எனக்கு பயம் - தாத்தா உடனிருந்தாலும்.. பயமென்றால் 'சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்' என்று பாரதியின் பா சொல்லி தைரியமாக நடைபோடச் சொல்வார்கள் தாத்தா. பின்னர் எத்தனையோ நாய்கள் - அச்சம் தரும் வேளைகளிலெல்லாம் இந்த வேலே துணை.
பதநீர் கள்ளாவதற்குள் அங்கே செல்வோம். அந்த பதநீர் இறக்குபவருடன் பேசி - அவர் தன் பெயர் 'சுதந்திரம்' என்றதும், 1947-ல் பிறந்தாயா எனத் தாத்தா கேட்க, சுதந்திரம் கிடைத்த அன்று பிறந்தேன் என்று கூற, தொடர்ந்து அவர் குடும்பம் குறித்தும் பேசி, அவர் சிலநாட்களில் தாத்தாவுக்கு மிக நெருக்கமாகிப் போனார்.
அந்த ஆறுமுகநேரியிலிருந்து 10 கிமீ தொலைவில் திருச்செந்தூர். வழியில் 64 வீதிகளில் 64 பள்ளிவாசல்கள் கொண்ட காயல்பட்டணம்; மிகப் பெரிய தேவாலயம் அமைந்த வீரபாண்டியபட்டணம், படித்த பள்ளியோ ஜைனப் பள்ளி - மினி இந்தியா - வடஇந்திய மாணவர்களும், 8ஆம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப்போட வேண்டிய காயல்பட்டிணத் தோழிகளும், வேறெங்கும் கிடைக்காத கலவையாய், ஒரு பள்ளி.
பயம் வேண்டாம் - மீண்டும் பாடங்களுக்குள் செல்லவில்லை. ஒரு மிக முக்கியமான அத்தியாயத்திற்கு நுழைவதால் சிறு முகவுரை..
அங்கே வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய பாடம் எடுத்த தமிழாசிரியை, மிக உணர்ச்சிவயமாய் உலகப் போரை விவரித்ததை தாத்தாவிடம் நான் கூற, 'அவர்களிடம் கேட்டுப்பார் யாரேனும் அவர் வீட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம்' என்றார்கள் தாத்தா.
மிகவும் கண்டிப்பான அந்த ஆசிரியையிடம் அதைக் கேட்க பயந்து நான் நாட்களை ஒத்திப் போட்டுக்கொண்டே போக, தாத்தா 'நான் வந்து பேசுகிறேன்' என்று சொல்ல, அதற்கு பயந்து அடுத்தநாளே பேசினேன். அந்த ஆசிரியையின் தந்தை 1940களில் மலேயாவில் (இன்றைய மலேசியா) இருந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் தாத்தாவுக்கு அரை மைல் தொலைவில் இருந்திருக்கிறார் - இறந்திருக்கிறார்.
-ஆறுமுகநேரி தொடரும்/மலேயா தொடங்கும்-
இலை 15
சற்குரு - தாத்தா - 14
ஒவ்வொரு மறைவும் உணர்த்திக் கொண்டே இருந்தும், மறந்து விடும் மனித மனம் - நிலையிலா வாழ்வில் நம் நிலை யாதென்று. ஒரு போர்க்களம் பார்த்துவிட்டால், மரணத்தோடு கணம்தோறும் வாழ்ந்தாக வேண்டிய நாட்களில் ஒருமுறை வாழ்ந்து விட்டால், ஒருவேளை உயிரின் மதிப்பு புரிந்துவிடக்கூடும்.
மாபெரும் மனிதர்களை இழந்திருக்கும் இத்தருணத்தில், வாழ்வு குறித்த - பயனுள்ள வாழ்வு குறித்த பல கேள்விகள் அனைவருக்கும் மனதுக்குள் எழும்பி இருக்கிறது. அதை சற்றே உற்றுநோக்கி மனதுக்குள் விடை தெளிதல் நலம். இல்லையெனில் இயற்கையின் கொடையாக ஞாபக மறதி இருக்கிறதே - அன்றாடக் கவலைகளுக்கு சீக்கிரம் திரும்பி விடுவோம்.
சிற்றலை கரை கடத்தி மீண்டும் அமைதி கொள்ளும் குளம்.
அடிமேல் அடியென அப்பாவின் மறைவுக்குப் பின், மாமாவின் மறைவு... பொதுவாக சமீபத்திய மாதங்களில் பல துறை ஆளுமைகள் அமரர் ஆகி இருக்கிறார்கள். (ஜெயகாந்தன், பாலச்சந்தர், MSV, அப்துல் கலாம் வரை) இறப்பும் இழப்பும் நம் மனதை பண்படுத்தவில்லையெனில், வாழ்வு நமக்கும் பிறர்க்கும் கனியாத காயாய் கசந்துபோக நேரும்.
--------------------
எழுத விழைந்த கதைக் களமும் மரணத்தை சுவாசித்த ஒரு பெரும் போர்ச்சூழல்தான்
1942 - மலேயாவில் கோலாலம்பூர் அருகே ஒரு சிறிய ரயில்வே நிலையம். நாடாள்பவர் யாராயினும் உயிர்வாழ உத்தரவாதமின்றி மக்கள் அலைக்கழியத் தொடங்கியிருந்த காலம்.
நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்ய, அனைவரது பெருமூச்சுக்களையும் சேர்த்து வெளிவிட்டு வந்து நின்றது ஒரு புகைவண்டி. திடுமென போர் விமானங்களின் வருகையைக் குறிக்கும் எச்சரிக்கை சங்கு ஒலித்ததும், அனைவரும் அருகிருந்த பதுங்குகுழிகளுக்குள் பாய, ரயில் பிரயாணிகளுக்கு அலறுவதற்கும் அவகாசம் இன்றிப் போனது - அடுத்த வினாடி பலருக்கும் சுவாசம் நின்றுபோனது - குண்டுகள் ரயில் மீது விழ பெருநாசம். அன்று உயிர் இழந்த நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் என் ஆசிரியையின் தந்தை . சில நூறடிகளுக்குள் குழியில் பதுங்கித் தப்பியவர்களில் ஒருவர் தாத்தா . ஆசிரியையிடம் பேசும் போதே இருவர் உணர்வுகளும் பின்னோக்கிப் பாய்ந்தது. தாத்தாவைப் பார்த்து, தான் பார்க்க இயலாது போன தன் தந்தையை பார்த்ததாய் கண்கலங்கிய தமிழ் ஆசிரியை.
அன்று இரவு, எத்தனையோ முறை தாத்தா கூறக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்டேன்; தாத்தா கடல் கடந்த கதை, உற்றாரைப் பிரிந்து, உலகப் போர் நாட்களில் நிலையாமையை மட்டுமே நித்தமும் பார்த்த கதை. ஆங்கே தன்னிகர் இல்லாத் தலைவர் 'நேதாஜி' யின் INA படையில் இணைந்த கதை.

சாரங்கள் சதமல்ல எனத் தெரியும் தருணம், சாரம் அறுத்தும் எழுந்து நிற்கும் கோபுரங்களாய், மனிதர்கள் வேரறுந்த மண்ணில் வான் நோக்கி உயர்ந்த கதை. உற்றார் யாருமில்லை, பெற்ற மகன் காண வழி இல்லை, நாளை நான் உண்டா, நாளை என ஒன்றுண்டா - எதற்கும் பதில் இல்லை - எனும் போது வாழ்வை இரு விதமாய் கழிக்கலாம். இருப்பது ஒரு வாழ்க்கை, எப்போதும் அறுந்து விழக்கூடிய கத்தி தலை மேல்.
அஞ்சிக் கொண்டும், அஞ்சாதது போல் வாழ்வைக் கட்டற்று மனம் போல் வாழ்வது ஒரு வகை. தோன்றிடின் பயனுற வாழ்வதும், வீழின் விதையென வீழ்வதும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிகழும் நிகழ்வைக் கர்ம பூமியாய்க் கொண்டு களம் புகுவது இரண்டாம் வகை.
தர்மத்தைக் கையில் எடுத்துக் கர்ம பூமியில் களம்புக வாயில் அனைவருக்கும் திறந்தேதான் இருக்கிறது. சிறகு கொண்ட பறவை எல்லாம் வடதுருவம் வரை பறந்தா விடுகிறது!! மதிவேண்டும், மதிகிட்டும் விதி வேண்டும்.

அந்தக் களம் காண, காலம் தாத்தாவைக் கொண்டு சேர்த்த கதை:
தேடல் - மானுடனுக்குள் சுடர்விடும் அணையா நெருப்பு. கடல் கடந்து திரவியம் தேட இன்றொரு வாழ்வுமுறை IT. அன்றொரு வாழ்வுமுறை 'வட்டி'. நகரத்தார் எனும் பெருவணிகர் இல்லங்கள் நடத்திய கிழக்காசிய வாணிபம் - பர்மா, மலேயா, இலங்கை என பல தேசங்களில். நேர்மையும் காரியநேர்த்தியும், நிர்வாகத்திறனும் மிக்க இளைஞர்படையை கணக்குப் பிள்ளைகளாய் காரியமாற்ற இருகரம் நீட்டி இழுத்துக் கொண்டது இவ்வணிக வாழ்வு. வாழ்வை புதைகுழியில் ஆழ்த்தும் இன்றைய கந்து வட்டிக் கடைகள் அல்ல. வணிக நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நவீன வங்கிகளின் முந்தைய வடிவம் இந்த வட்டிக் கடை. நாடாறு மாதம் காடாறு மாதம் என உற்றாரை பெற்றாரை விட்டு வாழ்க்கை. இதன் வாயிலாய் தாய்மண்ணில் வருமானம் பெருக்கி வளம் கண்டது பலரது வாழ்வு.
19 வயதில் (1935) தன் மாமாவோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் சென்றார்கள் தாத்தா . கப்பல் வழி 4 நாள் பயணம் ரங்கூன் - அன்றைய பர்மாவின் தலை நகரம். பல குடும்பங்களின் பொருளாதாரத்தை உச்சியில் ஏற்றவும் அங்கிருந்து சறுக்கவும் செய்த தலைவிதி நகரம்.

முதல் திருமணம் 1938-ல் தாத்தாவுக்கும் அவரது அத்தை மகள் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் நடந்தது.
நல்ல நிறமாயும், சின்னஞ்சிறு பெண் போல இருப்பார்களாம் - பிறர் சொல்லக் கேள்விதான். அதிகாலை காணும் அற்புதக் கனவு, யாரோ அடித்து எழுப்பக் கலைவது போல விதியின் கருணையற்ற கரங்களில் கலைந்தது 5 மாதத்தில். முதற் புள்ளியிலேயே முற்றுப் புள்ளி கொண்டு நிறைவடைந்தது அந்தக் கவிதை.

மாமன் மகளை (சேது அப்பத்தாவை) மணந்தது அடுத்த வருடம் 1939. மிகச் சரியாக மூன்றே மாதங்களில் மருமகனை அழைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள் பசளைத் தாத்தா.

இம்முறை சென்றது கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

அப்போது தெரியாது - யுத்தம் வருவதும், அடுத்த ஆறு வருடங்கள் கழியப் போவது யாருமற்ற வனவாசமும், உற்றார் உறவினரின் இடையறாத மனவாசமும் - இருப்பிடமும் தெரியாமல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையே நடந்த அஞ்ஞாதவாசமும் என்று.


சில தேதிகளும் குறிப்புகளும்:

28-ஜூன்-1935-ல் தன் மாமா ஸ்ரீமான் ராமநாத பிள்ளை அவர்களோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் பயணம் . கப்பல் வழி 4 நாள் பயணம், 1-ஜூலை-1935 ரங்கூன் .

1936-ல் மார்ச் மாதம் இந்தியா வருகை, டிசம்பர் வரை (8 மாதம்) மதுரை வாசம்.

1936 டிசம்பர் ரங்கூன் சென்று 1938 மார்ச்-ல் அடுத்த வருகை.

6-ஏப்ரல்-1938 தாத்தாவுக்கும் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் திருமணம்.
(என்னைப் பல வருடங்கள் கழித்து, பெங்களூர்-ல் உமா அத்தை வீட்டில் பார்த்து சிவசாமி தாத்தா சொன்ன முதல் வார்த்தை செல்லம்மா அப்பத்தா போல இருக்கிறேன் என்பது, வேறு யாரும் அவர்கள் குறித்து விரிவாக சொல்லிக் கேட்டதில்லை).
12-செப்டம்பர்-1938 செல்லம்மாள் அப்பத்தா மறைவு.
சேது அப்பத்தாவை மணந்தது அடுத்த வருடம் 14-டிசம்பர்-1939.
இம்முறை சென்றது கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

சற்குரு - தாத்தா - 15

"பேருந்தில் தனியாகப் பயணம் செய்யப் பழகிக் கொள்" என ஒருமுறை தாத்தா என்னிடம் கூற நான் , - "நீங்கள் தனியாகப் பேருந்துப் பயணம் செய்தது எப்போத...ு தாத்தா?" எனக் கேட்டதற்கு, "19 வயதில் தனியாகக் கப்பல் பிரயாணம் செய்திருக்கிறேன்" என்றார்கள் தாத்தா. முதல்முறை தனது மாமாவுடன் சென்றார்கள்; இரண்டாவது முறை சென்றபோது தனியாகக் கப்பலில் பிரயாணம்.
முதல் முறை 1935 ஜூன் மாதம் ரங்கூன் சென்ற தாத்தா, தாயகம் திரும்பிய போது தாங்கொணாத பல இடிகளை சந்தித்திருந்தது வீடு.

அன்புத் தங்கையை மணம் புரிந்த தாய் மாமா, உடன் வளர்ந்து தோழமையும் பாசமுமாகத் திகழ்ந்த மாமா இளம் வயதில் (22 வயது) மறைந்தார். மலர்ந்து மணம் வீச இதழ் விரித்த இள மொட்டு கருகினாற் போன்ற பேரிழப்பு. பதினாறு வயதுத் தங்கை, 40 நாட்கள் நிரம்பிய கைக்குழந்தையுடன் கைம்பெண்ணாக, கண்ணீராக...

மரணம் தரும் இழப்பு - வலி; உற்ற உறவின் மரணம் - ஆறாத ரணம்; உறவுகளைப் பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் காலங்களில் வரும் துயரச் செய்தி, தனிமை எனும் பூதக்கண்ணாடி வழி நூறாயிரமென உருவெடுக்கும். மூச்சென உள்ளே வியாபிக்கும். அந்த வலியை மனதில் சுமந்து கொண்டு தனிமையில் இருக்கும் காலமும், மேற்கொள்ளும் பயணமும் சிலுவை சுமந்து முள்முடி தாங்கிய பயணமாகத்தான் இருக்கும், இருந்திருக்கும்.

இந்தத் தகவல் மட்டுமே ரங்கூன் வரை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து 21 நாட்களுக்குள் மறைந்த அருமைத் தம்பி ஆறுமுகம் குறித்தும், அன்புத் தங்கை சொர்ணவல்லி குறித்தும் யாரும் செய்தி சொல்லவில்லை. புது மணம் முடித்த தம்பதியராய்ப் பார்த்த தங்கை சௌந்தரத்தை எவ்விதம் இக்கோலத்தில் பார்ப்பது, என்ன ஆறுதல் சொல்வது எனத் தவித்து வீடு சேர்ந்தால், மேலும் இரு மறைவுகளும் சேர்த்து சூறையாடி இருந்தது வீட்டின் மகிழ்ச்சியை. மூத்த மருமகனையும், ஒரு மகளையும் ஒரு மகனையும் இழந்திருந்த வீடு வேறு எப்படி இருக்க முடியும். அடி மேல் அடி வாங்கி கலங்கி நின்றது குடி .

எத்தனை சோதனை வரினும் தளராத இறை நம்பிக்கையும், மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் காட்டிய அன்பும் ஆறுதலுமே ஆணி வேராய்த் தாங்கி இருந்து தழைக்கச் செய்திருக்கிறது முருகன் இல்லத்தை.
முதல் பயணம்; முதல் வேலை; முதல் சம்பளம்; தம்பி தங்கையருக்காய் ஆசையாய் வாங்கிய ஆடைகள் அர்த்தமற்றுக் கிடந்தன. விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி போல வெடிப்புடன் பேசும் இளம் தம்பி ஆறுமுகமும், ஆறு வயதே நிரம்பியிருந்த தங்கை சொர்ணவல்லியும் மீண்டும் காணக் கிடைப்பதில்லை - இந்த நாட்களைக் குறித்துப் பேசும் போதெல்லாம் பேச்சு இடையில் நின்று கண்ணீர் வடிய ஒரு மௌனம் கவிந்து விடும் தாத்தா மேல்.

எதுவரினும் வாழ்க்கை நின்று விடுவதில்லை; அடுத்த வேளையே பசிக்கத்தான் செய்கிறது. எனவே தானும் தளராது, சோர்ந்த சுற்றங்களையும் அரவணைத்து முன் செல்ல வேண்டும் என்பதை சொல்வதற்காகப் பலமுறை இந்த நிகழ்வுகள் குறித்து வலியோடும் வேதனையோடும் சொல்லி இருக்கிறார்கள் தாத்தா.

சற்றே நீள் மூச்சுடன் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது - வாழ்க்கையைப் போல...

ரங்கூன் வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை பற்றி பெரிய அளவில் தகவல்கள் இல்லை. இவற்றில் ஒருமுறை கப்பல் பயணத்தின் போது, ஏதோ ஒருவிதமான விஷக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக, கப்பலை ஒரு சிறு தீவில் நிறுத்தி, அனைவரையும் மருத்துவ சோதனை செய்து இரண்டு நாட்கள் தாமதாக ஏற்றிச் சென்றார்களாம். நோய்வாய்ப்பட்டவர்களை குவாரன்டைன் (quarantine) செய்தார்கள் எனத் தாத்தா கூறிய அன்றுதான் இந்த வார்த்தை அறிமுகம். இன்று வைரஸ் பாதித்த filesஐ கணிணியில் quarantined எனப் பார்க்கும் போதெல்லாம், அந்தப் பெயர் தெரியாத தீவு நினைவுக்கு வரும்.
தாத்தாவுக்கு கோலாலம்பூர் அம்பாங் தெரு AMM firm-ல் வேலை. செட்டியார் தெரு என்றும் அழைக்கப்பட்ட இந்த வீதியில் முக்கியமான வணிக நிறுவனங்களும், வட்டிக்கடைகளும் இருந்திருக்கின்றன. இந்த அம்பாங் வீதி இன்றும் இருக்கிறது. - Leboh Ampang என.

அம்பாங் தெரு - அன்று/இன்று + தாத்தா குறிப்பிடும் மற்றொரு வீதி - பெட்டாலிங் வீதி - அன்று/இன்று





மலேயாவிலிருந்து ரப்பர், ஈயம்( tin ) போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. சார்ட்டர்ட் வங்கி (Chartered bank) என்றழைக்கப்பட்ட (standard chartered ன் மூல வங்கி) வங்கி கோலாலம்பூரிலும், ப்ளாங்கிலும்(சிலாங்கூர்) இருந்திருக்கிறது. ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த பெரும்பாலானோர் தமிழர்கள் - குறிப்பாக இராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து மிக அதிக அளவில் சென்றிருக்கிறார்கள்.
மலேயாவில் கோலாலம்பூரில் தலைமைக் கிளையும், பினாங்கில்(Penang) இன்னொரு கிளையும் இருந்திருக்கிறது தாத்தா வேலை பார்த்த AMM firm-ற்கு. (AM Murugappa Chettiar - Cholamandalam, TI cycles, Carborundum groups குழுமத்தின் 1900களின் தொடக்க வணிகம் இந்த மலேய வட்டிக்கடைகள்)
பினாங் நாட்களைப் பற்றிய பகிர்வுகளே அதிகம்.

மனைவி கருவுற்ற செய்தி, முதல் மகன் (சிவசுந்தரவேலன்) பிறந்த செய்தி, அனைத்தும் கடிதங்கள் வாயிலாகத்தான் தாத்தாவை அடைந்திருக்கிறது. 24 வயது நிரம்பிய இளைஞன், முதல் மனைவியின் இழப்புக்குப் பின், இரண்டாவது திருமணம் முடித்து இரண்டரை மாதங்களில், உறவினர் அனைவரையும் பிரிந்து தனிமையில். அந்த தருணத்தில் சொந்தங்கள் அனைவரின் அன்பையும், ஆசாபாசங்களையும், ஏக்கங்களையும் சிற்சில வரிகளில் பொதித்து சுமந்து வரும் கடிதங்கள் தேவதூதர்களாகவே இருந்திருக்கின்றன.
மகன் பிறந்த மகிழ்ச்சியான செய்தியையும் பிஞ்சு விரல்கள் மஞ்சளில் தோய்த்துப் பதித்த கைத்தடத்தையும் தாங்கி வந்தது ஒரு கடிதம். அதுவே இறுதிக் கடிதம் -தகவல் தொடர்பு அறுந்து போனது.

தொடரும் - (தொடரும், தொடர்பும்)

சற்குரு - தாத்தா - 16

பிஞ்சு விரல் பதித்த கடிதம்கண்டு, அடக்கி வைத்திருந்த நேசம் வெடித்துக் கிளம்ப, 'இன்னைக்கு கப்பல் ஒன்று கிளம்புது சென்னைக்கு, இன்னைக்கே கிளம்புறேன்' என்று தாத்தா செட்டியாரிடம் அனுமதி கேட்க, 'நிலவரம் சரியில்லை.. யுத்தம் ஆரம்பிச்சுடுச்சு. இந்த சூழ்நிலைல கப்பல் போக்குவரத்து பாதுகாப்பானதல்ல' என்று அவர் மறுத்துவிட்டார். துக்கம், கோபம், ஆதங்கம், ஏக்கம் மாற்றி மாற்றி பந்தாட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்ணுறக்கம் தொலைந்த இரவு. 'செட்டியார் ஒத்துக்கொண்டிருந்தால் இந்நேரம் கப்பல் ஏறியிருக்கலாம், இந்நேரம் தாய்மண் நோக்கி பயணம் தொடங்கியிருக்கலாம். பத்துநாட்களில் பெற்ற இளம் மகவு முகம் பார்த்திருக்கலாம். " - அனைத்தையும் கெடுத்து விட்ட முதலாளி மேல் அளவு கடந்த கோபம். உடன் பணிபுரிந்த தோழர்கள் சமாதானப் படுத்தினார்கள்- 'அடுத்த கப்பல்ல போயிடலாம் அண்ணே, கலங்காதீங்க' என்று. 'ஆமாம்..இது என்ன வாழ்வு, அடுத்த கப்பலில் ஏறிவிட வேண்டும், யார் தடுத்தாலும் சரி..' புயலில் கடையுண்ட கடலாய் மனது. அழுதழுது கண்களில் சிவப்பேற விடிந்தது காலை.

மதிய வேளையில் வந்ததோர் சேதி. தாத்தா பயணம் செய்வதாயிருந்த கப்பல் மீது நடுக்கடலில் குண்டுவீச்சு. கப்பல் மூழ்கி பயணம் செய்த அனைவரும் மரணம். செய்தி கேட்டு வெகுநேரம் உடலும் உள்ளமும் நடுங்கிக் கொண்டிருந்தது. வெற்று செய்தியாய் காதில் விழுந்துகொண்டிருந்த யுத்தம், அண்டை வீட்டான் போல் அருகில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தனர் அனைவரும். தெரிந்தவர்கள் சிலரும் பயணப்பட்டிருந்தனர் அந்தக் கப்பலில். அந்த துக்கமும், தான் உயிர் பிழைத்து இன்னும் இருப்பதன் சத்தியமும் நெஞ்சம் உணர, பயணத்தைத் தடுத்தவன் தகப்பனாய்த் தெரிந்தான்.
இடையூறென்பது எப்போதும் கெடுதல் அல்ல - நமக்கு விளங்காத பெரிய ஆடுகளத்தில் நமை பேரிடரிலிருந்து காப்பதற்கும் தடங்கல்கள் நேரிடலாம், என்பதற்கு தாத்தா இதை அடிக்கடி உதாரணமாக சொல்வார்கள்.

அத்தோடு கப்பல் தொடர்பும் நின்று போனது.
சற்குரு - தாத்தா - 17

இரண்டாம் உலகப் போர் முழுத்தீவிரமடைந்தது.

1941 - 1946 இந்தக் காலகட்டத்தை மூன்று தளங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது.

1. உலகமெங்கும் பரவிக்கொண்டிருந்த, உயிருக்கு உத்தரவாதமற்ற போர்ச்சூழல், அதில் பதைபதைப்புடன் வாழ்வு, இதற்கிடையே மகாத்மா காந்தி, நேதாஜி போன்ற தலைவர்களின் தலைமையில் விடுதலை வேட்கை கொண்டு சுகவாழ்வைத் துறந்து விடுதலைப் போராட்டக் களமிறங்கிய ஆயிரமாயிரம் இளைஞர் கூட்டம் என்ற உலகளாவிய சமூகச் சூழல்.

2. உற்றார் உறவினரைப் பிரிந்து, இறப்புக்கும் இருப்புக்கும் இடையில் இடையறாது தவித்து, இருள் கவிந்திருக்கும் நிகழ்காலம் எதிர்காலத்தையும் விழுங்கிவிடுமோ? உயிர் தப்பி ஊர்சேர வழிவகை ஏதும் உண்டா? பிழைத்திருக்கும் நாள்வரை பிழையாதிருப்பேனா? என வினாக்களே வினாடிகளாக தவித்திருந்த புலம்பெயர் மனிதர்களின் வாழ்வு.

3. பெற்ற தாய் தந்தையும், உடன்பிறந்தாரும், கட்டிய மனைவியும், பெற்ற மக்களும் ஒவ்வொரு நாள் விடியலிலும் 'இன்று ஏதேனும் சேதி வாராதா நலமாயிருக்கிறார் என்று, இன்ன தேதியில் வருகிறேன் என்று' என எதிர்பார்த்து, மேற்கே கதிரவனோடு எதிர்பார்ப்பும் மறைய, நாட்களை நரகமெனக் கழித்த உறவுகளின் நிலை.

அனைத்தையும் சுமந்து கொண்டு புவி நித்தம் தன் பயணம் மேற்கொண்டுதானிருந்தது விடியலை நோக்கி..

1941-மலேயா அதிதீவிரமான போர்த்தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த மலேயா மீது ஜப்பானியர் வான்வழித்தாக்குதல் தொடங்கினர்.

மலேயாவின் போர் வரலாற்றில் முக்கியமான தினங்கள் - டிசம்பர் 1941. ஜப்பானியப் படை மலேயாவைக் கைப்பற்றத் தொடங்கியது. கிழக்கு கடற்கரையில் கோட்டாபாருவில்(kota bahru) தொடங்கிய ஜப்பானியர் ஊடுருவல் 11-டிசம்பர் பினாங்கைத் தொட முயற்சித்தது.

நித்தமும் அநித்தியமாகிக் கொண்டிருந்த சூழலிலும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அன்றாடங்களில் புதிதாய் சேர்ந்திருந்த வாடிக்கை - மரணத்தை எண்ணி பதைத்தவாறு பதுங்கு குழிகளில் உயிரைத் தஞ்சமடைவது.

அந்த டிசம்பர் 1941-ல் 25வயது நிரம்பிய தாத்தாவும்(தாத்தா என்ற சொல் ஏற்படுத்தும் வயதான அகத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளவே வயது குறிப்பிடுகிறேன் - 25 வயதே ஆன அய்யாத்துரை) அவரது நண்பரும் பினாங்கிலிருந்து கோலாலம்பூர் சார்ட்டர்ட் வங்கி சென்றிருந்தார்கள். கடைப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வங்கியில் நின்று கொண்டிருந்தார்கள். அபாய சங்கு ஊதிற்று.



சற்குரு - தாத்தா - 18
உயிருக்கு உத்தரவாதமில்லை என்று ஊதிற்று அபாய சங்கு. பணத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும் நண்பரும், வங்கியில் இருந்த அனைவருடன் பதட்டமாய் வெளியேறினர். ஓங்கி அலறிக் கொண்டே இருந்தது சங்கு. தன் உயிரைக் காக்க உடல் பதறி ஓடும் போதும் உள்ளம் பதறுவது உயிரினும் மேலான உறவுகளைக் காணாது போய்விடுவோமோ என்றுதானே. தாத்தா அவசரமாய் இறங்கும்போது கவனம் தவறியதில் படிக்கட்டுகளில் தடுமாறி அத்தனை படிகளிலும் சறுக்கி தரைசேர்ந்து, பாய்ந்து கண்ணுக்குத் தெரிந்த முதல் குழியில் இறங்கிய போது இதயம் காதுகளில் படபடத்தது. மற்ற நேரமாயிருப்பின் படியில் விழுந்த வலி தெரியும். மரணம் கண் முன் ஒத்திகை காட்டும் போது உடல் நினைவில் இருப்பதில்லை.

தலைக்கு மேல் சீழ்கையடித்து பறந்தன சில விமானங்கள். யுகமெனக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அபாயம் நீங்கியதென மணி ஒலித்தது. போரின் தீவிரம் நிதர்சனமாய் உணர முடிந்தது. 

பாம்பின் வாய் பிழைத்து பாழ்நரகில் சிக்கியது போல, ஆங்கிலேயர் பிடியில் இருந்த மலேயாவை முற்றுகையிடத் தொடங்கியிருந்தது ஜப்பான். 'ஆசியா ஆசியர்களுக்கே' என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த முற்றுகை மேலும் கொடுமைகளையே விளைவிக்கப் போகிறது என யாருக்கும் தெரியவில்லை அப்போது..

அவசரமாய் காரில் ஏறிப் பறக்கத் தொடங்கினர் இருவரும் பினாங் நோக்கி. ஆறு மணி நேரத்துக்கும் மேலான பயணம் செல்ல வேண்டும் பினாங் சென்று சேர்வதற்கு. போர் தொடங்கிவிட்ட சூழலில் நெடுஞ்சாலையில் வேறு வாகனங்கள் ஏதுமில்லை. அடர்ந்த மழைக்காடுகள் நிறைந்த பாதையில் பறந்தது கார்.

எதிர்திசையிலிருந்து வந்தது ஒரு போர் வாகனம். ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, நான்கு நாற்பதாக, சாரி சாரியாக எதிர்த்திசையில் வரத்தொடங்கின இராணுவ வாகனங்கள். கண்ணுக்கு எட்டிய வரை முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லை தாத்தாவின் கார் பயணித்த திசையில், பினாங்கை நோக்கி...


சற்குரு - தாத்தா - 19


இன்றைக்கு சரியாய் 74 வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 8 நள்ளிரவில், Pearl harbour தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் முன்னர் மலேயாவின் மேற்கு கரையில் கால்பதித்திருந்தது ஜப்பானியப் படை. மிக சில மணித்துளிகள் போருக்குப் பின் அவ்விடத்தைக் கைப்பற்றியது ஜப்பான். அங்கிருந்த பிரிட்டிஷ் படை, ஜப்பானியப் படையின் உண்மையான நிலையைவிட அதிகம் முன்னேறி விட்டதாய்  கிடைத்த தவறான உளவு செய்தியின் அடிப்படையில், தங்கள்  Lt. Col. Hendricks என்ற கமாண்டரைக் கொன்றுவிட்டு முழு செயல்பாட்டில் இருந்த விமான தளத்தையும், ஆயுதங்கள், எரிபொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறி இருந்தது. அடுத்த சில தினங்களில் ஆங்கிலேயப் படையின் கவனம் முழுதும் pearl harbour பக்கம் திரும்பியிருக்க 11 டிசம்பர் பினாங்கில் வெள்ளோட்டம் பார்த்தது ஜப்பானியப் படை. விமானப் படை ஜப்பானியரின் பலமாய் இருந்தது. ஜப்பானியரை எதிர்க்கப் போதிய படையும் ஆயுதங்களும் இன்றி, பினாங்கை நிராதராவாய் எதிரிகள் தாக்குதலுக்கு விட்டுவிட்டு பொதுமக்களுக்கு எந்த அறிவிப்புமின்றி வெளியேறியது பிரிட்டிஷ் படை.

உண்மையில் ஆங்கிலேயப் படையினரின் அளவைக் குறைவாய் மதிப்பிட்டிருந்தது ஜப்பானியப் படை. எனில் அதன் ஜெனரல் யமஷிட்டோ பின்னாளில் தெரிவித்தது போல் அந்த அறியாமையே அவர்களது பலமாயிருந்தது அப்போது. அதே போல ஜப்பானியர் படை பலத்தை அதிகமாய் நினைத்த அறியாமையே ஆங்கிலேயரின் பலவீனமாய் இருந்தது.

இவை இன்று சரித்திரமாய் காலவரிசைப்படுத்தி படிக்க முடிகிறது. அன்று சரித்திரம் நிகழ்ந்து கொண்டிருந்த போது எத்தகவலும் தெரியாமல், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போன்ற நிலைதான்.

மீண்டும் பினாங் நெடுஞ்சாலைக்கு வருவோம்:

என்ன நிகழ்கிறது என விளங்காது எதிர் வரும் படைகளைப் பார்த்து திகைத்த வண்ணம் இருவரும் விரைந்து கொண்டிருந்தனர். ஜப்பானியர் படை ஊடுருவி விட்டதோ எனப் பார்த்தால், எதிரே சென்றது அனைத்தும் union jack கொடி சுமந்த வெள்ளையர் படை. 'என்ன நடக்கிறது இங்கே!!
எங்கே செல்கிறது இப்படை!!' வியப்பு, பயம், ஆர்வம் மேலிட நம்மவர்களின் நான்கு விழிகள்.

'யார் இந்த இரு இளைஞர்கள்? சாவை எதிர்நோக்கி பினாங் நோக்கி ஆர்வமாய் விரையும் இவர்கள் யார்? நம் படை செல்வதைக் கண்டும் ஒற்றையாய் தனித்து செல்பவர்கள்!!' அதே வியப்பு பல நூறு கண்களில் படையினர் தரப்பில்..

ஆபத்தின் வாடை கலந்திருந்தது காற்றில்.

வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டும்.  இந்த ஆற்றைக் கடந்துதான் கோலாலம்பூர் இருந்த மலேயாவின் தெற்குப் பகுதியிலிருந்து பினாங் மாகாணம்  நுழைய முடியும். சில மைல் தொலைவுகளில் ஆறு இடங்களில்  பாலங்கள் இருந்தன.  இவற்றில் ஏதேனும் ஒன்றில் கடக்க வேண்டும் பினாங் சென்றடைய. அவற்றில் ஒன்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தது கார்.

அப்பாலங்களைக் கடந்து கோலாலம்பூர் நோக்கி பிரிட்டிஷ் படை முழுவதும் கடந்ததும், ஜப்பானியர் படை பின்தொடர்வதைத் தடுப்பதற்கும் காலதாமதப் படுததுவதற்கும் ஆறு பாலங்களையும் வெடிகுண்டு போட்டு தகர்க்க முடிவு செய்து கடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் படை.

கடைசிப் படைவாகனமும் கடந்து முடிக்கவும் தாத்தாவின் கார் பாலத்தில் நுழையவும் மிகச் சரியாக இருந்தது. நிமிடங்களின் பிடியில் ஊசலாடிக் கொண்டிருந்தது உயிர் - இதை அறியாமல் பாலத்தில் நுழைந்தது கார்.

சற்குரு - தாத்தா - 20

கார் பாலத்தைக் கடந்தது. சில நொடிகளில் வெடிகுண்டு தலை மேல் விழுந்தது போன்ற சத்தம். நெஞ்சம் காதில் படபடக்க நடந்தது என்ன என்று திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாலம் வெடித்துத் தகர்ந்திருந்தது.  மயிரிழையில் உயிர் பிழைத்த பதைபதைப்புடன்  புயல் வேகம் எடுத்தனர். அதே சமயம் அந்த ஆற்றின் ஆறு பாலங்களும் தகர்க்கப்பட்டிருந்தன. சில நிமிடங்கள் பின்தங்கியிருந்தால் வீடு சேர முடியாமல் அக்கரையிலும் சில நொடிகள் பின்தங்கியிருந்தால் உயிர் பிழைக்க முடியாமலும் ஸ்லிம் ஆற்றின் கரையில் இக்கதை முடிந்திருக்கக் கூடும்.

பினாங் நெருங்கிக் கொண்டிருந்தது. பேசிக் கொள்ளவும் முடியாத கலவரத்தில் இருவரும். அப்போது சாலையோரத்தில் ஒரு சக்கரம் அதிவேகமாய் காருக்கு முன்னால் ஓடுவதைப் பார்த்து வியந்.. சரேல் என  சறுக்கி கார் பக்கத்தில் இறங்கி   பாதியில் நின்ற வியப்பை உறுதிப்படுத்தியது - ஆம் அது அவர்களது காரின் சக்கரம்தான்.
விதியையும் வெல்லக்கூடும் வெல்வதாக விதியிருந்தால் - அப்படி பிழைப்பதாய் விதியிருக்கவே அந்நிய நாட்டு வீதியில் விதி முடியாமல் பினாங் சென்று சேர்ந்தனர்.

அதன் பிறகு தொடங்கியது ஓர் இருண்ட காலம். போரின் பேரிரைச்சலில் அனைவரும் மருண்ட காலம். வெள்ளையர் பினாங்கை விட்டு வெளியேறியது அறியாமல் பினாங்கை தாக்கத் துவங்கியது ஜப்பான். அடுத்த நாள் காலை, துறைமுக வணிக நகரமான பினாங்கின் பரபரப்பான காலை நேரம். பொதுமக்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. வழக்கம் போல் மொத்த வியாபாரத்திற்கு கூட்டம் நெரித்துக் கொண்டிருந்தது செட்டியார் வீதிகளிலும் அருகிலிருந்த சைனாடவுன் பகுதிகளிலும். (இன்றைய சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா, சைனா டவுன் போன்றே பினாங்கிலும் இவ்விரு மக்களும் வாழும் இடங்கள் அந்தந்த நாட்டின் அடையாளங்களோடு பினாங்கில் இருந்திருக்கின்றன, இருக்கின்றன.) காற்று வினோதமான பறவை ஒன்றைப் போல் ஒலிக்க, போர் விமானங்கள் வியூகம் அமைத்து வானில் வருவதைப் பார்க்க அனைவரும் வியப்போடு வானத்தைப் பார்த்திருக்கிறார்கள். காதை தீய்ப்பது போன்ற ஒலியுடன் மழை பொழியத் தொடங்கியது - குண்டு மழை. Carpet bombing (படம் இணைக்கபட்டுள்ளது) என்றழைக்கப்படும் தொடர் குண்டுகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சைனாடவுன் பகுதிக்கருகே விழுந்தன.  ரத்தக் களறியாய் சதைப் பிண்டங்களாய் மக்களை  விசிறியடித்துவிட்டு வந்த வேகத்தில் பறந்து சென்றன விமானங்கள்.





வெடிகுண்டு வானில் இருந்து விழும் சத்தம் கேட்டால் அருகில் எங்கோ விழுகிறது; சத்தம் கேட்காவிட்டால் நம் தலைமேல் விழுகிறது - அதை சொல்லவும் உயிரோடு இருக்க மாட்டோம் என்பதெல்லாம் அப்போது உணர்ந்த பாடங்கள்.

ஆட்சி செய்வது ராமனோ ராவணனோ நாம் நம் வயிற்றை கவனிப்போம் என்றிருந்த, உலக அரசியலின் போக்கை சிறிதும் உணரமுடியாது இருந்த சராரசரி மக்களின் தலையில் வீழ்ந்தது பேரிடி. எங்கோ செய்தித்தாள் நிகழ்வாய் இருந்த போர், அயல்நாடுகளில் நடந்த போர், அண்டை வீட்டானாய் நிகழ்ந்த போர் அவர்கள் வீட்டுக்குள் குடியேறி வீட்டையும் தகர்த்து அனைவரையும் வெளியில் இழுத்துப் போட்டு கோரமாய் சிரித்தது.

சற்குரு - தாத்தா - 21

டிசம்பர் 1941 - பினாங் நகர வரலாற்றின் எரி தினங்கள். தீயணைப்பு நிலையத்தின் மேல் தாக்குதல் நடத்தி நாசப்படுத்தியதில் பற்றி எரிந்த நகரின் நிலை நரகமாயிற்று.
காவலன் காவான் எனின் எது நிகழுமோ அதுவே நிகழ்ந்தது. அதுவும் கையறு நிலையில் நாட்டைப் பகைவன் தாக்குதலுக்கு விட்டுவிட்டு எந்த அறிவிப்புமின்றி நிராதரவாக்கியிருந்தது மாட்சிமை பொருந்திய நிர்வாகம்.
இதற்கு ஒரு தினம் முன்னதாகவே ஆங்கிலேய அரசின் அத்தனை ஆங்கிலேய அலுவலர்களுக்கும் ரகசிய ஆணை பிறப்பித்து இரவோடு இரவாக கப்பலேற்றினர். அதனிடையே பினாங் நகராட்சியில் பணிபுரிந்த ஒரு சீனருக்கும் அந்த அழைப்பு வந்திருந்தது - 'நள்ளிரவில் துறைமுகத்துக்கு குடும்பத்துடன் வரவும்'; அவ்வளவுதான் தகவல். காரணம் அறியாத அவரும் துறைமுகம் சென்றடைய அவருக்கு அதிர்ச்சி - நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கணவான்களும் அவர்கள் குடும்பத்தினரும் அவசரஅவசரமாய் கப்பலேற, இவரும் ஏதென்று அறியாமல் ஏற முற்பட்ட போது, தடுத்து நிறுத்தப்பட்டார். தானும் ஆங்கிலேய அரசின் உயரதிகாரி என்று தெரிவித்து ஆணையைக் காட்டிய போதும், 'தவறுதலாக உங்களுக்குத் தகவல் அனுப்பப் பட்டுவிட்டது. கப்பலில் வெள்ளையர்களை மட்டுமே ஏற்றிக் கொள்ள அனுமதி' என்று இறக்கி விடப்பட்டார். சூரியன் மறையாத ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் ஒற்றைப் பிரதிநியாய், இருளில் தனித்து விடப்பட்டு எவ்விதம் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற எந்த ஆணையும் இன்றி நின்ற போது, அதுவரை அசைக்க முடியாதிருந்த ராஜவிசுவாசமும் நம்பிக்கையும் அவருக்கும் ஆட்டம் கண்டது. அவர் மூலம் சிறிது சிறிதாய் தாங்கள் நிராதரவாய் விடப்பட்ட நிலை மக்களுக்குப் புரிந்தது.
அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்களில் நிலைகுலைந்த மக்கள் மேய்ப்பன் இல்லா மந்தையாய் அலைந்தனர்.
உள்ளூர் மக்கள் மலைப்புற கிராமங்களையும் ரப்பர் தோட்டங்களையும் நோக்கி பயந்து ஓடினர். அதைத் தொடர்ந்து தாத்தாவும் உடன் பணிபுரிந்தவர்களும் காடுகளுக்கும் மலையில் ரப்பர் தோட்டங்களுக்கும் சென்று தங்க முடிவு செய்தனர். தண்ணீர்மலையான் என்னும் பாலதண்டாயுதபாணியை வணங்கி வாணிபத்தையும், வீடுவாசலையும் விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்து வெளியேறியது நகரத்தார் குடும்பங்கள்.
நேற்றிருந்தார் இன்றில்லை எனும் போது நாளை என்பது யார் வசம் - அனைத்தையும் மேலிருந்து பார்க்கும் அவன் வசமா? விமானத்தில் வரும் எமன் வசமா?

Bombing in malaya rubber plantation

Stocks of rubber in a rubber plantation in Malaya burnt.. Source: http://ww2today.com/7th-january-1942-japanese-break-through-at-the-battle-of-the-slim-river


சற்குரு - தாத்தா - 21 தொடர்ச்சி


அக்கரை நிலை இவ்வண்ணமெனில் வீட்டில் அதனினும் மேலாய் தாயும், தகப்பனும், உடன்பிறந்தோரும் தகவலறிய வழியின்றி கடிதம் மேல் கடிதம் எழுதிக்கொண்டு, ஏதேனும் வழியில் நல்ல செய்தி வந்துவிடாதா என நம்பிக்கையோடு காத்துக்கொண்டு நாட்கள் நீண்டு வருடங்களாயின.

"ஆசை மனதுக்கு வாசலை வைத்துப் போனவன் போனான்டி 
(போனவன் போனான்டி)
வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவான்டி" - படகோட்டி படத்து வாலியின் வரிகள்; நெய்தல் நிலத்து இரங்கலையும் ஏக்கத்தையும் சுமந்த நெஞ்சை மயக்கும் சுசீலாம்மா குரலில், எப்போது கேட்டாலும் மனதை வருடும்.

போனவர் குறித்த எந்தத் தகவலுமின்றி கடலைப் பார்த்துப் பார்த்து ஏங்கும் பேதை நெஞ்சின் வரிகள். தாத்தாவின் நினைவலைகள் போர்க்களத்தில் நிற்கும் தருணமதில், அன்று எப்படி இருந்திருக்கும் அப்பத்தாவின் மனநிலை? மணமாகி சிலமாதங்களில் கிளம்பிச் சென்ற கைப்பிடித்த அத்தை மகன்;அவர் சென்ற திசையில் போர்முரசொலிக்க, கடிதங்களே இல்லை; அனுதினம் யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளும் உயிரிழப்புகளும் செய்திகளாய் வர, தனக்கான செய்தியும் அதில்தான் இருக்கிறதோ என மனம் தவித்த தவிப்பு யார் அறிவார். தகவல் ஏதும் அறிய முடியாத நிலைகளில் மனம் போடும் நாடகங்கள் அனைத்தும் அச்சத்தையும் ஐயத்தையும் பெருக்குவதாகவே இருக்கும் என்று நாம் உணரமுடியும். நாம் தொடர்பு கொள்ளும் நபர் 10 முறை தொடர்ந்து போனை எடுக்கவில்லை என்றாலே என்னவெல்லாம் கற்பனை செய்கிறது மனது. "யாருமே மிச்சமில்லையாம்.. மலேயாவில் எல்லாம் ஊரே அழிந்துவிட்டதாம்" என்றெல்லாம் பரவும் பரபரப்பு வதந்திகள்.

தங்கமாய் குலம்விளங்கப் பெற்றெடுத்த ஆண்மகவு முகம் பார்க்கவும் வரமுடியாத கணவன்; குழந்தை பிறந்த செய்திக்கும் பதில் ஏதுமில்லை; தவழும் பிள்ளைக்கு முகம் காட்டவேனும் எப்போ வருவாரோ எந்தன் கலி தீர என்று எப்படித் தவித்திருக்கும் அந்த மனது. கணவன் உயிரோடுதான் இருப்பான் என எந்த நம்பிக்கையில் உலவுகிறாள் என ஊர் மெல்லப் பின்னால் பேசத் தொடங்கியிருப்பதும் அரசல் புரசலாயாய் காதில் விழவே செய்கிறது. அனைத்தையும் அடிமனதில் அடக்கிக் கொண்டு, பழநியாண்டவன் பதங்களைப் பற்றிக் கொண்டு, நாட்களைக் கழித்த அப்பத்தா சேதுரத்தினம். இன்று அவர்களது 93ஆவது பிறந்ததினம்.

சற்குரு - தாத்தா - 22
மலைக்காடுகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் ஒளிந்து வாழ்ந்தும், இடங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டும் உடன் பணிபுரிந்தவர்களோடு தொடர்ந்தது சிலகாலம். கடிதங்களில் மட்டுமே ஸ்பரிசிக்கும் தாயகத் தொடர்பும் அடியோடு நின்று போயிருந்தது. தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்கிய எதிர்காலத்தை எண்ணிய இருண்ட நாட்கள். இரவில் ஒளிமிக்க விளக்குகள் ஏற்றத் தடை. ஊர்கள் இருக்குமிடம் தெரிந்தால் குண்டுகள் விழலாம் என்ற அச்சம்.
மாலையில் வீட்டுக் கதைகளை நண்பர்களோடு அசைபோட்டபடி தொடங்கும் உரையாடல்கள் பெரும்பாலும் மனம் கனக்க முடியும். இரவு புரண்டு புரண்டு ஒருவழியாய் மனம் களைத்து உறங்கத் தொடங்குகையில், ஊளையிடும் போர்விமான எச்சரிக்கை முழக்கம். இருளிலும் நிழலெனத் தொடரும் மரணவாடை. பதறியடித்து மாடியிலிருந்து படிகளில் தாவி இறங்கி காட்டுப் பகுதியில் இருக்கும் குழிகளில் பதுங்கி விமானம் தலைக்கு சில நூறடிகள் மேலே பறக்க, உயிர் அதற்கும் சில அடிகள் கீழே பதறித் தவிக்க, அபாயம் நீங்கிய அறிவிப்பு ஒலிக்கும். அதுவரை புதர் மறைவில் இருந்து வேறு நச்சரவு அபாயம் வராது என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும். மெல்ல மீண்டும் படுக்கைகளுக்குத் திரும்பினால், வெளியேறிச் செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கும் சில வயதானவர்கள் - "எமனோடு ஓடிப் பிடித்து விளையாடத் தெம்பு இல்லை, இங்கேயே பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிட்டோம்" என்று விரக்தி சிரிப்போடு சொல்வார்கள்.
அது போன்ற ஒரு மாலை வேளை. இருள்கவியத் தொடங்கியிருந்தது. இருளுக்குள் ஒடுங்கத் தொடங்கியிருந்தனர் அனைவரும். வழக்கம் போன்ற விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி. இது வாடிக்கையாகிவிட்டது போன்ற வழக்கத்துடன் அனைவரும் பதுங்கினர்.
அதேநேரம் அருகில் அரைகிலோமீட்டர் தொலைவில் ஒரு ரயில் சிறு ரயில்நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. மலைப்புற கிராமப்புற மக்களுக்கும் நகரத்துக்கும் இருந்த ஒரே தொப்புள்கொடித்தொடர்பு அந்த ரயில். காய்களும் அரிசியும் அன்றாடத் தேவைகளும் மலேயாவின் பிற பகுதிகளில் இருந்து பெரும்பாலும் இந்த ரயில் வழியாகவே வந்து கொண்டிருந்தது. ஏறுவதற்கு ஆயத்தமாயிருந்தவர்களும், நிலைய ஊழியர்களும் எச்சரிக்கை சங்கொலி கேட்டு செய்வதறியாது திகைக்க, காலனை அருகில் உணர்ந்தது போல் பெருமூச்சு விட்டது ரயில். அடுத்த விநாடி அங்கிருந்த ஏறக்குறைய 200-300 பேர் உயிர் குடித்தது மழையெனப் பொழிந்த குண்டுகள். காது செவிடாகிய உணர்வோடு பதைப்போடு குழியைவிட்டு தாத்தாவும் நண்பர்களும் வெளியேறினர். சிலவிநாடி முன் மக்கள்திரளோடு இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையம் நிணமும் சதையுமாய் பற்றி எரிந்து கருகும் நெடியோடு புகையும் பெரு ஓலமுமாய் சரிந்திருந்தது. பதறித் துடித்து ஓடினர். அங்கு கண்ட காட்சி போரின் கொடிய கோர அழிவு முகத்தை மீண்டும் காட்டியது. பலநாள் உணவுண்ணவும் முடியாமல் மனம் அதிர்ந்து போயினர்.
எத்தனையோ போர் செய்திகளும் ஜப்பானியர் முகாம்களில் நடக்கும் கொடுமைகளும் தினம்தோறும் வாடிக்கை செய்தியாகிவிட்ட போதிலும், தலைக்கு மிக அருகில் தொங்கும் கத்தியென மரணத்தை உணர்த்திய, அரைகிலோமீட்டர் தொலைவில் நடந்த இப்பேரழிவு வெகுவாய் அனைவரையும் பாதித்துவிட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான ரயிலில்தான், நான் முன்னர் குறிப்பிட்ட, எனது தூத்துக்குடி பள்ளியின் ஆறாம் வகுப்புத் தமிழாசிரியையின் தந்தை அன்று அந்த விநாடி இருந்தார், இல்லாது போனார்.


சற்குரு - தாத்தா - 23
மீண்டும் கடந்தகாலத்துள் நிகழ்காலம். (சற்குரு - தாத்தா - 13லிருந்து http://manaodai.blogspot.com/2015/07/13.html தொடரும் ஆறுமுகநேரி)
போர்க்கரையில் கதையை நிறுத்தி விட்டு எங்கு செல்கிறாய் என்போருக்கு - இப்படித்தான் ஆபத்தான இடங்களில் தாத்தா கதையை நிறுத்திவிட, அடுத்த நடை வரை காத்திருக்க வேண்டும். காத்திருத்தலில் ஒரு சுகமுண்டு. இன்றைய உடனடித்துவ உலகில் காத்திருத்தலுக்கான பொறுமை காணாமல்போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் காலம் கற்றுக் கொடுக்கும், காத்திருக்கவும், கடந்து செல்லவும்.
மீள்வோம்.மலேயாவின் கதைகள் இவ்விதமாய் ஒவ்வொரு நடையிலும் நீளும். இந்தக் கதைகள் கேட்கக் கேட்க அலுத்ததே கிடையாது. ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் மாலையில் மிகவும் எதிர்நோக்கும் தருணங்களாய் நடை நேரம். தொற்றிக் கொள்ளும் கதையின் சுவாரசியமும் தீவிரமும் பள்ளியில் நண்பர்களிடமும் பகிர என் நட்பு வட்டத்தில் என்றுமே (இன்றுவரை) தாத்தா ஒரு மையப்புள்ளியாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். கதை வாயிலாய் மட்டுமன்றி, வீட்டின் அருகிருந்த தோழிகள் தாத்தாவுடனான காலை/மாலை பேச்சுக்களிலும், தியான வேளைகளிலும் உடன் வர ஆரம்பிப்பதுண்டு. வயது பாரபட்சமின்றி மிக இயல்பாகத் தன் உற்சாகமான உரையாடல் மற்றும் அக்கறையோடு கூடிய ஊக்கமூட்டும் பேச்சுகள் வாயிலாக ஒரு வாழ்நாள் உறவையும், நல்லியல் சுவடுகளையும் தாத்தா பதிப்பதை அருகிருந்து காணக் கிடைத்தது. என் தோழியர் அனைவரும் தாத்தாவின் நட்பு வட்டத்துக்குள்ளும் வருவது வழக்கமாயிற்று.
அவ்விதம் ஆறுமுகநேரியிலும் பின்னர் தாராபுரத்திலும், மிகச் சிறந்த தருணங்கள் மலர்ந்து, புதிதாக அரும்பத் தொடங்கியிருந்த நட்பு வட்டங்களை நினைவுகளில் நிரந்தரமாக்கியது. அவர்கள் ஒவ்வொருவரும் இன்று வரை தாத்தா குறித்துப் பேசுவதும் தொடர்கிறது.
அடுத்ததாக மாலை நேர வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோன்றும் விண்மீன்களாய் random ஆக அகத்தில் மிளிரும் சில நினைவு நட்சத்திரங்கள்:
ஆறுமுகநேரியிலிருந்து அதிகாலை இருள் பிரியும் முன்னர் நாலரை மணியளவில் எழுந்து கிளம்பி திருச்செந்தூர் வரை சென்ற பாதயாத்திரை. விடிவெள்ளியும் நட்சத்திரங்களும் மறைவதன் முன் இருள் பிரியா அழகோடு அதிகாலை வானம். பிரம்மமுகூர்த்தம் - தேவர்களுக்கும் உகந்த காலம், கற்கும் கலையை கல்மேல் எழுத்தாய் மாற்ற கலைமகள் அருளும் தருணம். அதிகாலையின் சிறப்பைக் குறித்தும், ozone காலை வேளையில் உடலுக்கு நலம் தருவது குறித்தும், பேசிய காலைநேர நடைபயணம். சில காதம் கடந்ததும், முதற்கதிர் நீட்டும் கதிரவனை கண்கொட்டாது பார்த்து, கண்களை மூடிக் கொண்டு, மூடிய கண்களுக்குள் சுழலும் ஒளித்திகிரியை பார்க்கச் சொல்லும் பயிற்சி. விடுமுறைக்கு வந்திருந்த தங்கை ஜெயஸ்ரீயும் நானும் ஏதேதோ பேசிக் கொண்டே தாத்தாவுடன் பத்து பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்து திருச்செந்தூர் அடைந்தது, கடலலையில் கால்நனைத்து, செந்திலாண்டவன் பாதம் பணிந்தது, ஓம் என ஓங்காரமிடும் அலை ஒலியை ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மதில் சுவர் துவாரத்தில் கேட்டது என அனைத்தும் சுடர்விடுகிறது மனப்பேழையில்.
அடுத்து வருவதும் ஒளியேற்றிய தருணம் குறித்துதான்.
காரைக்குடியில் ஒரு கோடை விடுமுறை - செக்காலையில் வீட்டில் இருந்து தொடங்கி கண்ணதாசன் மணிமண்டபம் வரை ஒரு நாள், இளங்காற்றில் கலகலவென சிரிக்கும் அரசமரங்கள் நிறைந்த குளக்கரை ஆஞ்சநேயர் கோவில் வரை ஒரு நாள், என ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு திக்கில் விஜயம் தங்கையருடன்.
ஒவ்வொரு நடையின்போது உலகம் புதிதாய் மொட்டவிழ்ந்து கொள்ளும் - வீட்டுத் தோட்டத்திலேயே வேரில் காய்த்துத் தொங்கும் பலா, தெருப் பாய்ச்சலாய் அமையும் வீடுகளில் வாசலில் அமர்ந்திருக்கும் விநாயகர், களவாடி வேறிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டால் சிறப்பு எனக் கருதி கடத்தப்படும் அபாயத்தால் கம்பிச் சிறைக்குள் அமர்ந்திருக்கும் பிள்ளையார்கள் என சிறு சிறு கவிதைகள் அறிமுகமான அழகிய நாட்கள்.
அங்கு ஒருநாள் - நடை நேரத்தில் செம்மை வீதியெங்கும் உருகி வழிந்து காணும் இடமெல்லாம் மருதோன்றி இட்டிருந்தது. நடை முடித்து நாங்கள் வீடடையும் வேளை, கதிரொளி கூடடைந்திருந்தது. செம்மை மேல் கருமை படர்ந்து இரவு மேலும் இருள் கொள்ளத் தொடங்கியிருந்தது. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. அம்மா தன் பெயருக்கிணங்க ஏற்றியிருந்த ஜோதி மட்டும் அறையில் இருந்தது. தாத்தா எங்களை அருகில் அழைத்து பாடல் ஒன்று சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்கள். இதைப் பாடுங்கள் மின்சாரம் வரும் ஒளி நிறையும் என்று சொல்லி 'அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்'.. பாடத் தொடங்கினார்கள். நாங்கள் அனைவரும் பாட, கூடம் அசையாச்சுடர் விளக்கின் பொன்னொளியில் நிறைந்திருந்தது. பாடல் முடியவும் மின் விளக்குகள் உயிர் பெறவும், அன்று அது ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் அந்த நாள், அந்த அந்தி வேளை, அந்தப் பாடல், அன்று அங்கிருந்த எங்கள் அனைவர் மனதிலும் நித்தியமாயிற்று. அன்றிலிருந்து இன்றுவரை மின்சாரத் தடை ஏற்படும் ஒவ்வொரு பொழுதுகளிலும் தாத்தாவின் மெல்லிய குரலில் அந்தப் பாடலும் அந்த நாளும் எங்கள் அனைவர் மனதிலும் வந்து ஒளிநிறைக்கும்.


சற்குரு - தாத்தா - 24
மலேயா: போர் ஓயும் வழியாகத் தெரியவில்லை. இனி இப்படித்தான், கொத்தடிமைகளாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது போன்ற பேச்சுகள் தொடங்கின. உலகெங்கும் கோலோச்சும் ஆங்கிலேயனையே இரவோடு இரவாக அஞ்சி ஓடச் செய்து விட்டது ஜப்பான். சிங்கப்பூர் ஒரே நாளில் விழுந்துவிட்டது, எதிர்ப்போரையெல்லாம் கடற்கரையில் நிற்க வைத்து தலையை வெட்டியும் கைகளை பின்னுக்குக் கட்டி சுட்டுக் கடலில் தள்ளியும் கொன்று குவிக்கிறார்கள். சிறிது திடகாத்திரமாய் இருக்கும் பொதுமக்களையெல்லாம் பிடித்து சியாம் மரண ரயில் பாதை கட்டுமானத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். கொலையினும் கொடுமையாய் நரகினும் கொடூரமாய் வாழ்க்கை மாறி வருகிறது. மானுடனுக்குள் ஒளிந்திருக்கும் குரூரங்களை அள்ளி இரைத்தது போர்.
இவ்வாறெல்லாம் தினந்தோறும் வரும் செய்திகள் பீதியை உண்டு பண்ணத் தொடங்கியது.
[அந்த சமயத்தில் ஜப்பானியர்கள் நிகழ்த்திய போர்க் கொடூரங்கள் கணக்கற்றது. அகப்பட்ட பெண்களை எல்லாம் வயது வித்தியாசமின்றி சிறைப்பிடித்து பாலியல் அடிமைகளாய் 'Comfort homes' என்ற பெயரில் சிதைத்திருக்கிறார்கள். அதனால் இன்றும் அது குறித்த கசந்த நினைவுகள் இங்கு கிழக்காசிய நாடுகளில் அதிகம். இது குறித்த History channelல் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளுக்கு இங்கு பார்க்கவும் -
http://anilnetto.com/…/malaysian-history/fall-of-penang-du…/
நேதாஜி ஜப்பானியர்கள் உதவியுடன் படை அமைத்ததால் சிங்கப்பூர்/மலேசியாவில் INA மற்றும் சுபாஷ் குறித்த எதிர்மறை உணர்வுகளும் நிறைய இருக்கின்றன. ஹிட்லர், முசோலினி மற்றும் ஜப்பானியரோடு கொண்ட போர் படைகளுக்கான கூட்டு என்பது, அவரவரது சொந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதும், தனிப்பட்ட முறையில் ஜப்பானது போர் முறைகளிலும், நிகழ்ந்த போர்க் கொடுமைகளை அவர் எதிர்த்ததும் பெரிய அளவில் தெளிவு செய்யப்படவில்லை. ]
குண்டடி பட்டு வீழ்வதாயினும் மரணம் ஒரு முறைதான். இறப்பினும் கொடிய வாழ்வுக்கு அஞ்சியே ஒவ்வொரு வினாடியும் இருத்தல் என்பது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக மாற்றத் தொடங்கியது.
இவ்விதமாய் நரகத்து வாழ்வில் உழலும் போது, கோலாலம்பூர் கடையிலிருந்து வந்த நண்பர் ஒருவர் பலமாதம் முன்பு எழுதப்பட்டு உலகெல்லாம் சுற்றி வந்து சேர்ந்த உயிர் காக்கும் மருந்தோடு வந்து சேர்ந்தார். ஆம், கடிதம்!! அருமைத் தந்தையிடமிருந்து உறவுகளின் ஸ்பரிசத்தோடு கவலைகளோடு பிரார்த்தனைகளை சுமந்த கடிதம்.ஜப்பானியர்களின் கண்காணிப்பால் உறை பிரிந்து தான் வந்து சேர்ந்திருந்தது. எனினும் கடிதத்தை வெளியே எடுப்பதற்குள் மெய்தான் அரும்பி, விதிர்விதிர்த்து, கண்ணீர்த்திரைக்குப் பின் மங்கலாகத் தெரிந்தது ஐயாவிடமிருந்து வந்த கடிதம்.
உயிர் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் குறைவான நிலையில் தெய்வ சாந்நித்தியமாய் வந்த கடிதம். அதுவே காலடிகளை முன்னோக்கி எடுத்து வைக்க உதவும் ஊன்றுகோலாகியது. இதற்கு முன் மகன் பிறந்த செய்தி வந்ததுதான் கடைசிக் கடிதம் அது பலநூறு முறை படித்துக் கண்ணீர் படிந்து நொய்ந்திருந்தது. அடுத்தது இந்தக் கடிதம் கலங்கரை விளக்கமாய்.
இதே போல வேறு ஒருவருக்குத் தன் தாயிடம் இருந்து கடிதம் வந்து சேர்ந்திருக்க, கண்ணீர் வெள்ளமெனப் பெருக, அதைப் படிக்க முற்படும்போது ஊதியது அபாயச் சங்கு. கடிதத்தை உயிரினும் மேலாய் சுமந்து ஓடி குழிக்குள் மறைந்து, பல மாதங்களாய் காத்திருந்து வந்த செய்தி கையில் கிட்டியும் படிக்க முடியாத சுமை நெஞ்சையழுத்த, குழிக்குள்ளேயே கடிதத்தைப் பிரித்து படிக்க அவர் முற்பட்டார். தலை மேல் விமானம் பறக்க, வேகமாய் காற்று வீசியது - எமனின் பாசக் கயிறா அது? கடிதம் அவர் கையை விட்டுப் பறந்தது. உயிர் பறந்தது போன்ற உணர்வுடன் பதைத்து வெளியேறினார்; கடிதத்தை எட்டிப் பிடிக்க ஓடினார். குண்டு வீழ்ந்தது. அவர் சில நொடிகளுக்கு முன் பதுங்கியிருந்த குழியில்.. மரணத்தைத் தட்டி எறிந்திருந்தாள் அந்தத் தாய். தாய்மடியில் சேயாய் கடிதம் அவரை சுமந்து காத்துநின்றது. பல்லாயிரம் மைல் அக்கரையில் காத்து நிற்கும் உறவுகளின் பாசமும் பிரார்த்தனையும் கவசமாய் உடன் வருவது சத்தியமாய்க் கண் முன் தெரிந்தது.
மனிதனின் சின்னஞ்சிறு பிரயத்தனங்களைத் தாண்டி இதுபோல பிரார்த்தனைகளும், அன்பும், முனனோர் அருளும், இறை அருளும் துணை வரும் என்பதை நமக்கு நினைவூட்டும் இந்நிகழ்வுகள்.


சற்குரு - தாத்தா - 25
நினைவின் அலைகளில் மிதந்து வந்து இன்று கரையேறிய இலை ஒரு தீபாவளித் திருநாள்.
பொதுவாக பண்டிகை தினங்கள் அனைத்துமே சூரியன் வருவதற்கு முன்னரே நிகழ்ந்துவிட்டிருக்கும். குளித்து திருநீர் மணக்க அமர்ந்து, புத்தாடைகளுக்கு சந்தன குங்குமமிட்டு, தாத்தா ஆசி வழங்கும் அதிகாலைகள்.
அப்படி ஒரு தீபாவளி நன்னாள். பேரன் பேத்தியர் பலரும் கூடியிருக்கிறோம் (தேவி, ஜெயஸ்ரீ, ரம்யா, ராஜேஷ்,பாலா மற்றும் நான்) அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்கள் தாத்தா. 'திருமலை நாயக்கர் மஹாலுக்குப் போகலாமா? கோவிலுக்குப் போகலாமா?' எனத் தாத்தா வினவ, அனைவரும் 'கோவிலுக்கு' எனச் சொல்ல (எவ்வளவு நல்ல பிள்ளைகள்!!) , படை கிளம்பியது பரங்குன்றை நோக்கி. ஊரெங்கும் வெடி வெடிக்கும் ஒலி; எனக்கோ மனதில் கிலி. வெடி என்றால் இன்றும் கிலிதான் - அதனாலேயே தீபாவளியை விட பொங்கல் திருநாள்தான் பிடிக்கும். வெடிக்கு பயந்து அழுது தாத்தாவிடம் திட்டு வாங்கும் தீபாவளிகள்...
திருப்பரங்குன்றம் அடைந்ததும், 'கோவிலுக்குள் போகலாமா? மலை மேல் ஏறலாமா?' எனத் தாத்தா கேட்க, 'மலை மேல் என்ன இருக்கு தாத்தா?' என்று நாங்கள் வினவ, 'அட, பார்த்ததில்லையா? வாங்க போகலாம்' எனத் தாத்தா கூறினார்கள். அனைவரும் உற்சாகமாய் மலையேறத் தொடங்கினோம். இளையவர்களான பாலாவும் ரம்யாவும் குச்சிமிட்டாய் கையில் வேலென ஏந்தி ஏறினார்கள்.

பாதி வழி வரை வெகு உற்சாகமாய் இருந்தது பயணம். காலத்தில் அழியாத கற்பாறைச் சுவடுகளில் எங்கள் சிறு பாதம் பதித்து, தலைவனைத் தொடரும் சேனையாய் மலையேறிக் கொண்டிருந்தோம். வெயிலேறத் தொடங்கியது. தாத்தா ஓரிடத்தில் இளைப்பாற அமர்ந்தார்கள். நாங்கள் சற்று முன்னால் ஏறிச் சென்று கொண்டிருந்தோம்.
எங்கள் படை வருவதைப் பார்த்து நெடுநாள் பிரிந்த உற்றாரைக் காண வரும் உற்சாகத்தோடு வரவேற்றது ஒரு வானரப் படை. குட்டி முதல் குலமூதாதை வரை பெருங்குடும்பம். அனைவரும் ஒரே நேரத்தில பயத்தில் 'தாத்தா!! தாத்தா!!!' என்று அலறினோம். என்ன நிகழ்ந்ததோ எனப் பதற்றத்துடன் மேலே மிக விரைவாக ஏறி வந்தார்கள் தாத்தா(அப்போதே தாத்தாவுக்கு ஏறக்குறைய 75 வயது, இன்றைய தலைமுறைக்கு 75வயதில் திருப்பரங்குன்ற மலையேற முடியுமா, மலையை விட்டு விடலாம், திருப்பரங்குன்றம் செல்ல பேருந்து ஏற முடியுமா என்பதே சந்தேகம்தான்-அதிலும் சின்னஞ் சிறார்களை கட்டி மேய்த்துக் கொண்டு!!)
அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி தாத்தா எங்களை அருகில் அழைத்தார்கள். அதற்குள் குச்சி மிட்டாயை உண்டு முடிக்காத பாலாவைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்கு அதைப் பறிக்க முயல, குரங்கிடம் தரமுடியாது என பாலா விவகார விவாதம் நடத்த, தாத்தா அதைத் தூக்கி எறியச் சொன்னார்கள். எறிந்துவிட்டு
ஓவென பாலா அழ ஆரம்பிக்க நாங்கள் அனைவரும் மருண்டு தாத்தா பின்னால் ஒதுங்கினோம்.
உருவில் பெரிய வானரத்தலைவர் ஒருவர் தலைமை வகிக்க எதிரில் வந்து சுற்றிவளைத்தது அந்தப் படை. தாத்தா பாறைத் தரையில் அமர்ந்து கொள்ள எதிர்கட்சித் தலைவரும் எதிரில் அமர்ந்தார். 'கிர்ர்' என்றார் எ.க.தலைவர். தாத்தா 'என்ன வேண்டும்?' என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள். மேலும் அருகில் வந்து தாத்தாவைச் சுற்றிலும் உற்றுப் பார்த்தார் எ.க.தலைவர்.
தாத்தா தன் சட்டைப்பைக்குள் கையை விட்டு சில்லரைக்காசுகளை எடுத்துக்காட்டி, 'இதுதான் இருக்கிறது, வேண்டுமா?' என்றார்கள். பக்கத்தில் இருந்த மந்தி(ரி)கள் தாத்தா கையை ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தனர். எ.க.தலைவர் காசைக் கையில் எடுத்து முகர்ந்து பார்த்து திருப்பி வைத்துவிட்டார். அவர்கள் நாட்டில் அந்நியச் செலாவணி செல்லாது போலும். மீண்டும் ஒருமுறை 'கிர்ர்..' என்று கட்டளையிட்டுவிட்டு வெளிநடப்பு செய்தார் தலைவர். 'ஐயா சொல்லிட்டாருன்னு வுடறோம். இல்லன்னா நடக்கறதே வேற..' என்று ஆளாளுக்கு ஒரு பார்வை எங்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தது குரங்கணி. அத்தனைக்கும் நடுவே மிட்டாய் வழிப்பறிக்கு நீதி கிடைக்காமல் அழுது கொண்டிருந்தார் நம் இளம் நாயகன் பாலா. இன்னொரு மிட்டாய் வாங்கித் தருவதாய் இன்னுமொரு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி மலையிறக்கினார்கள் தாத்தா. இத்தனை கலவரத்திலும் ரம்யா கையில் பத்திரமாய் இருந்தது உறை பிரிக்காத குச்சி மிட்டாய்.

ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தால், நல்ல நாளும் திருநாளுமாய், ஆளும் பேரும் வரும் நாளில், பிள்ளைகள் அனைத்தையும் கூட்டிக் கொண்டு காணாமல் போனதற்கு தாத்தாவிற்கு ஒரு சிறப்பு அர்ச்சனை நடந்தது. அப்படியாய் ஒரு தீபாவளி.
(இந்தப் பதிவுக்குத் தகவல்கள் சரிபார்த்து திருத்தங்கள் கூறிய தங்கைக்கு special thanks)
And special mention - Ramya RavindranJeyasree SureshRajesh Balasubramanian BDevi VijayBala Krishnan and all monkeys of TPK 😄

சற்குரு - தாத்தா - 26
மரண வாயிலில் வாழ்வெனும் போது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாய் உருமாறி உயிர்வாழ்வைத் தொடர்கிறது.
ஒருமுறை இவ்விதமாய் போர்க்காலத்தில் நடந்த நிகழ்வு - குண்டு வீச்சில் வேரோடு பறிக்கப்பட்ட ஒரு மரம் பறந்து சென்று வேறு ஒரு இடத்தில் குழியில் விழுந்தது. சில நாட்களில் அது அங்கேயே வேர் ஊன்றி துளிர்க்கவும் செய்தது. நிலம் பெயர்ந்து வீழ்ந்த இடத்தில் வேறூன்றிய மரம் போல ஒருசிலர் புலம் பெயர்ந்த நிலத்தில் காலூன்றத் தொடங்கினார்கள்.
நீர் அற்ற நிலத்தில் நிற்கும் மரங்கள் கண்ணுக்குப் புலனாகாது பூமிக்கடியில் பல அடிகள் நீர் தேடி வேர்க்கரம் நீட்டுவதும் இயற்கைதானே. இருத்தலின் தேவைதானே உயிர்களை செலுத்துகிறது. பிழைத்து இருத்தலா பிழையாது இருத்தலா பிழைத்தல் என்ற கேள்விக்கு, பிழையாது பிழைத்திருந்து பதிலிறுத்தோர் வெகுசிலரே. அதற்கு தெய்வமென்றோ, பாசமென்றோ, ஒழுக்கமென்றோ, நெறியென்றோ ஆணிவேர் ஆழ இருக்க வேண்டும். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் பசுமை தழைக்கச் செய்யும் நீரோட்டம் வேண்டும்.
சுற்றத்திடமிருந்து எந்தத் தகவலுமின்றி தனித்து விடப்பட்ட பலரும் அங்கு துணையைத் தேடி வாழ்வமைத்துக் கொள்ளவும் தலைப்பட்டனர். அந்த உறவுகள் நிரந்தரமா தற்காலிகமா என்பது வாழ்வுக்கும் அதே கேள்வி எழும்பியிருந்த அன்றைய நிலையில் அர்த்தமற்று இருந்திருக்கலாம்.
விதையின் வீர்யம் விதியின் கைகளில் விண்ணவர்களால், இயற்கையால் சோதிக்கப்படும்போது தெரிகிறது. தந்தையிடம் கண்டதும் கற்றதும் அங்கு கைவந்தது தாத்தாவுக்கு. 'உறுதியான உள்ளம் கைவர உடலினை உறுதிசெய். உடல் வில்லென வளைய மனதை அசையாச் சுடரென நிலைநிறுத்து. யாருமற்ற ஏகாந்த வாழ்வு யோக சாதனத்துக்கு ஏற்றது. கசக்கும் தனிமையை தவமாக்கு' - இவ்விதமாய் சுயகட்டளைகள் விதித்துக் கொண்டு, அதிகாலை எழுந்து யோகாசனப் பயிற்சியும் தியானமும் அன்றாட வழக்கமாய் பயின்று உடல் வன்மையும் மனத் திண்மையும் வளர்த்துக் கொள்ள முற்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் கொண்ட பல நெறிமுறைகள் வாழ்வின் இறுதி வரை கடைப்பிடிக்கும் நித்திய வழிகளாயிற்று. தனது உயிர்பிரியும் வேளையை வகுத்துக் கொண்ட பீஷ்ம பிதாமகர் போல, தனது இறுதி நாட்கள் ஒருநாளும் படுக்கையில் வீழாது போய்விட வேண்டுமென்ற தாத்தாவின் நெஞ்சுரம் அவ்வண்ணமே நிகழ்வதற்கும் இந்த நெறிமுறைகளே பெருமளவு வழிவகுத்தது - அனாயாசேன மரணம்!!
இப்படியாகத் தனது கர்மபூமிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தவரை விழியறியாக் காலம் கவனித்துக் கொண்டுதானிருந்தது. நமது தீவிரமான தேடலை பிரபஞ்ச சக்திகள் நிறைவேற்ற முனையும் என்பதற்கிணங்க, நாணிழுத்த வில்லென கூரெழுந்த அம்பென தயாராகி வந்தவரை களம் கொண்டு செல்ல காலம் முடிவு செய்தது.


சற்குரு - தாத்தா - 27
Fast forward. எனது கல்லூரி நாட்கள். காலம் எந்தக் கரையிலும் நிற்காத நதி. எதையும் விழுங்கிவிட்டு சுவடின்றிக் கடந்து செல்லும். தாத்தா மறைந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டன. இறுதியாண்டு ப்ராஜெக்ட் புத்தகங்கள் ஆறு பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும். நல்ல அச்சகம் தேடிய போது செக்கானூரணியில் ஒன்று இருப்பதாகவும், செய்யும் வேலை மிகவும் திருத்தமாக இருப்பதாகவும் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். வள்ளியென பெயர் பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி மனதுள். மாடியில் இருந்தது அச்சகம். மேலே படி ஏறிச்சென்று அச்சக உரிமையாளரிடம், எனது ப்ராஜெக்ட் தொடர்பான குறுந்தகடுகளை ஒப்படைத்துவிட்டு, அதன் வடிவமைப்பு குறித்து சில தகவல்களும் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அவர் என் முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தார்.அறையெங்கும் காகித மணம் - ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் நிற்பது போலிருந்தது. கட்டணச் சீட்டு எழுதுவதற்கு முகவரி கேட்டார்; கூறினேன். எழுதிக் கொண்டிருந்தவர், நான் 'செல்வ நிலையம்' என்றதும், எழுதுவதை நிறுத்தி விட்டு முகத்தைப் பார்த்தார். 'செல்வ நிலையம் தாத்தாவுக்கு நீங்கள்..' என்று இழுத்தார்.. 'அந்தத் தாத்தாவின் முதல் பேத்தி நான்..' என்று முடிப்பதற்கு முன்னதாகவே முகம் மலர்ந்து விட்டது. கீழேயே இணைந்திருந்த தன் வீட்டை நோக்கி மனைவியைப் பெயர் சொல்லி அழைத்தார்.
'உக்காருங்க, அதான் வந்ததுலருந்து பாத்துட்டே இருந்தேன். தெரிஞ்ச முகமா இருக்கேன்னு. நல்லா இருக்கீங்களா? நானும் colonyதான்.' எங்கள் வீடிருக்கும் தெருவின், அடுத்த தெருவின் பெயர் சொல்லி அவர் வளர்ந்த வீட்டின் அடையாளம் சொன்னார். 'என்னோட life, இந்தக் கடை எல்லாமே நல்லா அமையக் காரணம் உங்க தாத்தாதான்' என்றார் குரல் நெகிழ. அவர் மனைவியும் மேலே வர 'இவங்க யார் தெரியுதா? நம்ம செல்வநிலையம் தாத்தாவின் பேத்தி, final year projectக்கு வந்திருக்காங்க' என்றார். அவர் மனைவியும் முகம் மலர, 'உட்காருப்பா, காபியாவது சாப்பிட்டுத்தான் போகனும்' என்றார்கள். இருவரும் அகமும் முகமும் மலரத் தங்கள் கதையைக் கூறினார்கள்.
தனது பள்ளி நாட்கள் முதலே, தாத்தா தன்னை அவ்வப்போது கல்வி குறித்து விசாரித்ததும் வழிநடத்தியதும் குறித்துக் கூறினார். 'எனக்கு மட்டும் இல்லப்பா, colonyல நிறைய பேருக்கு நல்ல friend,philosopher and guide தாத்தா; எத்தனை நாள் அந்தத் திண்ணையிலும் வேப்பமர நிழலிலும் பேசியிருக்கோம்' - தாத்தாவோடு பேசிய நாட்களின் வேப்பமரக் காற்றின் குளுமை அவருள்ளும் நிறைந்திருந்து பேச்சில் தவழ்ந்தது.
படிப்பு முடிந்து, தனது காதல் திருமணமும் முடிந்து, அவர்கள் இருவர் குடும்பமும் பாராமுகமாய் இருந்த காலம்; பல நாட்கள் colonyக்குள் அவர் வராமல் இருந்த நாட்களில் ஒரு நாள். எங்கோ செல்லும் வழியில் தாத்தா அவரை சந்தித்திருக்கிறார்கள். பின்னர் ஒருநாள் காலை வேளை நடையின் போது, அவர் அப்போது தங்கியிருந்த அறைக்குச் சென்று, பல மணித்துளிகள் பேசியிருக்கிறார்கள். அது குறித்து அகம் பொங்கக் கூறினார்.
பல்கலைக்கழகத்துக்கு எதிரில் ஒரு சிறு வீடு பிடித்து Job typing செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவரை சந்தித்து 'இந்த வருமானத்தில் எவ்வளவு நாள் குடும்பம் நடத்த இயலும்? இருவருக்குமான எதிர்காலத் திட்டமென்ன? கையில் காசு இல்லையெனில் எவ்வளவு சிறந்த இல்லறமும் கசந்து போகும், ஏற்கனவே எதிர்ப்பைக் காட்டும் உறவுகள் முன் மேலும் தலை குனிய நேரிடும். உன்னிடம் திறமையும், சிறந்த பண்புகளும், உழைக்கும் உறுதியும் இருக்கிறது. அடுத்தபடி என்ன செய்ய முடியும் என்று முன்னால் நோக்கு' என்று பேசியதை நினைவுகூர்ந்தார். கையிருப்பு நிலை குறித்தும் எதிர்காலக் கனவுகள் இருந்தும், அதில் உள்ள மறை இடர்கள் குறித்தும் தான் மனம் கலங்கியதும், அதற்கு உற்சாகமூட்டி, 'தெளிவான தொலைநோக்கும், குறிக்கோளும் இருக்கும்போது தைரியமாய் அடியெடுத்து வை' எனச் சொல்லி, "Success often comes to those who dare and act" என்று தாத்தா கூறியிருக்கிறார்கள். அந்த நாளே, தன் மீது தாத்தா காட்டிய அந்த நம்பிக்கையே தனது வாழ்வில் முக்கியமான திருப்புமுனை என்று அவர் சொல்லும் போது, அந்த நாளுக்கு அவர் சென்று விட்டதை, பளபளத்த அவர்களது இருவர் விழிகளும் சொல்லியது. பல்கலைக்கழகத்துக்கு எதிரே அந்த சிறிய வீட்டுக்கு ஒருமுறை தாத்தா வந்த போது, உடன் ஒரு சின்னப் பெண் வந்தது நினைவிருக்கிறதா என்று சிரிப்போடு கேட்டேன். 'ஓ அந்த பொண்ணுதான் ப்ராஜெக்ட் செய்ய வந்திருக்கா' என்று அவரும் சிரித்தார்.
அந்த சந்திப்பு, நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு காலை நேர நடையில் போன இடம். அன்று எனக்கு ஏதும் பெரிதாய் புரியவில்லை. அன்று அந்த அறை வாசலில் நாற்காலியில் காலை இளம் வெயில் சாய்ந்தாடிக்கொண்டிருந்தது. அதனோடு விளையாடிக் கொண்டிருந்தேன்.
தான் செல்லும் பாதையில், செடி கொடிகளை நாற்றுப் படுகையை தலை தடவிச் செல்லும் தென்றல் போல, வாழும் ஒவ்வொரு நாளும் உடன் வரும் மனிதர்களை ஏதோ ஒரு சிறிய விதத்திலேனும் ஊக்குவித்து, பெரிய பெரிய மாற்றங்களுக்கும் வித்திட்டுக் கொண்டே சென்றிருக்கிறார்கள், யாருக்கும் எந்த விளம்பரமும் இன்றி; எந்தக் கைம்மாறும் பாராட்டும் எதிர்பாராது.
அனிச்சையாய் இது போன்ற அறிமுகமில்லா மனிதர்கள், பல சந்திப்புகளில், 'நாகமலை, வீதியின் பெயர், வேப்பமரம் நிற்கும் வீடு' என்றதும் 'தாத்தாவுக்கு நீங்கள் என்ன உறவு?' என்று கேட்கும் கேள்விகளும், அதைத் தொடர்ந்து தாத்தா அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய நல்ல தாக்கமும் - ரயில் பயணத்தில், கோவில்களில் என எங்கெங்கோ தாத்தாவின் தரிசனம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது; இருக்கிறது. இத்தகைய பிரபல்யத்திற்கு தாத்தாவிடம் அன்று இருந்தது உயர்பதவியோ பெருஞ்செல்வமோ ஆள்பலமோ ஏதுமல்ல. ஒரு மனிதன் அமரத்துவம் பெறுவதற்குத் தேவை வேறொன்று. மனிதம் - சகமனிதர்கள் மீது வைக்கும் அக்கறை, நம்பிக்கை, நேசம். அந்த நேசத்தோடு பிணைத்த உறவுகள் காலம் கடந்தும் உறுதியாய் நிரந்தரமாகின்றன.
சொந்த வாழ்வில் தான் வாழ்ந்த தளத்தில் இருந்து, பல அடிகள் கீழ்மையாய் நடந்து கொண்ட பலரையும் பார்க்க நேர்ந்த போதும், சோதனைகள் மீண்டும் மீண்டும் வந்தபோதும், தாத்தா அந்த தருணத்தில் விசனப்பட்டதுண்டு; எனினும் அதிலேயே உழன்றது இல்லை; ஒட்டுமொத்தமாய் மனிதர்கள் மீது கசப்பாக ஒரு வார்த்தையும் சொல்லாத , எதிர்மறைக் கருத்துகளும் உருவாக்கிக் கொள்ளாத eternal optimism தாத்தாவுடையது.
'செல்வமில்லையென்று என்னை யாரும் கண்டு கொள்வதில்லை, என்னை யாரும் மதிப்பதே இல்லை' என்பதெல்லாம் தன் மீதான சுய மதிப்பு குறையும் போது பிறர்கருத்துக்கு நாம் கொடுக்கும் அளவு கடந்த முக்கியத்துவமே. உலகே நம்மை மதிக்கவில்லையென, நாமே ஒவ்வொன்றின் முதுகிலும் ஏற்றிப் பார்க்கும் தற்குறிப்பேற்றமே. இதுபோல நம் மனதுள் நாம் நிகழ்த்தும் negative conversations, நம்மை பின்னுக்குத் தள்ளி கீழ்மையுள் உழலச் செய்யும் என்பதே தாத்தாவின் அழுத்தமான கருத்து. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோ, பிறர் குறித்த எதிர்மறைக் கருத்துகளோ, வேடிக்கையாக சொல்வதாகவே இருந்தாலும், அது நமக்குள் விதை ஊன்றி வளரும் தன்மை கொண்ட நச்சு விதை, அதைக் கண்டவுடன் களைந்து விடவேண்டும் என்பதே பலமுறை தாத்தா கூறிய personal கீதை.
உள்ளுக்குள் தன்னை உணர்ந்து உயர்வாய் நின்றிருப்போருக்கு, புற உலகின் அவமதிப்புகளோ சிறுமைகளோ கடந்து செல்லும் பாதையின் முள்ளே; பிடுங்கி எறிந்துவிட்டு முன்னே செல்ல பாதை விரியும் அகலமாய் ராஜபாட்டையாய்;
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா.. அன்பே சிவம் அன்பே சிவம்..

22 வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன - தாத்தா நினைவு தினம் இன்று(21/03)!!
சற்குரு - தாத்தா - 28
1942-43: வறண்டிருந்த பாலை நிலத்தில் புது வெள்ளமெனப் பாய்ந்தது சுபாஷ் சந்திர போஸ் எனும் மாகங்கை. அடிமைத் தளையுண்ட அனைத்து இந்தியரையும் அழியாப் பெருநெருப்பெனக் கிளறியது அந்தப் புயற்காற்று. கீழ்மையின் பிடியில் புழுவென உழன்றவர்க்கும் புத்துயிர் கொடுத்த மகாசக்தி. ஜப்பானிய ஆட்சியிலிருந்த கிழக்காசிய நாடுகளெங்கும் பரவி ஏறியது வேள்வித்தீ.. சோம்பிக் கிடந்த நெஞ்சங்களை, இதுவே முடிவென விதிக்குத் தலைநீட்டியிருந்த பலியாடுகளை உயிர்த்தெழுப்பி சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் நேதாஜி.
இது தொடர்பான எனது பதிவுக்கு
https://www.facebook.com/subhasree.sundaram/posts/10207570482837367
சுபாஷ் படைக்கு நிதி திரட்டி உதவலாம் என்ற சந்தர்ப்பம் நேர்ந்ததும், அனைவருக்கும் தங்கள் பங்கை நாட்டிற்கு செய்யலாம் என்ற உந்துதல் உருவாகியது. மலேயாவில் அவ்விதம் நடந்த நிதி திரட்டும் நிகழ்வில், நாடகம் போடலாமென தாத்தா மற்றும் நண்பர்கள் முடிவெடுத்தனர். நாடகம் மக்களைக் கவர்ந்திழுப்பதாகவும் இருக்க வேண்டும், நேதாஜியின் படைதிரட்டுதலுக்கு உதவியாக ஆள்பலமோ பணபலமோ சேர்ப்பதாகவும் அமைய வேண்டும். என்ன நாடகம் போடலாம் என யோசித்தனர். வாழ்வில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய ஒவ்வொரு அறச் சிக்கலுக்கும் வினா எழுப்பி விடையும் அளிக்கும் கீதையே பொருத்தமாகப் பட்டது. அதுவரை பாரதம் கண்டிராத போர்க்களத்தில், தர்மத்தைக் காக்கும் பொருட்டு அவரவர் ஆற்ற வேண்டிய கடமையை நினைவூட்டும், கர்மபூமியில் தலைசிறந்த வீரனுக்கும் ஏற்படக்கூடிய ஆயிரம் சஞ்சலங்களுக்கும், அவனது கேள்விகள் வாயிலாய் மானிடத் திரளுக்கே பதில் அளிப்பதாக கண்ணன் கூறிய மொழிகளுமாய் குருக்ஷேத்திரம் நாடகக் களமாய் முடிவு செய்யப்பட்டது.
கீதையின் நாயகனாய் நம் கதையின் நாயகன் - ஆம், தாத்தா கண்ணனாய் வேடமிட்டு மயிற்பீலி குழல் சூடி, மேடையேறினார்கள்.
'தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போது நான் யுகம் தோறும் அவதரிப்பேன்' என்று கண்ணன் உரைக்க, அது கண்ணன் மொழியா மேடையில் அமர்ந்த சுபாஷின் உறுதிமொழியா - என்ற மயக்கில் முழுநிலவு கண்டெழும் கடலலையாய் கூட்டம் ஆர்ப்பரித்தது.
நாடகம் முடிந்ததும் சுபாஷ் மேடையேறினார். இந்தியாவின் நிலை குறித்தும் அதை விடுவிக்க உயிர் ஈந்த எண்ணற்றவர்கள் குறித்தும் பேசினார். 'நீங்கள் உங்கள் ரத்தத்தை எனக்கு அளியுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்' என்று வாக்களித்தார். சுதந்திர வேள்வியில் ஒவ்வொருவரும் இயன்ற வகையில் ஈடுபடுவது கடமை என்று உணர்வுகளைத் தட்டி எழுப்பினார். 'உங்கள் ஒவ்வொருவரையும் அன்னை பாரதமாதா நம்பி இருக்கிறாள். அன்னையை மீட்க வாருங்கள்' என்று குரல் கொடுத்தார்.
அன்றெழுந்த உணர்ச்சி வெள்ளத்தில், ஒற்றை மனிதன் ஏற்படுத்திய ரசவாத மாற்றத்தில், மக்கள் மனதில் புரட்சி விதை வேரூன்றியது நன்கு தெரிந்தது, மானுடனுக்குள் உறையும் தேவனின் முகம் தெரிந்தது. அலை அலையாய் முன்வந்து நிதி வழங்கியோர் எத்தனை பேர்! காது கையிலிருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்த பெண்கள் எத்தனை பேர்!! வீடு வாசல் என சொத்து முழுவதையும் நேதாஜி இயக்கத்துக்கு எழுதி வைத்த செல்வந்தர்கள் எத்தனை பேர்!! என்னிடம் இருப்பது இந்த உயிரும் உடலும் தான் எனப் படை சேர்ந்தோர் எத்தனை பேர்!! ரத்தத்தால் கையெழுத்திட்டோர் எத்தனை பேர்!! உணர்ச்சிப் புயல் வீசியது.
ஒப்பனை கலைக்கப் போகாது, சுபாஷ் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா கண்ணீர் வடிய மேடையேறினார்கள் கையெழுத்திட.
'நாட்டு விடுதலைக்காக இந்த உடலையும் உயிரையும் அர்ப்பணிப்பேன்' என உறுதிமொழியில் கையெழுத்திட, பார்த்தனுக்கு கீதை சொன்ன பார்த்தசாரதியாய், பரந்தாமனாய் தாத்தா மேடையேற, சுபாஷ் அதைப் பார்த்து விட்டு கிருஷ்ண பரமாத்வே நம் பக்கம் இருக்கும் போது, வெற்றி நமதே என உரக்க முழங்கினார்.
அரங்கம் அதிர்ந்தது!!!
(நேதாஜியை மீட்பராய் இரட்சகராய்ப் பார்த்த அன்றைய மக்கள் மனநிலையை 'Lord Krishna of the moment' எனத் தலைப்பிட்டு பதிவு செய்திருந்தது அன்றைய நாளிதழான Syonan Sinbun - photo attached)



சற்குரு - தாத்தா - 29
ஆறுமுகநேரிக்குப் பிறகு ராமநாதபுரம். எனது எட்டாம் வகுப்பு. உலக வரலாறும் புவியியலும் ஏறக்குறைய 50பாடங்களுக்கும் மேல் இருந்தது சமூகவியலில். வரலாறும் புவியியலும் தாத்தாவுக்கு மிகவும் விருப்பப்பாடம். உலகநாடுகள் அனைத்தின் தலைநகரம், நாணயம், மொழி, முக்கிய ஆறுகள், ஊர்கள், கணிமவளம், தலைவர்கள், நடப்பு செய்திகள் என அனைத்தும் ஏதோ 'கலெக்டர் படிப்பு' படிப்பது போல உள்ளே ஏறும். நிலவொளியில் நனைந்து கொண்டு, தாத்தாவுடன் கதை போல உலகம் படித்த கனாக் காலம்.
மாலைதோறும் வீட்டின் சிறு பலகணியில் அமர்ந்து, நானும் தாத்தாவும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அப்பத்தாவும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழ்ப்பாடத்தில் மதுரையின் சிறப்பைக் கூறும் 'கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல் காணும்' பாடல் தாத்தா அப்பத்தா இருவருக்கும் பிடித்த பாடல். அந்தப் பாட்டைத் தொடர்ந்து, சிறுமலைத் தோட்டத்தில் விளைவது குறித்தும், மலை வாழைப்பழம் குறித்தும், தாத்தா உற்சாகமாய் பேசத்தொடங்க, எசப்பாட்டுப் போல அப்பத்தா தனது பிறந்தவீட்டுப் பெருமையையும், பசளையின் கதிரறுப்பு காலத்தின் நிகழ்வுகளையும் கூற, இடையிடையே என்றேனும் நான் பாடமும் படித்ததுண்டு.
தமிழ்ப்பாடத்தில், ராமநாதபுரத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் தாயுமானவர் சமாதி அடைந்தார் என வந்தது. அடுத்த நாள் அதைத் தேடிக் கண்டு பிடித்து என்னையும் அழைத்துச் சென்றார்கள் தாத்தா.
வேப்பமரங்கள் சூழ்ந்த சிறு தபோவனம். மயில்களும் முயல்களும் உலவிக் கொண்டிருக்க, உதிர்ந்தும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன பன்னீர் புஷ்பங்கள். அமைதியான சூழலுக்கு இடையே ஒரே குரலில் பலர் தாயுமானவர் பாடல்களைப் பாடத் துவங்கினர். நாங்களும் சென்று அமர, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த சிவம், மோனத்தில் மூழ்கிய தாத்தாவின் மனதுள் பரிபூரணமாய் நிறைந்ததாய்த் தோன்றியது.
தியானம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம். இருளை விரட்ட முயன்று, இருளைப் பெரிதாக்கிக் காட்டிய விளக்குகள் நிரம்பிய சாலை. ஆங்காங்கே தெருநாய்கள் தங்கள் சக்திக்கு மீறிக் குரைத்துக் கொண்டிருந்தன. தபோவனம் மனதில் நிரப்பிய அதிர்வுகளோடு ஏதும் பேசாமல் நடந்து கொண்டிருந்த தாத்தா, 'இதுபோல ஒரு இடத்தில் என் இறுதி நாட்கள் அமைதியாகக் கழியும் எனில் அது பெரும் பேறு' என்றார்கள். ஏனோ அந்தப் பேச்சு வருத்தத்தை அளிக்கவில்லை, அதுவே நல்ல முடிவாக இருக்கும் என்றே மனம் எண்ணியது. ஆனால் அந்த எண்ணத்துக்கு பயந்து, தாத்தா கரத்தை மேலும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

சற்குரு - தாத்தா - 30
இந்திய தேசிய ராணுவ நாட்கள்:
ஒவ்வொருவருக்கும் வாழ்வின் உச்சமாக ஒரு காலகட்டம் அமைவதுண்டு. அவ்விதமான தலைசிறந்த நாட்களாய் தாத்தா கருதியது, தன்னிகரற்ற தனிப்பெருந்தலைவர் நேதாஜியுடன் நேரிடையாகப் பணியாற்றிய அந்த நாட்கள். பாரத வரலாற்றின் முகடுகளைத் தொடும் நாட்களில் தன் வாழ்வின் சிகரங்களும் அமைவது எப்பேற்பட்ட கொடுப்பினை! நேதாஜியின் களப்பணிகளுக்கான நிதி நிர்வாகப் பொறுப்பும், கிழக்காசிய மக்களிடையே சுதந்திர வேட்கையையும் சுதந்திர பாரதத்துக்கு நேதாஜியின் கொள்கைகளையும் எடுத்து இயம்புவதுமான பணி (Finance Controller and Propagandist). என்னே ஒரு உன்னதமான வாய்ப்பு!
அதன் அருமை பெருமை உணராது, குழந்தை மனதுக்கே உரிய சந்தேகங்களுடன் - 'அவரை நேரில் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா தாத்தா?' என்ற எனது கேள்விக்கு - பெருமிதம் பொங்க, கை நீட்டும் தொலைவு காட்டி, 'இதோ, இவ்வளவு தொலைவில் அன்றாடம் காலையிலும் மாலையிலும் என்னைக் கடந்து செல்வார். பணி குறித்துப் பேசியதும், கைகுலுக்கியதும், ஊக்கமும் பாராட்டும் பெற்றதும், பலநூறு முறை வீரவணக்கம் செய்ததும் உண்டு' என்று சொல்லும் போது தாத்தா முகத்தில் சுடர் விடும் ஒளி - இன்று போல் கண் முன் நிற்கிறது.
சொந்த வாழ்வின் துயர்களைப் புறம் தள்ளி, தேசத்துக்காக உயிரையும் தரச் சித்தமாக்கப் படைக்களப் பயிற்சி. பர்மா வழியாக தில்லி செல்லப் புறப்பட்ட இரண்டு ரெஜிமெண்டுகளுக்கு அடுத்து, தாத்தா இருந்த படை, களம் காண்பதாய் திட்டம். இந்திய தேசிய ராணுவம் இந்திய பர்மா எல்லையில் நிகழ்த்திய தாக்குதலும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அந்தப் படையை முறியடிக்க ஆங்கிலேய அரசாங்கம் திணறியதும், தக்க சமயத்தில் உதவி தருவதாய் வாக்களித்திருந்த ஜப்பானியப் படைகள் பின்வாங்கியதும், மிகவும் அதீதமான மழைக்குப் பெயர் போன அப்பகுதியில் பருவ மழை அப்போது தீவிரமடைந்ததும் வரலாறு.
எதிர்பார்த்ததை விட அதிக தினங்கள் நீடித்த முற்றுகையால், படையினருக்கு ஒற்றை வேளை உணவு மட்டுமே எஞ்சிய நிலையிலும், காலரா, மலேரியா, ஜன்னி என நோய்த் தாக்குதல் தொடங்கிய நிலையிலும், INA படையின் ஒற்றை வீரனும் பின்வாங்கவோ மனம் தளரவோ இல்லை.
அந்தப் பின்னடைவு வந்த போதிலும் மனம் தளராத நேதாஜி , அடுத்த கட்ட நகர்வுக்குத் திட்டமிடத் தொடங்கினார். ஆங்கிலேயர் விழித்துக் கொண்டு, பர்மா எல்லையை மீண்டும் கைப்பற்றி, ஜப்பான் வசமிருந்த ரங்கூன் நோக்கி முன்னேறினர். ரங்கூனில் அப்போது ஜான்சி ராணி படையுடனும்(லஷ்மி சேகல் மற்றும் ஜானகி என்ற இளம்பெண்கள் தலைமையிலான INA மகளிர் படை) மற்றுமொரு அணியுடனும் தங்கியிருந்த நேதாஜியை பாதுகாப்புக் கருதி, தாய்லாந்து சென்று விடுமாறு அனைவரும் கூறினர்.('அந்தப் பெண்மணி லக்ஷ்மி செகல் போல நீ இருக்க வேண்டும், ஜான்சி ராணி, Joan of Arc என்றெல்லாம் நேதாஜியாலே பாராட்டப் பட்ட பெண் - இது குறித்துப் பேசும் போதெல்லாம் தாத்தா கூறிய மொழிகள். மேலும் அவர் குறித்த தகவல்கள் இந்தப் பதிவில் வாசிக்கலாம் https://www.facebook.com/notes/sfi-students-federation-of-india/dr-capt-lakshmi-sahgal-ina-a-revolutionary-life-of-struggle-sacrifice/429214980455600/)
ரங்கூன் எல்லையை சில மைல் தொலைவுகளில் நெருங்கிக் கொண்டிருந்தது ஆங்கிலேயப் படை. ஜப்பானியப் படையும் ரங்கூனில் இருந்து பின்வாங்கத் துவங்கியிருந்தது. ரங்கூனை வெள்ளையர் பிடிக்கையில் சுபாஷ் பிடிபட்டால் எல்லாம் குலைந்து விடுமென அனைவரும் அவரைக் கிளம்பும்படி நிர்பந்தித்தார்கள். சுபாஷ் பயணம் செய்ய விமானம் ஒன்று தருவதாக ஜப்பானியர் கூறினர். தனது படைக்கு நேர்வதே தனக்கும் நேரட்டும் எனக் கூறினார் அந்த உன்னதத் தலைவர். 'சராசரியாக பதினெட்டு வயதே நிரம்பிய மகளிர் படை, சுற்றத்தின் பாதுகாப்புகளை உதறி என் வாக்குறுதியை நம்பிக் களம் இறங்கிய படை, பகைவனை நேருக்கு நேர் முகம்நோக்க கொற்றவையென எழுந்த படை உடனிருக்க எது வரினும் அதை சேர்ந்தே எதிர்கொள்வோம்' என முடிவெடுத்தார்.
வேறு வழியின்றி அனைவரும் ஒப்புக் கொள்ள, தனது படைகளுடன் உலகின் மிக அதீத மழை பொழியும் அடர் காடுகளுக்கு இடையே தொடங்கினார் தாய்லாந்து நோக்கிய தனது நடைபயணத்தை. பகலெல்லாம் வான்வழித் தாக்குதலுக்குத் தப்பியும் இரவெல்லாம் நடந்தும், அனைவருக்குமான அணிவகுப்பு முறையிலேயே தானும் ஓர் எளிய படை வீரனாய் நடந்து சென்றார் - தலைவன் என்ற சொல்லுக்கே வழிகாட்டிய நேதாஜி. எல்லோருக்கும் ஒரு வேளை அளவு உணவுதான், எனினும் உற்சாகமாய் படையோடு அமர்ந்து, அதே வாழ்வைத் தானும் மேற்கொண்டு தனது அணியை மேலும் உரங்கொள்ளச் செய்தார். மூன்று மணி நேரத்தில் பறந்து செல்ல வாய்ப்பிருந்த போது, மூன்று கடினமான வாரங்கள் படைகளுடன் நடந்து தாய்லாந்து சென்று சேர்ந்தார்.
ஹிரோஷிமா தாக்குதலுக்குப் பின் ஜப்பான் நிலைகுலந்தது; பின்வாங்கியது. தனது INA இளம் படையினரை வான் வழித் தாக்குதல் முறைகளும், விமானத் தொழில் நுட்பமும் கற்க ஜப்பான் அனுப்பியிருந்த நேதாஜி, 'டோக்கியோ பாய்ஸ்' என்றழைக்கப்பட்ட அந்தக் குழுவை பத்திரமாய் மீட்க உத்தரவிட்டுவிட்டு, பாசக் கயிறாய் வந்திறங்கிய விமானத்தில் Saigonலிருந்து முடிவிலியை நோக்கிப் புறப்பட்டார்.
A.S.Aiyadurai, INA - Finance Controller & Propagandist

Col. Lakshmi Sahgal, INA - Jhansi Rani Regiment


சற்குரு - தாத்தா - 31
மீண்டும் தாராபுரம்
ராமநாதபுரத்தில் இருந்து அடுத்த வருடமே மாற்றலாகியது. மீண்டும் தாத்தாவுக்குப் பிடித்த தாராபுரம். விதியொன்று நிகழும் களமாக இம்முறை. மானிடர்க்கு முன்னோக்கும் விழி அருளாத இறை கருணை மிக்கது. தெரிந்தால் மாற்றி விட முடியாத போது முன்கூட்டிப் பார்த்து என்ன பயன்?
ஒன்பதாம் வகுப்பு. புதிய பள்ளியில் சேர்ந்த ஒரே வாரத்தில் புதிதாய் மற்றுமொரு பெண்ணும் பள்ளியில் சேர்ந்தாள். பயந்த சுபாவமும் மெல்லியல்பும் நிறைந்தவள். கருணையை போதிக்கும் ஏசு அடியார்கள் - இயல்பிலேயே வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிடும் குடும்பம். திருட்டுப் போன சைக்கிளைக் குறித்து, 'யாரோ இல்லாதவர்தானே எடுத்திருப்பார்' என இரங்கும் அவளுடைய தந்தை, கருணையே வடிவாய், அதற்கு மிக உகந்ததாய் செவிலியராய் சேவை செய்யும் தாய். அழகான அருமையான குடும்பம்.
அவள் அந்த வருடம் தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாறியிருந்தாள். பள்ளியில் வழி தவறிய ஆட்டுக்குட்டியாய் மருண்டு நின்றவள் - பார்த்த முதல் பார்வையிலேயே மனதில் இடம் பிடித்தாள். அன்று முதல் அந்த வருடம் முழுவதும் மாலையில் அவள் என்னுடன் வீட்டுக்கு வருவதும், சேர்ந்து படிப்பதும் வழக்கமாயிற்று.
இந்த முறையும் தாத்தாவோடும் சேர்ந்தே உருவாகி உறுதியானது அவளுடனான நட்பு. இந்த முறை ஒரு சிறு மாற்றம். நாங்கள் படிப்பதையும், ஆங்கிலத்தில் இருக்கும் அறிவியல் கணக்கு பாடங்களை, அவளுக்கு நான் தமிழில் விளக்குவதையும் அமைதியாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள் தாத்தா. இது அன்றாட வழக்கமாயிற்று.
அவர்கள் வீட்டிற்கு நடையின் போது நானும் தாத்தாவும் செல்வதும், அவளது தாய் தந்தையருக்கும் தாத்தாவை மிகவும் பிடித்துப் போனதும் அனிச்சையாய் நிகழ்ந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டின் முன்புறம் பெரிய மண்தரை. அம்மா கைங்கர்யத்தில் ஓரிரு மாதங்களில் வெறுமையாய் இருந்த மண்தரை பசுமை போர்த்தி மலர்ந்தது. யாருக்கும் காத்திராத காலநதி விரைவாய் சுழித்தோடிக் கொண்டிருந்தது.
வீட்டு வாசலில் செவ்வகமாய் பெரிய திண்ணை. அதில்தான் தாத்தா அமர்ந்திருப்பார்கள் நாள் முழுவதும்.
எத்தனையோ நிகழ்வுகள், நெகிழ்வுகள் கண்ட திண்ணை அது. நாட்கள் துளிகளாய் வழிந்து மாதங்கள் ஓட ஒன்பதாம் வகுப்பு முடிய ஓரிரு மாதங்களே இருந்தன. தாத்தா விரும்பியதுபோல மதுரைக்கிளைக்கு மாற்றல் வாங்க அப்பா முயற்சித்துப் பலனின்றி நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மிகுந்த சிரமத்தோடு, ஒரு கிராமப்புற வங்கிக் கிளைக்கு அப்பா அலைந்து கொண்டிருந்த நாட்கள்.
ஒரு நாள் அப்பா என்னிடம், 'உன் தோழியைப் போல நீயும் சைக்கிளில் பள்ளிக்குப் போ' என சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். அதை சாலையில் ஓட்ட பயந்து கொண்டிருந்த என்னைக் கண்டு தாத்தா, 'அச்சம் என்பது நேருக்கு நேர் நோக்காத வரைதான் பெரிதாய் இருக்கும். பயத்தை எதிர்கொள்ள அது சிறிதாய் காணாமல் போகும்' என என்னை சாலையில் ஓட்டச் சொல்லி, சாலை விதிகள், கையில் காட்ட வேண்டிய சமிஞ்ஞைகள் என அனைத்தும் கற்றுக் கொடுத்தார்கள் தாத்தா. இது நடந்தது ஒரு சனிக்கிழமை. நண்பகல். வீட்டு முன்னால் திண்ணையில் வெயில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. அருகே தாத்தா கண்களை மூடி மோனத்தில் அமர்ந்திருந்தார்கள். நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு தோழியின் வீட்டுக்கு சைக்கிள் பழகச் செல்கிறேன் எனக் கூறி விட்டு கிளம்பினேன். 'நானும் வரட்டுமா?' என்று கேட்டு தாத்தாவும் எழ, 'ஓய்வெடுங்கள். நான் மட்டும் செல்கிறேன்' என்ற என்னை விதி மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.
முதல் நாள் தாத்தா சஷ்டி விரதமிருந்து ஏதும் சாப்பிடாத நாள். அன்று மதியம் உணவுண்ணும் வேளை வீடு திரும்பினேன். வீட்டில் தாத்தா இல்லை. என்னைப் பார்த்ததும் 'தாத்தா உன்னைப் பார்க்க வரவில்லையா?' என்ற கேள்வியோடு அம்மா காத்திருந்தார்கள். நான் சென்றதும் சிறிது நேரத்தில் வெளியேறிச் சென்ற தாத்தா, மதியம் ஒரு மணி தாண்டியும் வீடு வரவில்லை. நேரமாக ஆக பதட்டம் ஏறியது. என்னைத் தேடி வந்திருக்கக் கூடுமோ என மீண்டும் தோழி வீடு வரை சென்றேன். அம்மா மற்றொரு புறம் தேடிச் சென்றார்கள். தோழியின் தம்பியரும் ஆளுக்கொரு புறம் தேடி அலைய, மனதில் ஏதோ ஒரு கலக்கம் இதற்குப் பிறகு பேசக் கிடைக்காதோ என.
பிறகு அப்பாவுக்குத் தகவல் அனுப்பி, அப்பா வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருந்தோம். மாலை நேரம் - காவல் நிலையத்திலிருந்து தகவல் வந்தது - 'யாரோ ஒருவர் நினைவிழந்து, சாலையில் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்று. தகவல் அறிந்து அப்பா விரைந்த போது, இதுவே இறுதியென மருத்துவர்கள் கூறினர். வெயிலில் சாலையில் மயங்கி விழுந்த தாத்தாவை, யாரோ ஒரு வக்கீல் பார்த்து விட்டு, சுதந்திர போராட்ட வீரர் என்ற அடையாள அட்டையைப் பார்த்து அதையே அடையாளமாக்கி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
உற்றாரை, நண்பர்களை, ஊராரை, சமூகத்தை என அனைவரையும் சொந்தமெனக் கருதிய தாத்தாவை சேர்த்திருந்த அரசு மருத்துவமனை ஏட்டில் எழுதியிருந்தது - 'உறவினர்கள் - யாருமில்லை'.
அடுத்த கட்டத்துக்குப் பறவை பறந்து சென்று கொண்டிருப்பதை ஒவ்வொன்றும் சொல்லிச் சென்றது. சூசகமாய் செய்தி காற்றில் கண்ணாமூச்சி ஆடும் தருணங்கள்.
பிறந்த கணம் முதல் ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசிய வாய், திருநீறு மணக்கும் சுட்டு விரலை விடாமல் பற்றியிருந்த கரம், அன்று ஏனோ 'ஓய்வெடுங்கள், நான் மட்டும் செல்கிறேன்' என்று சொன்னதையே இறுதிச் சொல்லாய் மாற்றி உயிர் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.



சற்குரு - தாத்தா - 32
1945: பேரிடி - பேரிடர் காக்க வந்த பெருந்தலைவர் நேதாஜியின் அகால முடிவு அனைவரையும் நிலைகுலையச் செய்தது. சிலகாலம் யாரும் அந்தச் செய்தியை நம்பவில்லை. ஆனால் 'இன்று வரை நேதாஜி உயிரோடிருக்கிறார்' என்ற கருத்தில் தாத்தாவுக்கு என்றும் உடன்பாடில்லை. 'இக்கட்டுகளைக் கடந்து செல்ல அன்று சிலகாலம் அவர் அஞ்ஞாதவாசம் இருந்திருக்கலாம், நெடுங்காலம் மறைந்திருக்க அந்த சூரியனால் இயலாது, உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஒரு நாள் வந்திருப்பார்' என்பதே தாத்தாவின் நம்பிக்கை.
எல்லையில் கைப்பற்றப்பட்ட இந்திய தேசிய ராணுவம் போர்க் குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வழக்கும், அதன் தீவிரமும், நாடெங்கும் பரவிவிட்ட ஆதரவும், இந்தியர்களால் ஆன ராணுவத்திலும் காவல்துறையிலும பெரும் பகுதி இந்திய தேசிய ராணுவத்தின் உணர்ச்சிகரமான போர்முழக்கங்களால் கிளர்ச்சியடைந்திருப்பதும் ஆட்சியாளர்களுக்குத் தெளிவாயிற்று. இனிமேலும் கிளர்ந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், இந்தியர்களைக் கொண்டே இந்தியர்களை ஒடுக்குவது இயலாதென்பதும் ஆங்கிலேயருக்குப் புரிய, சுதந்திரம் வழங்கும் முடிவு தீவிரமடைந்தது.
ஜப்பானியப் படை சரணடைந்ததும் மெல்ல மெல்லத் தகவல் தொடர்புகள் நிறுவப் பட்டன. அப்போது மலேயா போன்ற கிழக்காசிய நாடுகளில் ஒரு வானொலித் தகவல் ஒளிபரப்பு சேவை தொடங்கப்பட்டிருந்தது. உலகமகாயுத்தத்தில் பிழைத்து உயிரோடு இருப்பவர்கள், தங்கள் பெயரையும் ஊரையும் தெரிவித்து, இந்த ஊரைச் சேர்ந்த இன்னாருக்கென தாங்கள் உயிரோடிருக்கும் தகவல் தெரிவிக்கலாம். அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் ரேடியோப் பெட்டிகள் இல்லாத காலம். இருப்பினும் மேகத்தையும் காற்றையும் தூது விட்ட மனித இதயம் எவ்வண்ணமேனும் நேச நெஞ்சங்களுக்கு செய்தி சொல்லத் துடிப்பது இயல்பல்லவா.
அம்மை நகரில் தன் தந்தை பெயருக்கும் பசளையில் தனது மாமாவுக்கும் தாத்தா சொன்ன செய்தி வானொலியில் காற்றோடு வந்தது. இப்படி ஒரு தகவல் சேவை இருப்பதும் தெரியாது, அதைக் கேட்கவும் இல்லை இரு வீடுகளும்.உறவினர் ஒருவர் கேட்டுவிட்டு வந்து தகவல் சொன்னார். செய்திகேட்டு ஆனந்தக் கண்ணீருடன் உயிர்த்தெழுந்தனர் உற்றாரும் பெற்றோரும்.
அதன் பின்னரும் கப்பல் தொடர்பு சரிசெய்ய பலமாதங்களாயிற்று. தாத்தா தனது செட்டியார் நிறுவனப் பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைத்துக் கிளம்ப மாற்று ஆள் வருவதற்கும் தாமதமாயிற்று. எனினும் கருக்கிருட்டு கடந்து வரும் முதல் கீற்றுப்போல் கடிதத் தொடர்பு தொடங்கியது. அஞ்சல் பெட்டி சேர்ந்து அதுகாறும் அந்தரத்தில் தொங்கிய சில கடிதங்கள் இரு தரப்பிலும் காலம்தாழ்ந்து கைக்குக் கிட்டின.
நாட்டைக்காக்க நேதாஜியின் படை முகப்பில் தந்தை நின்றிருந்த செய்தி, ஐந்து வயது நிரம்பிய தனயனுக்கு சொல்லப்பட்டது. புகைப்படமாக மட்டுமே அறிமுகமாயிருந்த தந்தைக்கு 'ஜெய்ஹிந்த்' என ராணுவ வணக்கம் செய்வது மகனின் வழக்கமாயிற்று.
வண்ணங்கள் இழந்த மலேய வனவாசத்தில் வந்தது வசந்தம் - தந்தையிடமிருந்தும் தலைமகனாம் சிறுமகவிடம் இருந்தும் கடிதம் - என்னே ஒரு பரவசம். வழி மேல் விழி வைத்துக் கடிதம் வரும் வழி காத்திருந்தோருக்கே அதன் அருமை புரியும். அதுவும் இப்படி ஒரு வரிசுமந்து - "On seeing your photo, Velan poured kisses on it"

பக்கம் 1


பக்கம் 2

பக்கம் 3

சற்குரு - தாத்தா - 33
மாமதுரை:
தென்னன் புகழ் பாடும் அழகான தென்மதுரை
கரும்பும் இளநீரும் கண்திறந்து மடைபாயும்
கட்டுக் கலங்காணும் கதிர் உழக்கு நெல்காணும்
அறுதாள் அறுத்துவர மறுதாளும் பயிராகும்
அரிதாளின் அடியினிலே ஐங்கலந்தேன் கூடுகட்டும்
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
யானைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை -
தாத்தாவுக்கு மிகவும் பிடித்த பாடல், பள்ளியில் பாடத்தில் வந்த இந்த நாட்டுப்புறப் பாடலை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்பார்கள் தாத்தா.
பத்துப் பதினைந்து நாட்கள் வேறு ஊரில் வந்து தங்கிவிட்டால், செல்வ நிலையம் வீடு நினைவில் வந்து விடும். சில சமயம் கனவாகவும் வீடு தாத்தாவுக்கு செய்தி சொல்வதுண்டு; ஒருமுறை கிணற்று உறைக்குள் கூடுகட்டியிருக்கும் சிட்டுக்குருவி கிணற்றில் விழுந்திருப்பதாய் கனவு கண்டு, உடனே போக வேண்டும் என மறுநாளே கிளம்பிப் போனார்கள். அந்த முறை நிஜமாகவே குருவி விழுந்திருந்தது. அப்படி ஒரு மனதோடு உரையாடும் பந்தம் செல்வ நிலையத்தோடு. வேட்டியை மடித்துக் கொண்டு மாடிப் படியிலிருந்து நிழல் தரும் பரண் மேல் தாவி ஏறி வேப்பிலை சருகுகளைப் பெருக்கி அள்ளுவதும், வாசலில் ஒரு கல் இல்லாமல் தென்னந்துடைப்பத்தைக் கொண்டு விரவி எடுப்பதும், கிணற்றடி முழுதும் நீர் இறைத்து ஊற்றி சுத்தம் செய்வதுமாய் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிரம்பியிருக்கும் தாத்தா, வீட்டைப் பழநிமலை சந்நிதியாய் மாற்றி வைத்து, குத்துவிளக்கை பொன்னென ஒளிரச் செய்து, தினந்தோறும் வாசல் மிளிரக் கோலமிட்டு பொலியச் செய்த அப்பத்தா - இருவருடனும் தாராபுரத்தில் இருந்து பயணித்தோம். நினைவிழந்த நிலையிலிருந்த தாத்தாவுடன் (சரவணன்)அண்ணனும் (கண்ணன்)மாமாவும் உடன்வர மதுரை நோக்கிப் புறப்பட்டோம்.
ஒரு சிலதினங்கள் முன்னர் மாமா தாராபுரம் வந்தபோது தாத்தாவுடன் மிகவும் மனம்திறந்து பேசியிருந்ததை நினைவு கூறியபடி, மிக விரைவாக முடிவை நோக்கி நகரும் நிதர்சனத்தைத் தாளமுடியாமல் மாமாவும், தனது சிறுவயது முதலே தாத்தாவின் குருகுலவாசத்தில், அருகாமையில் இருந்த அண்ணனும் அன்று தாத்தாவை மடியில் சுமந்து வந்து மதுரை சேர்த்தார்கள். (சில பந்தங்கள் புறக்கண்களுக்கு விளங்காதது - தாத்தாவின் இறுதி மணித்துளிகளில் உடன்பயணித்த அண்ணனை 20 வருடங்களுக்குப் பிறகு அப்பாவின் இறுதி வினாடிகளிலும் கொண்டு சேர்த்தது விதியா இறையா..)
வரும்வழியில் அம்மை நகரில் செய்தி சொல்ல நுழைந்தால், தொலைவில் நடக்கும் துயர சம்பவத்தின் எதிரொலி போல், சிறு குழந்தையான தங்கைக்கும் ஒருநாளும் நிகழாத வண்ணம் குரங்கால் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
செல்வநிலையம் - உற்றார் உறவினர் குழுமியிருந்தனர்.
மறுநாள் காலையில் மகளென பாசம் கொண்ட மருத்துவர் வந்து நாடி பார்த்து இன்னும் சில நிமிடங்கள்தான் என்று சொல்ல, உறவினர் அனைவரும் குழுமியிருக்க பிரியமான பேத்திகளும் இளைய மகன் மருமகளும் நாகமலையில் கால்பதித்ததும் பறந்தது உயிர்ப்பறவை - ஓம் எனக் குவித்த உதடுகள் வழியாகவா? மேலேறிய விழிகள் வாயிலாகவா? அனைவர் கண் முன்னால் எத்திசையில் கொண்டு சென்றான் விதிக்கிறைவன்.
[தங்கை ஜெயஸ்ரீயின் வாய்மொழியில்: வாழ்வில் நம்மை பாதிக்கும் சிறு வயது நிகழ்வுகள் சில இருக்கும். அது போன்று எனை பாதித்த நிகழ்வு தாத்தாவின் மறைவு. அன்று சனிக்கிழமை தாத்தாவுக்கு உடல் நலமில்லை என செய்தி கிடைத்த போது அப்பா வேலை நிமித்தம் சென்னை சென்றிருக்க, அம்மா தன் பெருமதிப்புற்குரிய மாமாவை எண்ணி கண்கள் கலங்க, என்னையும் தங்கை ரம்யாவையும் அழைத்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து மதுரை புறப்பட்டார்கள். அப்பாவும் விஷயமறிந்து ஊர் திரும்ப, ஞாயிறு காலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கைபேசி இல்லாத அந்த காலத்தில், ஒரு பேருந்தில் ஏற, அதே பேருந்தில் அப்பாவும் அமர்ந்திருந்தார்கள். வீட்டை நெருங்க நெருங்க உறவினர்கள் நிறைந்த வீடு பதற்றத்தை விளைவித்தது. வீட்டினுள் நுழைந்ததும் தான் அப்பாவுக்கும் எங்களுக்கும் தாத்தா இறைவனடி சேர்ந்த விஷயமே தெரிந்தது. பேரதிர்ச்சியில் உறைந்தழுதோம். எப்போதும் பேத்திகளைக் கண்டதும் மலரும் தாத்தாவின் முகம் அன்று அசைவற்று இருந்தது. தாத்தா இல்லாத செல்வ நிலையம் தன் பொலிவை இழந்தது போல் அனைவரும் உணர்ந்தோம். தாத்தா மறைந்தாலும் இன்றும் நம் மனங்களில், நம் எண்ணங்களின் எழுச்சியில், உயர்ந்த சிந்தனைகளில் உலாவுகிறார்கள். என்ன காரியம் செய்தாலும் "இப்போது மட்டும் தாத்தா இருந்திருந்தால்.." என்ற எண்ணம் மேலோங்கத்தான் செய்கிறது. இறைவன் எமக்களித்த எங்கள் புதல்வனை எங்களது தாத்தாவே வந்து பிறந்ததாக கருதி மனநிறைவடைகிறோம். வாழும் வரை "அய்யாதுரை பிள்ளையின் பேத்தி" என்ற பெருமை ஒன்றே போதும். வாழ்க்கை பல்வேறு திசைகளில் பயணிக்கும் போதும் தாத்தா கற்றுத்தந்த values எப்போதும் வழிகாட்டும். Saluting him. ஜெய்ஹிந்த்..! ]
கூட்டம் கூடி அழுதது. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் தாத்தா செய்த மாயங்களை மாற்றங்களை சொல்லிச் சொல்லி அழுதனர். கடைசியாய் முகம் பார்க்கவும் வர இயலாது போன செல்ல மகளுக்காகவும் அழுதனர்.
ஊரெல்லாம் கூடி உரக்க அழுதாலும் சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டாலும் நீரினில் மூழ்கி மறந்திடும் நினைவல்லவே. ஏனோ கண்கள் வறண்டு மனம் அலையற்றுக் கிடந்தது.
"ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசையறுமின்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்
ஆசை விடவிட ஆனந்தந்தானே" - தாத்தா அடிக்கடி சொல்லும் மற்றொரு பாடல்.
எந்த ஆசையை விட வேண்டும்? இப்படி ஒரு மகானை மீண்டும் காணும் ஆசையையா? மீண்டும் அந்த விரல்கள் பற்றி உலகை வலம் வரும் ஆசையையா?
ஆசை அறுத்து ஆனந்த யாத்திரை புறப்பட்டது.

Prasanna Parthibhendran We couldnt afford the chn to mdu bus fare for the entire family to travel at that time...nagamalai vittu chennai pona first year.....the first death which impacts a lot....also the first death to which i m enquiring over the phone....thatha solli kuduthute thaan irunthrukanga kadaisi varai in one way or other...Peria thatha truly inspiring....

Vidhya Ravikumar Thaatha looks like shanmugam thaathaa in this pic...

Jdevi Pandian ஆசை அறுமின் ஆசை அறுமின் - num kudumbathin puthar magan num thatha

Aravindan Selvaraj If we could pass on few of his great traits to ourselves and our nextgen - that could be the biggest tribute and respect we could ever pay to him. You still live in all of us Thatha - as "பிதாமகர் ''!

Shanmuganathan Arunachalam எத்தனையோ முறை வாய் வழிச் செய்தியாய் நான் கேட்டிருந்தாலும்.. எழுத்து வடிவில் படிக்கும் போது.. மறுபடி காட்சி உயிர்த்தெழுகிறது. தேசியக் கொடி போர்த்தப்பட்டு வழியனுப்பப்படும் அந்த மகத்தான கௌரவம்.. அவர்கள் சுட்டிய வழியில் பயணித்த எனக்குமுண்டு...! எனக்குக் கிடைத்த கௌரவங்களுக்கும்.. கிடைக்கவிருக்கும் கௌரவங்களுக்கும்.. நானும் அப்பாவும் பற்றியிருந்த அவர்களின் சுட்டு விரலே காரணம்.. ஜெய் ஹிந்த்.!

Mahalakshmi Arunachalam திரு.சரவணக்குமார்....வெயில் ஜீரணித்து மண்ணுக்கு நிழல் தரும் மரம் போல எந்த வலியையும் தன் சிரிப்பால் திரை போட்டு வறுமை மறைத்து...Tictac homeservice..என்று ஆரம்பிக்க.,அதை தாத்தாவிடம் சொன்ன போது..நீ நன்றாய் வருவாயடா என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல்10.ரூபாய் கட்டி முதல் உறுப்பினராய் தன்னை சேர்த்துக் கொண்டு,..அன்று தாத்தா அந்த சுறுசுறுப்புக்குகொடுத்த அங்கீகாரம் ...என் இறுதிப்பயணம் வரை உன் Service தேவை என்று நெகிழ்ந்த நிமிடங்கள்...அதே போல் வேலு மாமா...கரிசனமும் கண்டிப்புமாய் துவளும் போதெல்லாம் தட்டிக்கொடுத்து தோள் நிமிர்த்திய அக்கறை...செல்வநிலையத்தை மாப்பிள்ளை வீடு என்று ஆக்கி ,.திருமணத்தில் காட்டிய ஆர்வம்.,..எட்ட நின்று வியந்திருக்கிறேன்...பலமுறை...!இன்றும் திரு.சரவணக்குமார் அடிக்கடி சொல்வது...தாத்தாவை மடியில் தலைவைத்து அணைத்து வண்டியில் வந்தது,..வேலு மாமாவின் இறுதியில் கை பிடித்து உடன் இருந்தது...அப்பா கடைசியாய் "நீங்கள் இருப்பது எனக்கு யானை பலம்."என்று சொன்னது...அங்கீகாரம் அவ்வளவு எளிதல்லவே...இந்த மூவரின் அங்கீகாரம்...ஒரு விழுது உரம் பிடித்து வேர் விட காரணமாய் இருந்து கொண்டிருக்கிறது...புறக்கண்களுக்கு விளங்காத சில பந்தங்களை தொலைவில் இருந்தாலும் புரிந்து கொண்ட உன் விசாலமான பார்வை...Brilliant dear....Thank you subbu

சற்குரு - தாத்தா - 34
1946: கப்பல் போக்குவரத்து துவங்கியது. மிக நீண்ட ஆறு வருடங்கள் கழித்து வந்தது விடியல்.
ஆறு வருடம் கழித்துத் தாயகம் திரும்பும் பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது. சிங்கப்பூர் வந்து பயண உரிமச் சீட்டும் அனுமதிக் கடிதமும் பெற்றுக் கொண்டு கப்பலேறினார்கள் தாத்தா. (காண்க: அனுமதிக் கடித புகைப்படம். இந்த Havelock Roadல் தான் நான் சிங்கப்பூர் வந்ததும் ஒரு மாதம் தங்கியிருந்தேன். தினசரி நாம் நடக்கும் பாதைகளில் ஒளிந்திருக்கும் கடந்தகால நிகழ்வுகள் - காணக் கண்கள் திறக்கும் வரை கிடைப்பதில்லை அதன் தரிசனம்)
மலேயாவிலிருந்து கப்பலில் சென்னை துறைமுகம் நோக்கி ஒரு வாரத்திற்கும் மேற்பட்ட பயணம். கப்பலின் அனைத்துத் தளங்களிலும் உற்சாகம் அலைபுரண்டது.
நீலம்..பச்சை.. கருப்பு என மாறி மாறி மாயம் காட்டியது எல்லையற்ற நீர்வெளி... மேலே அமைதியாய் இருந்தது கடல்பரப்பு. ஒளிந்திருந்தது ஆழமும் அதன்மடியில் கண்ணாமூச்சி ஆடும் அலைவீச்சும்..அன்னையையும் தந்தையையும் உடன்பிறந்தாரையும் உற்றாரையும் மனைவியையும் முகமறியா மகனையும் காணப்போகும் தருணத்தை எண்ணி எண்ணி ஆனந்த அலையாடும் மனது. கடல் மேல் இரவுகள் - இருள் மீது மேலும் கருமை பூசியது போன்ற காரிருள் கடந்தகாலமாய். எப்போதாவது ஒளிகோபுரமாய் மற்றொரு கப்பல் கடந்து செல்லும் எதிர்கால நம்பிக்கையாய். (தாத்தாவின் காலடிச்சுவடுகள் தேடி கோலாலம்பூர் பினாங் - கப்பல் வழிப் பயணம் சென்ற கடந்த மூன்று நாட்கள், தாத்தா விவரித்த கப்பல் பயணத்தை மனதுள் கொண்டு வந்து நிரப்பியது - look this space next week for further photos and blog on Penang)
பயணத்தின் நடுவில் தாத்தாவுக்கு கடும் ஜுரம். உடல் அனலாய்க் கொதித்தது. உணவுண்ணவும் நகர இயலாது, மேல் தளத்திற்கு வரவும் முடியாது, உடல்வலியோடு கடும் காய்ச்சலில் தனது அறையில் படுத்திருந்தார்கள்.
ஒருநாள் நண்பகலில் திடீரென மேல்தளத்தில் உற்சாகக் கூக்குரல்களின் ஒலி, கதவு திறந்து வந்த நண்பரோடு அறைக்குள் வந்து நுழைந்தது. நண்பர் 'அண்ணே மேல வந்து பாருங்க, கரை தெரியுது' என்று உரக்கக் கூவினார். உண்மையாகவே தாயகம் உயிரோடு திரும்பிவிட்டோம் என்று உள்ளம் பொங்கியது. தாத்தா எழ முயன்றார்கள் - உடல் தள்ளாடியது கடும் சுரத்தினாலும், அலைமோதிய உணர்ச்சியாலும்.
தாத்தாவை அள்ளித் தோளில் சேர்த்துக் கொண்டு தளர்ந்த கால்களோடு துவண்ட தாத்தாவை மேல் தளத்துக்கு கைத்தாங்கலாய் அழைத்து வந்தார் அந்த நண்பர். கடல்காற்று உடலில் மோதி அறைந்தது. தொலைவில் சென்னைப் பட்டணம் அடிவானில் தெரிந்தது. உணர்ச்சி வெள்ளம் கண் வழியே வழிந்தது.
"கடவுளே! என் தாயகம்! உன்னருளாலே நான் உயிரோடு கரை மீள்கிறேன் குறையின்றி, ஊனமின்றி, மனச்சுமைகளின்றி!! இது சத்தியம்! இந்த தருணம் சத்தியம்!! ஆயிரம் முறை மனம் நடித்து பார்த்த ஒத்திகை அல்ல இது." காய்ச்சலை மீறி உடல் உவகையால் நடுங்கியது. கப்பலில் எழுந்த உற்சாக ஒலி, அலைகளை மீறி வானைத் தொட்டது.
எத்தனை நூறு முறை இதைச் சொல்லும் போதும் தாத்தாவுக்கு உணர்ச்சி மேலிட்டுக் கண்கள் கலங்கும். இப்போதும் விமானம் தரையிறங்க முற்படும்போது ஒவ்வொரு முறையும் மெரீனாவின் அழகிய கடற்கரை கண்களுக்குத் தெரியும் போது, தாத்தா விவரித்த அந்தக் காட்சி என் கண்முன் விரியும் - I feel as if I was there in the ship on that memorable day.
எம் தலைவனை சுமந்து வந்த அந்தப் பெயர் தெரியாத தோள் கொடுத்த தோழன் யாரோ! அந்த உன்னத தருணங்களிலும் அதற்கு முந்தைய போர்முகங்களிலும் உடனிருந்த நட்புகள் எத்தனையோ!! எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்; அனிச்சையாய் மானுடம் மலர்ந்த முகடுகள்!! நிரந்தரமாய் ஆழ் தடம் பதித்து ஒரு மனிதனை வாழ்நாளுக்கும் புடம் போட்ட நெருப்புக் குளியல்கள்!!
எம் தலைவனைக் காத்து தோள்கொடுத்து உளம்சோரும் போது உடனிருந்த பெயர் தெரியாத அத்தனை கருணைகளுக்கும் நட்புகளுக்கும் உன்னதங்களுக்கும் எமது நன்றி. எங்கோ காற்று வெளியில் நிறைந்திருக்கும் உங்கள் அனைவரது நினைவுகளுக்கும், பெருமூச்சுகளுக்கும், புன்னகைகளுக்கும், எதிர்காலத்தின் - நிகழ்காலத்தின் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!! உங்கள் வலிகள் எங்களுக்கு மேடையமைத்துக் கொடுத்திருக்கின்றன.
அன்றிலிருந்து 70 ஆண்டுகள் கழித்து, இன்று விழுது இங்கு நிலம்தொடும் தருணம் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.
சதுப்பு நிலமாயும் நிணமும் கொலையுமாயும் இருந்த சிங்கப்பூர் இன்று உலகிலேயே சிங்காரமாய் மயனமைத்த மாய நகராய் செல்வ செழிப்பாய் மாறியிருக்கிறது. பினாங்கும் கோலாலம்பூரும் தடதடக்கும் இரயில்தடத்து அருகில் படபடக்கும் பட்டாம்பூச்சியென, இன்றைய பரபரப்பின் ஊடே எழுபத்தைந்து வருட நினைவுகள் பொதித்துக் காத்திருக்கிறது.
வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது.
அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது.


சற்குரு - தாத்தா - 35 இறுதிக்கனல்
21 மார்ச் 1946: கப்பல் கரை சேர்ந்தது.
கண்ணீர் பொங்க நிலத்தை முத்தமிட்டனர் கரைசேர்ந்த பலரும்.
ஆனந்த வெள்ளத்தில் நீந்தி மதுரையிலிருந்து வந்திருந்த தோழர்களுடன் தாத்தா மதுரை நோக்கிய ரயில் பயணம் மேற்கொண்டார்கள். கொடை ரோட்டில் ரயில் நிலையத்திலேயே உற்றார் உறவினர் வரவேற்பு. 'மதுரைக்குள் நம் வீடு வரை பேருந்து செல்கிறது' என்றெல்லாம் நவீன மாற்றங்களை நண்பர்கள் உற்சாகமாய் கூறிக் கொண்டே வந்தார்கள். தன் முகம் பாராது வளரும் மகனைக் காண, மன எழுச்சியோடு விரையும் தந்தை.
ஆறு வயது மகன் சிவசுந்தரவேலனுக்கு, தந்தை போல இந்திய தேசிய ராணுவ உடை தைத்து அணிவித்து அனைவரும் காத்திருந்தனர். வாசலில் வந்து இறங்கியதும் தாய் தந்தையும் தம்பி தங்கையரும் பழனி மலை தெய்வத்துக்கும், குலதெய்வக் கருப்பனுக்கும் நன்றி சொல்லிக் கண்ணீர் விட, முதன் முதலாய் அதுவரை கண்டிராத மகன் நேதாஜியின் ராணுவ உடையில் முன் வந்து, வீர வணக்கம் செலுத்தி, 'ஜெய்ஹிந்' என்று முதல் வணக்கம் சொன்னான். மகனை ஆரத்தழுவிக் கொண்டு மண்ணில் விண்ணைக் கண்டார்கள் அந்த மகான்.
சிவசுந்தரவேலன்

மிகச் சரியாக 48 வருடங்களுக்குப் பிறகு:
20 மார்ச் 1994: கப்பல் கரை சேர்ந்தது.
குலம் விளங்க மூத்த மகனாய்ப் பிறந்து, தம்பி தங்கையர் குடும்பங்களுக்கு எல்லாம் உற்ற துணையாய் திகழ்ந்து, நாட்டுக்கென களப்பணியில் முன் நின்று, சுற்றத்துக்கென, சமூகத்துக்கென, நட்புக்கென, பெயரறியா சகபயணிகளுக்கென, மனம் விரிந்த மலர், தன் பணி முடிந்தது என அமைதி கொண்டிருந்தது. எண்ணற்ற சுழல்களையும், சூறாவளிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து வந்த கப்பல் கரை சேர்ந்து விட்டது.
மயானத்தில் இறுதிச் சடங்குகளும் முடிந்து பூவுடலைத் தீ உண்ணத் தரும் தருணம். தகவலறிந்து மதுரை INA கிளையிலிருந்து மிகவும் வயதான தளர்ந்த ஒரு முதியவர் நேராக மயானக் கரை வந்து சேர்ந்தார். தடுமாறி நடந்து வந்து, இராணுவ வீரர்களுக்கே உரிய இறுதி அஞ்சலிக்காக தேசியக்கொடி ஒன்றைக் கொண்டு வந்து தாத்தா உடலின் மீது போர்த்தினார். தன் கால்களைச் சேர்த்து, உடலை விரைத்துக் குரலை உயர்த்தி வீர முழக்கமிட்டார். அந்தத் தளர்ந்த உடலுக்குள் அவ்வளவு திடமான ஜீவன் இருப்பதை நடுக்கமற்று உயர்ந்த அவர் குரல் உணர்த்திற்று. கூடியிருந்தோர் அனைவரையும் அவர் குரல் உலுக்கியது - 'ஜெய்ஹிந்'.
அதுவரை ஒரு துளியும் கலங்காதிருந்த மூத்த மகன் சிவசுந்தரவேலன், தனது தந்தைக்கும் தனக்குமான முதல் முழக்கம் வானதிர முழங்கவே உடைந்து அழுதார்.
காற்றில் அந்த நெருப்பு வீரவணக்கத்தையும் அனைவரது அஞ்சலியையும் ஏற்றுக் கொண்டு உயர எழுந்தது.
இன்றும் அனைவரது வாழ்விலும் இருள் சூழ்ந்த பாதைகளில் ஒளியேற்றிக் கொண்டுதானிருக்கிறது அந்த அருட்ஜோதிதெய்வம். தன்னலம் கருதாத அன்பினில், இளம் தலைமுறையை வழிநடத்தும் ஆசிரியர் மனதினில், விளம்பரங்கள் தேடாத கருணையில், பிறர் வாழ சிறு உதவியேனும் செய்யும் உள்ளங்களில், நேர்மை தவறாத மாண்பினில், நேர்மறை எண்ணங்கள் விதைக்கும் மனங்களில், நம்பிக்கை தளராத இறையாண்மையில் மிளிர்கிறது அந்த அருட்ஜோதி தெய்வம்.

மறுபடி மரணம்
மறுபடி ஐனனம்
இடையினில் இருளினில்
தேடல்தான் பயணம்..

சிலர் வழிகாட்டுவார்
பலர் நடைபோட்டிட -
சிலர் பலராகவே
அவர் வலிதாங்குவார்

பிறன் நலம்வாழ்ந்திடத்தன்
பிறவியை மாற்றுவார்
முள்முடி தாங்கியும்
முகமலர் காட்டுவார்

விறகொடு எரிவது
உடலது தானே
உடன்வரப் போவது
அவனருள் தானே

மண்ணொடு கலந்தபின்
எஞ்சுவதென்ன
மனதொடு கலந்திடும்
நினைவுகள்தானே

வெற்றுத் தாளொடு
பிறந்தவர் நாமே
எழுதுவோம் பாக்களை
அன்பொடு தினமே

தாளது ஒருதினம்
அவன்தாள் சேரும்
எழுதிய கவிதைகள்
மனதிடை வாழும்

அன்பது சிவமாம்
அன்பது தவமாம்
வாழ்வை நீட்டும்
அன்பின் கரமாம்..

அன்பே சிவம்! அன்பே சிவம்!!
(நிறைவு)


No comments:

Post a Comment